தை மாதம் மூன்றாம் வெள்ளியன்று அம்பாளுக்கு நடத்தப்படும் வளைகாப்பு வைபவம் மிகவும் விசேஷமானது.
கர்ப்பிணி பெண்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இங்கேயே வளைகாப்பை நடத்திச் செல்லலாம். இதுதவிர வழக்கமான சிவ திருவிழாக்கள் நடத்தப்படுகிறது.
தல சிறப்பு:
இங்குள்ள இறைவன் சுயம்புவாக லிங்கத் திருமேனியராக எழுந்தருளியுள்ளார். இங்குள்ள நவகிரக நாயகர்கள் தம்பதி சமேதராய் வாகனங்களில் எழுந்தருளியிருப்பது கோயிலின் தனி சிறப்பு. இத்தலத்திலுள்ள குங்குமவல்லிக்கு வளையல் அணிவித்து பூஜை செய்வது விசேஷம். இக்கோயில் சோழர்களால் கட்டப்பட்டது.
திறக்கும் நேரம்:
காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
முகவரி:
அருள்மிகு குங்குமவல்லி சமேத தான்தோன்றீஸ்வரர் திருக்கோயில்,
உறையூர், திருச்சி மாவட்டம்
போன்:
-
பொது தகவல்:
கி.பி. 871-ல் ராசகேசரிவர்மன் என்ற சிறப்பு பெயர் பெற்ற ஆதித்த சோழனால் இக்கோயில் கட்டப்பட்டிருக்கக்கூடும் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
கர்ப்பமடைந்த பெண்கள் தங்களுக்கு சுகப்பிரசவம் ஆக, இங்கிருந்து வளையல் பிரசாதம் பெற்று அணிந்து கொள்கின்றனர்.
நிறை மாத கர்ப்பிணிகளுக்கு வீட்டிலிருந்து யாராவது வந்து வளையல் வாங்கிச் சென்று வீட்டிலேயே அணிவிக்கலாம்.
ஏற்கனவே வளைகாப்பு முடிந்திருந்தாலும், இவ்வளையலை கூடுதலாக அணிந்து கொள்ளலாம். இந்த பெண்களுக்கு சுகப்பிரசவம் ஆகிறது. கர்ப்பிணிகளுக்கு ஸ்பெஷல் பிரசாதமாக வளையல் தரும் கோயில்.
நேர்த்திக்கடன்:
குழந்தை பிறந்த பிறகு 41 நாட்கள் கழித்து, மீண்டும் கோயிலுக்கு வந்து அம்பிகைக்கு நம்மால் ஆன அளவு எண்ணிக்கையில் வளையல் பூட்ட வேண்டும். வளையல் மாலையும் அணிவிக்கிறார்கள்.
தலபெருமை:
இங்குள்ள அம்மன் சன்னதி தெற்கு நோக்கி அமைந்துள்ளது. அம்மன் நின்ற கோலத்தில் நான்கு கரங்களுடன் காட்சி தருகிறாள்.
பொதுவாக ஆலயங்களில் நவகிரகங்கள் தனியாகவோ, தம்பதியராகவோ அல்லது வாகனத்துடனோ காணப்படுவது வழக்கம். ஆனால் இங்கு நவகிரக நாயகர்கள் தம்பதி சமேதராய் வாகனங்களில் எழுந்தருளியிருப்பது கோயிலின் தனி சிறப்பாகும். ஆதலால் இக்கோயில் சிறந்த கிரக பரிகாரத் தலமாகவும் விளங்குகிறது.
தெற்கு பிராகரத்தில் கம்பீரமாக காட்சி தரும் தில்லைகாளிக்கு பவுர்ணமியன்று சிறப்பான பூஜையும், யாகமும் நடைபெறுகிறது. இருபத்தேழு வகையான அபூர்வ மூலிகைகளுடன் சிறிதளவு மிளகாய் வற்றலும் இந்த யாகத்தில் பயன்படுத்தப்படுகிறது. இதில் கலந்து கொள்வதால் எப்பேர்ப்பட்ட மனக்கஷ்டமும் நீங்கும். கை, கால் வலி உள்ளவர்கள் எலுமிச்சை விளக்கேற்றி வழிபடுகின்றனர்.
இங்கு அருள்பாலிக்கும் குங்குமவல்லி அம்பிக்கைக்கு வருடந்தோறும் தை மாதம் மூன்றாவது வெள்ளி, சனி, ஞாயிறுகளில் வளைகாப்பு உற்சவம் நடைபெறுகிறது. இவ்விழாவில் கர்ப்பிணிகளும், குழந்தை பாக்கியம், மணப்பேறு வேண்டுபவர்களும் கலந்து கொண்டு பயன் பெறுகின்றனர். அச்சமயம் அம்மனை ஆயிரக்கணக்கான வளையல்களைக் கொண்டு அலங்காரம் செய்வார்கள். அந்த வளையல்களை அங்கு வரும் பெண்களை அம்மனாக பாவித்து அவர்களுக்கும் அணிவிப்பர். வெள்ளிக் கிழமையன்று கர்ப்பிணிப் பெண்களுக்கு வளையல் அணிவிப்பதால், அவர்கள் சுகப் பிரசவத்தில் குழந்தை பெறுவார்கள் என்ற நம்பிக்கை நிலவுகிறது. சனிக்கிழமையன்று குழந்தை இல்லாத பெண்களுக்கு வளையல் அணிவிக்க, அவர்களுக்கு குழந்தை பாக்கியம் விரைவில் கிடைக்கும். ஞாயிறன்று மணமாகாத பெண்கள் வளையல் அணிந்து கொள்ள, அவர்களுக்கு விரைவாக திருமணம் நடந்தேறும் என்பது இங்குள்ள பக்தர்களின் நம்பிக்கை.
