தேவலோக சிற்பியான விஸ்வகர்மாவின் மகளாக சமுக்யா தேவி பிறந்தாள். பேரழகு கொண்டவளாக இருந்த அவளை சூரியன் மணந்து கொண்டார். அவள் சூரியனுடன் மிகுந்த அன்பு கொண்டு அவருடன் வாழ்ந்து வந்தாள். நாளுக்கு நாள் சூரியனின் உக்கிரம் அதிகரிக்கவே அவளால் வெப்பத்தைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அவள் சூரியனிடம் முறையிட்டும் அவர் உக்கிரத்தை குறைக்கவில்லை. ஒரு காலகட்டத்தில் அவரது வெப்பத்தை தாங்கவே முடியாது என்ற நிலைக்கு வந்த சமுக்யாதேவி, தான் தந்தையிடமே வந்துவிடுவதாக விஸ்வகர்மாவிடம் கேட்டாள். அவரோ மகளுக்கு ஆறுதல் கூறி சாந்தப்படுத்தினார். ஆனாலும் அவளால் கணவனின் உக்கிரத்தை பொறுத்துக் கொள்ளவே முடியவில்லை. எனவே, கணவனைப் பிரிந்து செல்ல முடிவெடுத்தாள்.
தான் சென்றுவிட்டால் கணவன் மனம் வருந்துவார் என்று எண்ணிய அவள் தன்னில் இருந்து சற்றும் வித்தியாசம் காணமுடியாதபடி தன் நிழலில் இருந்து ஒரு உருவத்தை உண்டாக்கினாள். அவளை தனக்கு பதிலாக சூரியனின் மனைவியாக இருந்து பணிவிடை செய்யும்படி பணித்தாள். (சமுக்யாதேவியால் நிழல் வடிவமாக உருவாக்கப்பட்டவளே சாயாதேவி). பின் அவள் சூரியனைப்பிரிந்து தன் தந்தையிடமே வந்து சேர்ந்தாள். விஸ்வகர்மா அவளுக்கு பலவாறு எடுத்துச் சொல்லியும் அவள் கணவனிடம் செல்லவில்லை.
தந்தையின் அனுமதியில்லாமலேயே அவருடன் தங்கியிருந்ததால் மனம் கலங்கிய சமுக்யாதேவி குதிரை வடிவம் எடுத்து இத்தலம் வந்து தன் கணவனின் உக்கிரம் குறையவும், அவரது உக்கிரத்தை பொறுத்துக் கொண்டு மீண்டும் கணவனுடன் சேரவும் சிவனை வேண்டி தவம் செய்தாள்.
இதனிடையே சாயாதேவியின் நடத்தையின் வித்தியாசத்தைக் கண்ட சூரியன், அவள் சமுக்யாதேவி அல்ல என அறிந்து கொண்டார். அவர் விஸ்வகர்மா மூலமாக தன் மனைவி பிரிந்து வந்ததை தெரிந்து கொண்டு, அவரிடமே தன் உக்கிரத்தையும் குறைத்தார். பின் அவர் இத்தலம் வந்து சிவனை வழிபட்டு சமுக்யாதேவியுடன் மீண்டும் சேர்ந்தார். இதன் அடிப்படையில் இங்கு நவக்கிரக சன்னதியில் சூரியன் சமுக்யாதேவி மற்றும் சாயாதேவி ஆகிய இருவருடன் இருப்பது போல அமைக்கப்பட்டிருக்கிறது. அருகிலேயே சூரியன் தனியாகவும் இருக்கிறார். பிற கிரகங்கள் அனைத்தும் சூரியனைப் பார்த்தபடியே இருக்கிறது.
சதுர்த்தி பூஜை: மான்களாக பிறந்த அசுர தம்பதியர் மற்றும் மகரிஷிக்கு சிவன் ஒரு அகங்கார சதுர்த்தியன்று (செவ்வாய்க்கிழமை சதுர்த்தி) விமோசனம் தந்ததாக ஐதீகம். இதன் அடிப்படையில் இங்கு சுவாமிக்கு செவ்வாய்க்கிழமைகளில் வரும் சதுர்த்தி திதியன்று சிறப்பு பூஜைகள் நடக்கிறது. இந்நேரத்தில் சுவாமியை வழிபட்டால் குறைவிலாத வாழ்க்கை கிடைக்கும், பாவங்களுக்கு மன்னிப்பு கிடைக்கும் என்பது நம்பிக்கை.
|