ஏழுஸ்வரங்கள் இந்த விநாயகரை பிரதிஷ்டை செய்து வழிபட்டு தங்களது சாபம் நீங்கப்பெற்றிருப்பது சிறப்பு.
திறக்கும் நேரம்:
காலை 6 மணி முதல் 10 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
முகவரி:
அருள்மிகு ஏழைப்பிள்ளையார் திருக்கோயில்
வடக்கு ஆண்டார் வீதி, திருச்சி மாவட்டம்.
பொது தகவல்:
மலைக்கோட்டை உச்சிப் பிள்ளையாரை வழிபட்டுவிட்டு கிரிவலம் வரும் பக்தர்கள், உச்சிப் பிள்ளையாரைச் சேர்த்து பன்னிரண்டு பிள்ளையார்களைத் தரிசிக்கலாம். இதில் இவர் ஏழாவதாக இருக்கும் பிள்ளையாராகத் திகழ்வதால் ஏழைப் பிள்ளையார் ஆகிவிட்டார். உண்மையில் இவர் எழுந்தருளியிருக்கும் கோவில் சப்தபுரீஸ்வரர் கோயிலாகும். இங்கே ஈஸ்வரனோ, அம்பாளோ, வேறு எந்த பரிவார தெய்வங்களோ இல்லை. நாகர்கள் சிலைகள் மட்டும் சன்னதிக்கு வெளியே உள்ளன. பிள்ளையார்தான் இங்கு மூலவர்.
பிரார்த்தனை
இசைக்கலைஞர்கள் குரல் வளம் பெற, செல்வ செழிப்பு உண்டாக, குழந்தைகளுக்கு ஏற்படும் நோய்கள் நீங்க இங்குள்ள விநாயகரை பிரார்த்தனை செய்கின்றனர்.
நேர்த்திக்கடன்:
விநாயகருக்கு அருகம்புல் மாலை சாற்றியும், தேங்காய் உடைத்தும் நேர்த்திகடன் செலுத்துகின்றனர்.
தலபெருமை:
இந்த விநாயகர் சன்னதியில் இசைக் கலைஞர்கள் பாடினால் குரல் வளம் பெறும். அவர்களுக்கு உள்ள பிரச்சினைகள் நீங்கும்; செல்வச் செழிப்பு ஏற்படும் என்பது நம்பிக்கை. மேலும், மந்தபுத்தி உள்ள குழந்தைகளும், மூளை வளர்ச்சி இல்லாத குழந்தைகளும் சப்தபுரீஸ்வரர் ஆலயத்தில் அமர்ந்து, இந்த விநாயகரை வழிபட்டு அபிஷேகத் தீர்த்தத்தைப் பருகினால் நாளடைவில் குணம் பெற்று மனநலமும், உடல்வளமும் பெறுவதாகக் கூறுகிறார்கள். மாணவ- மாணவிகள் அதிக மதிப்பெண்கள் பெறுவதற்காக இந்த விநாயகரை வழிபட்டுப் பயன் பெற்றதாகவும் சொல்லப்படுகிறது. ஏழைப் பிள்ளையார் என்று போற்றப்படும் இந்த விநாயகர் தெற்கு திசை நோக்கி அருள்புரிவதால், இவரை வழிபடும் வயதானவர்களுக்கு எமபயமோ, எமவாதனையோ இல்லை என்றும் கூறப்படுகிறது. மேலும், இவர் திருச்சிராப்பள்ளி மலையில் எழுந்தருளியிருக்கும் தந்தையையும் (தாயுமானவர்) அன்னையையும் பார்த்த வண்ணமிருப்பதால், குடும்பத்தில் ஒற்றுமையும் அமைதியும் என்றும் நிலைத்திருக்க அருள்புரிகிறார். இந்த விநாயகரைத் தரிசித்தால் மலை ஏறி உச்சிப் பிள்ளையாரைத் தரிசித்த பலன் கிட்டும்.