செல்வவளம் தரும் மகாலட்சுமி சன்னதிக்கு நேராக வில்வதளம் இருப்பது குறிப்பிடத்தக்கது. மகாலட்சுமியின் அம்சமே வில்வம் என்பதால், இத்தகைய அமைப்பு இயற்கையாகவே ஏற்பட்டுள்ளது போலும். இது மிகவும் விசேஷமான அமைப்பு.
இங்குள்ள பைரவர் சன்னதியில் தேய்பிறை அஷ்டமியில் பூஜை செய்தால் தரித்திர நாசம் ஏற்படும். செல்வ விநாயகர், நடராஜர் சன்னதிகளும் இங்கு உள்ளன.
தல வரலாறு:
சூரவாதித்த சோழ மன்னன் ஒருமுறை நாகலோகம் சென்றான். அங்கிருந்த காந்திமதி என்ற நாககன்னிகையின் மீது அவனுக்கு காதல் ஏற்பட்டது. அவள் சிவபக்தை. தினமும் திருச்சிராப்பள்ளி மலையில் வீற்றிருக்கும் தாயுமான சுவாமியை வணங்க வரும் வழக்கம் உடையவள்.
நாகலோகத் தலைவரான ஆதிசேஷனின் அனுமதி பெற்று காந்திமதியை சூரவாதித்தன் மணந்து கொண்டான். திருமணத்துக்கு பிறகும் மலையிலுள்ள சிவனை வணங்க காந்திமதி தவறவில்லை.
இந்நிலையில் அவள் கர்ப்பவதியானாள். அவளுக்கு மலையேற மிகவும் சிரமமாக இருந்தது. இந்த கஷ்டத்தையும் பொருட்படுத்தாமல், அவள் மலையேறத் தவறவில்லை. ஏற்கனவே, காவிரிக்கரையில் ஒரு பெண்ணுக்கு பிரசவம் பார்த்து, "தாயும் ஆனவன்' என பெயர் பெற்ற சிவபெருமான், தன் பக்தையான காந்திமதியின் மீது இரக்கம் கொண்டார்.
ஒருநாள் காந்திமதியால் நடக்க முடியவில்லை. வயிற்றுப் பாரத்தையும் சுமந்து கொண்டு மலையில் எப்படி ஏறுவது என தவித்தாள். அவள் மீது இரக்கம் கொண்ட சிவன், தானே அங்கு தோன்றினார்.
""மகளே! காந்திமதி, கலங்காதே, இனி உனக்கு பிரசவம் ஆகும் வரை, நீ மலைக்கு வந்து என்னை தரிசிக்க வேண்டாம். இங்கேயே உனக்காக நான் லிங்கவடிவில் அமர்வேன். நீ இவ்விடத்திலேயே என்னை வணங்கி திரும்பலாம்.
தானாக உன் முன் தோன்றிய எனக்கு "தான் தோன்றீஸ்வரர்' என்ற திருநாமம் ஏற்படும். என் மனைவி பார்வதிதேவி, உன் போன்ற பெண்களுக்கு தாயாய் இருந்து பிரசவம் பார்ப்பாள். குங்குமம் காப்பாள். அவளுக்கு "குங்குமவல்லி' என்ற திருநாமம் ஏற்படும்,'' என்றார்.
காந்திமதி மகிழ்ச்சியடைந்து பிரசவ காலம் வரை அங்கு வந்து இறைவனை வணங்கி, அழகிய குழந்தையைப் பெற்றெடுத்தாள்.
சிறப்பம்சம்:
அதிசயத்தின் அடிப்படையில்:இங்குள்ள இறைவன் சுயம்புவாக லிங்கத் திருமேனியராக எழுந்தருளியுள்ளார். இங்குள்ள நவகிரக நாயகர்கள் தம்பதி சமேதராய் வாகனங்களில் எழுந்தருளியிருப்பது கோயிலின் தனி சிறப்பு. இத்தலத்திலுள்ள குங்குமவல்லிக்கு வளையல் அணிவித்து பூஜை செய்வது விசேஷம்.
இருப்பிடம் : திருச்சி ஜங்ஷன் பஸ்ஸ்டாண்டில் இருந்து சத்திரம் பஸ் ஸ்டாண்ட் செல்லும் வழியில், ருக்மணி தியேட்டர் ஸ்டாப்பில் இறங்கி கோயிலைச் சென்றடையலாம். உறையூர் ரோட்டில் கோயில் அமைந்துள்ளது.