ஆலயத்தின் திருச்சுற்றில் பிள்ளையார், முருகன், வள்ளி, தெய்வானை மற்றும் சண்டீஸ்வரர் சன்னதி உள்ளன. வடகிழக்கு மூலையில் நவகிரக நாயகர்களின் சன்னதி உள்ளது. கிழக்கில் பைரவரும், தெற்கில் தட்சிணாமூர்த்தியும் அருள்பாலிக்கின்றனர்.
பிரார்த்தனை
பிரிந்தவர்கள் ஒன்று சேரவும், கன்னிப் பெண்களுக்கு விரும்பிய கணவன் அமையவும் இங்குள்ள இறைவி கல்யாண சுந்தரி அருள்பாலிக்கிறாள் என்பதும் பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை. சதய நட்சத்திரக்காரர்கள் இங்குள்ள மூலவரை வணங்கிச் செல்கின்றனர்.
நேர்த்திக்கடன்:
இங்குள்ள சுவாமிக்கும், அம்மனுக்கும் அபிஷேகம் செய்து, புது வஸ்திரம் சாற்றி நேர்த்திகடன் செலுத்துகின்றனர்.
தலபெருமை:
குகனை ராமர் ஆலிங்கனம் செய்தபோது, ஸ்ரீராமனில் திருமார்பில் செறிந்த சந்தனம், குகனின் நெற்றியில் ஒட்டிக்கொண்டது. ஸ்ரீராமரின் திருவடிகளுக்கு குகன் சந்தன அபிஷேகம் செய்த திருநாள் சதய நட்சத்திர தினமாகும். ஸ்ரீராமருக்கு பாதபூஜைகளை ஆற்றியதால், குகன் ஈஸ்வரனது அருளும் பெறுவதற்குரிய தெய்வாதார சக்திகள் நிறைந்தவரானார் என்கின்றனர். குகனுக்கு அருளாசி புரிந்த இறைவன், குஹேஸ்வரர். அவர் அருள்பாலிக்கும் தலம், கொள்ளிடக் கரையில் அமைந்துள்ள கூகூர். ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட இந்த ஆலயம், மேற்கு திசை நோக்கி அமைந்துள்ளது. தென் திசையில் உள்ள முகப்பைத் தாண்டியதும் விசாலமான பிராகாரமும், நந்தியம் பெருமானும், பலிபீடமும் உள்ளன. அடுத்துள்ள மகா மண்டபத்தின் இடது புறம், அர்த்த மண்டபத்தை அடுத்துள்ள கருவறையில் அன்னை கல்யாண சுந்தரி நின்ற கோலத்தில் இளநகை தவழும் முகத்துடன் அருள்பாலிக்கிறாள். அன்னைக்கு நான்கு கரங்கள். தன் மேல் இரு கரங்களில் தாமரை மலரைத் தாங்கியும்; கீழ் இரு கரங்களில் அபய, வரத. முத்திரைகளுடனும் விளங்குகிறாள். குகனுக்கு ஈஸ்வரன் அருளிய தினம் சதய நட்சத்திர நாளாகக் கருதப்படுவதால், இறைவனுக்கு ஒவ்வொரு மாதமும் சதய நட்சத்திர நாளில் சந்தனக் காப்பு அலங்காரம் செய்யப்படுகிறது. இந்த நாளில் இங்குள்ள இறைவன், இறைவியை வழிபடுவதால் பல நற்பலன்கள் கிடைக்கும் எனக் கூறுகின்றனர் பக்தர்கள். சதய நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், தவறாது வழிபட வேண்டிய கோயில். ராமாயண காலத்தில் இருந்தே சிறப்புடன் திகழும் இத்தலம் மாத சிவராத்திரி நாட்களில் மகரிஷிகளால் வழிபடப்பெற்ற பெருமைக்கும் உரியது.
தல வரலாறு:
உன்னோடு ஐவர் ஆனோம்! என்று ராமபிரானால் சகோதரனாக ஏற்கப்பட்ட பெருமைக்கு உரியவன், குகன். எளிமையான இறைபக்தியுடன் திகழ்ந்த குகன், பரசுராமர், ஸ்ரீராமர் போன்ற அவதார மூர்த்திகளுக்கு நேரடியாகவே திருவடி பூஜைகளைச் செய்யவும் பாக்கியம் பெற்றவர். குகன் காவிரிக் கரையில் கங்கை தீர்த்தம் கொண்டு ராமச்சந்திரனின் திருப்பாதம் அவரது திருவடிகளில் தனது கரத்தால் நேரடியாக இட்டு பாத பூஜை செய்வித்தான். ஸ்ரீராமர் குகனைக் கட்டித் தழுவினார். அப்போது ராமரின் மரவுரிகளுள் ஒன்று ஆற்றில் நழுவியது. அதனை எடுத்து வர குகன் சட்டென்று விரைந்தபோது ஸ்ரீராமர், அடியேனுடைய சத்தியப் பிரமாணப் பீதாம்பரமாகவே இந்த குகச் செல்வம் இருக்கையில் இன்னொரு ஆடை எதற்கு? எனக் கூறிச் சிரித்தாராம் ராமபிரான். ராமாயணத்தில் எத்தனையோ புனைக்கதைகள் இடைசெருகலாக இருப்பதுபோல் இத்தலத்தின் புராணமும் புதுமையாக இருக்கிறது. மகா பிரளயத்திற்கு முன் சர்வேஸ்வரன் ஞான யோகத்தில் ஆழ்ந்திருந்தார். சிருஷ்டிக்காக அவர் விழித்தெழ வேண்டிய தருணம் நெருங்கிக் கொண்டிருந்தது. ஆனால் சர்வேஸ்வரனோ ஞான யோகத்தால் இருந்ததால் அவரது யோக நிலையை எப்படிக் கலைப்பது என யோசித்தார்கள் தேவர்கள். யாவரும் திருமாலை வேண்டினர். உடனே, மத்ஸ்ய அவதார மூர்த்தியாக சாந்த குணங்களுடன் தங்கக் கவசம் போல் ஒளி விடும் பெருமாள் தோன்றினார். அவர் அருகே காமதேனு தன் நான்கு புதல்வியருடன் வந்து நின்றது. அடுத்து சகல விதமான அலங்காரங்களுடன் கல்யாண சுந்தரியாய் அம்பிகை தோன்றினாள். பின் அம்பிகை தனது மெல்லிய குரலில் கூ...கூ.. என வேத நாதங்களை ஓதிட, இறைவன் ஞான யோகத்திலிருந்து மீண்டார். சிருஷ்டி பரிபாலனத்திற்கு பிரம்மாவுக்குத் துணை புரிந்தார். கல்யாண சுந்தரியான அம்பிகை, கூ...கூ.... என வேத நாதங்களை ஓதியதால். இத்தலம் கூகூர் எனப் பெயர் பெற்றது.
சிறப்பம்சம்:
அதிசயத்தின் அடிப்படையில்:மூலவர் குஹேஸ்வரர் மேற்கு திசை நோக்கி அருள்பாலிப்பது தலத்தின் சிறப்பு.