தல வரலாறு:
அகில உலகங்களிலும் உள்ள எல்லா ஒலிகளும், சொற்களும், ஸ்வரங்களும் பரம்பொருளான சிவபெருமானின் உடுக்கையிலிருந்து தோன்றியவை. பூலோக மக்கள் அறிந்தது ஏழு ஸ்வரங்களை மட்டும்தான். இந்த ஏழு ஸ்வரங்களை அடிப்படையாகக் கொண்டு பல ராகங்கள் உருவாக்கப்பட்டன. இதனால் சப்தஸ்வர தேவதைகளுக்குத் தங்களால்தான் மக்களின் மனதைக் கவரும் இனிமையான இசை எழுப்ப முடிகிறது என்ற கர்வம் உண்டாயிற்று. இசைக்கு மயங்காதவர்கள் யாருமில்லை. இசையால் உடலும் நலம் பெறும்; மனதுக்கும் அமைதி கிட்டும். தங்கள் ஸ்வரங்களில்தான் உலகமே அற்புதமான இசையால் நிறைந்திருக்கிறது. இறைவன்கூட இராவணன் வாசித்த சாம கானத்தில் மனதைப் பறி கொடுத்தவர்தானே! அப்படியிருக்க நாம்தான் மிகவும் உயர்ந்தவர்கள் என்ற ஆணவத்தால் இறைவனைத் துதிப்பதை மறந்தன. இதனைக் கவனித்த கலைவாணி சப்தஸ்வர தேவதைகளை, இனி உங்கள் இசையால் யாரையும் கவர முடியாது. ஸ்வரங்கள் பயனற்றுப் போகட்டும் என்று சபித்துவிட்டாள். கலைவாணியிடம் சாபம் பெற்ற சப்தஸ்வர தேவதைகள் ஊமையாகிப் போயின. தங்கள் தவறை உணர்ந்து இறைவனிடம் மௌனமாக பிராயச்சித்தம் பெற மன்றாடின. அகில உலக நாதனான சிவபெருமான் அவர்களுக்கு சாபவிமோசனம் அருள மனம் கொண்டார்.
பூலோகம் சென்று, தென் கயிலாயம் என்று போற்றப்படும் திருச்சிராப்பள்ளி மலை உச்சியில் அமர்ந்திருக்கும் உச்சிப் பிள்ளையாரை வழிபட்டு வலம் வந்து, ஏழு ஸ்வரங்களுக்கும் அதிபதியாக இருந்த நீங்கள் கிரிவலம் வரும் பாதையில் ஏழாவதாக ஒரு விநாயகரைப் பிரதிஷ்டை செய்து, அங்கிருந்து மீண்டும் உச்சிப் பிள்ளையாரை வழிபட்டால் உங்கள் சாபம் நீங்கும். நீங்கள் மீண்டும் சப்தஸ்வரங்களை ஒலிக்கும் சக்தியைப் பெறுவீர்கள் என்று அருளினார். இறைவன் அருளியதுபோல், மலைக்கோட்டையின் வடக்குப் பகுதியில், உச்சிப் பிள்ளையாரைத் தரிசிக்கும் வகையில் ஒரு விநாயகரைப் பிரதிஷ்டை செய்து, உச்சிப் பிள்ளையாரையும் வணங்கி ஏழு ஸ்வரங்களும் சாபவிமோசனம் பெற்றன. சிவபெருமானின் கட்டளைப்படி சப்த ஸ்வர தேவதைகள் கிரிவலப் பாதையில் ஏழாவது விநாயகராக இவரை ஸ்தாபிதம் செய்ததால் இந்த விநாயகர் ஆலயம் ஏழைப் பிள்ளையார்- சப்தபுரீஸ்வரர் கோவில் என்று பெயர் பெற்றது.
சிறப்பம்சம்:
அதிசயத்தின் அடிப்படையில்:ஏழுஸ்வரங்கள் இந்த விநாயகரை பிரதிஷ்டை செய்து வழிபட்டு தங்களது சாபம் நீங்கப்பெற்றிருப்பது சிறப்பு.