இங்குள்ள சிவனுக்கும், அம்மனுக்கும் அர்ச்சனை அபிஷேகம் செய்து வணங்குவது போல் சனீஸ்வர பகவானுக்கும் அபிஷேகம் செய்து நேர்த்திகடன் செலுத்துகின்றனர்.
தலபெருமை:
இங்குள்ள அம்மன் சன்னதியும், சிவனின் சன்னதியும் ஒரே நேர்கோட்டில் அமைந்திருப்பது இக்கோயிலின் சிறப்பு. அம்மன் சிவகாமசுந்தரி மேலிரு கரங்களில் தாமரை மலரையும், அட்சர மாலையையும் தாங்கி, கீழிரு கரங்களில் அபய, வரத முத்திரைகளுடன் தென்திசை நோக்கி அருள்பாலிக்கிறாள். இறைவன் லிங்கத் திருமேனியராக கிழக்கு நோக்கி அருள்பாலிக்கிறார். பிரம்மா, சரஸ்வதியரின் மணநாளில் வந்து அவர்களுக்கு ஆசி புரிந்து பின் இங்கமர்ந்த இத்தலத்து இறைவனும், இறைவியும் தம்பதியரின் பிரச்சனைகளைத் தீர்த்து வைத்து அருள்புரிகின்றனர்.
தல வரலாறு:
இங்கு தான், பலா மரப்பலகையில் மணைக்காலில் அமர்ந்து பிரம்மா, சரஸ்வதி தேவியை மணந்தார். அதனாலேயே இத்தலம் மணைக்கால் என்று அழைக்கப்பட்டு பின்னர் மருவி தற்போது மணக்கால் என்றானது. இத்தலத்திற்கு இப்பெயர் வர இன்னொரு காரணமும் உள்ளது. ராமமிஸ்வரர் என்றொரு புனிதர் இருந்தார். தன் குருவான உய்யக் கொண்டார் மீது அபார சக்திமிக்கவர் அவர். குருவுக்கு தொண்டு செய்வதையே மகாபாக்யமாகக் கருதினார். ஒரு சமயம், உய்யக்கொண்டாரின் புதல்விகள் இருவர் ஆற்றுக்குச் சென்று நீராடிவிட்டுத் திரும்பிக் கொண்டிருந்தனர். அது மழைக்காலம் என்பதால் பல இடங்களில் நீர் தேங்கி இருந்தது. பார்த்துப் பார்த்து நடந்தனர் அந்தச் சிறுமியர். ஓரிடத்தில் ஒருபுறம் சற்று பெரிய பள்ளமும், மறுபுறம் சேறும் சகதியுமாக இருந்ததைக் கண்டு, எப்படிக் கடப்பது எனப் புரியாமல் நின்றனர். அப்போது அந்தப் பக்கமாக வந்த ராமமிஸ்வரர் அந்தக் காட்சியைப் பார்த்தார். தமது குருவின் மகள்களின் தவிப்பை உணர்ந்த அவர் கொஞ்சமும் யோசிக்காமல் சட்டென்று அந்தச் சேற்றின் மேல் குப்புறப்படுத்தார். தமது முதுகில் நடந்து அதனைக் கடக்கும்படி அந்தச் சிறுமியிடம் சொன்னார். அவர்களும் அப்படியே நடந்து கடந்து சென்றனர். மணல் படிந்த அவர்களின் பாதச்சுவடுகள் அவரது முதுகில் பதிந்தன. குரு மீது அவருக்கு இருந்த அதீத மரியாதையையும், பக்தியையும் கண்ட மக்கள் அன்று முதல் அவரை மணல்கால் நம்பி என்றே அழைத்தனர். மணல்கால் நம்பி வாழ்ந்த ஊர் என்பதால் இவ்வூருக்கும் மணல்கால் என்ற பெயர் பெறும் பாக்கியம் கிட்டியது.
சிறப்பம்சம்:
அதிசயத்தின் அடிப்படையில்:பொதுவாக எல்லாத் தலங்களிலும் காக வாகனத்தில் காட்சி தரும் சனீஸ்வரன் இங்கு கழுகு வாகனத்தில் காட்சி தருவது கோயிலின் சிறப்பு.