பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மும்மூர்த்திகளும் அருளும் தலம்.பெருமாளின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் இது 3 வது திவ்ய தேசம்
திறக்கும் நேரம்:
காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
முகவரி:
அருள்மிகு உத்தமர் திருக்கோயில்,
திருக்கரம்பனூர்,
பிச்சாண்டார் கோயில் - 621 216.
மணச்சநல்லூர் வட்டம்,
திருச்சி மாவட்டம்.
போன்:
+91- 431 - 2591 466, 2591 040.
பொது தகவல்:
சிவன், பிச்சாடனாராக வந்து தன் தோஷம் நீங்கப்பெற்ற தலம் என்பதால் இவ்வூர் "பிச்சாண்டார் கோயில்' என்றும், மகாவிஷ்ணு கதம்ப மரமாக நின்ற ஊர் என்பதால் "கதம்பனூர்' என்றும் "கரம்பனூர்' என்றும் அழைக்கப்படுகிறது. கணவனும், மனைவியும் இல்லறவாழ்க்கையில் சேர்ந்து வாழ்வதே உத்தமம். இவ்வாறு ஒருவருக்கொருவர் இணக் கமாக வாழ்பவர்களை உத்தமர் என்பர். இங்கு மும்மூர்த்திகளும் தம்பதி சமேதராக இருப்பதால் திருமங்கையாழ்வார் இத்த லத்தை "உத்தமர் கோயில்' என்று மங்களாசாசனம் செய்துள்ளார். தம்பதியர்கள் இங்கு வேண்டிக்கொண்டால் குடும்பம் சிறக்கும் என்பது நம்பிக்கை.
சிவன்-பெருமாள் வீதி உலா!
பக்தர் ஒருவருக்காக பிரம்மா, சிவன், திருமால் என மூன்று தெய்வங்களும் காட்சித் தந்த தலம், உத்தமர் கோயில். தன் மனைவி சரஸ்வதியுடன் பிரம்மா அருள்பாலிக்கும் இத்தலத்தில் ஆண்டுதோறும் கார்த்திகைத் திருநாளன்று சிவனும், பெருமாளும் சேர்ந்து வீதி உலா வருவது தனிச் சிறப்பு.
பிரார்த்தனை
குழந்தை பாக்கியம் கிடைக்க, கிரக தோஷங்கள் நீங்க, வேண்டிக்கொள்ளலாம்.
பிரம்மன் சன்னதி: படைக்கும் தொழிலைச் செய்யும் பிரம்மாவிற்கு பூலோகத்தில் தனக்கென தனியே கோயில் இல்லையே என மனக்குறை இருந்தது. எனவே, மகாவிஷ்ணு அவரை பூலோகத்தில் பிறக்கும்படி செய்தார். பிரம்மா இத்தலத்தில் பெருமாளை வணங்கி தவம் செய்து வந்தார். அவரது பக்தியை சோதிப்பதற்காக மகாவிஷ்ணு, கதம்ப மரத்தின் வடிவில் நின்று கொண்டார். இதையறிந்த பிரம்மா கதம்ப மரத்திற்கு பூஜைகள் செய்து, சுவாமியை வணங்கினார். அவரது பக்தியில் மகிழ்ந்த மகாவிஷ்ணு காட்சி தந்து, "நீ எப்போதும் இங்கேயே இருந்து என்னை வழிபட்டு வா. நீ பெற்ற சாபத்தால் உனக்கு கோயில்கள் இல்லாவிட்டாலும் இங்கு தனியே வழிபாடு இருக்கும்' என்றார். பிரம்மாவும் இங்கேயே தங்கினார். பிற்காலத்தில் இவருக்கும் சன்னதி கட்டப்பட்டது.
பிரம்மாவுக்கு இடப்புறத்தில் ஞான சரஸ்வதி தனிச்சன்னதியில் தெற்கு நோக்கியபடி இருக்கிறாள். இவள் கைகளில் வீணை இல்லாமல் ஓலைச்சுவடி, ஜெபமாலையுடன் காட்சி தருவது சிறப்பு. பிரம்மாவிற்கு தயிர்சாதம், ஆத்தி இலை படைத்தும், சரஸ்வதிக்கு வெள்ளை வஸ்திரம், தாமரை மலர் மாலை சாத்தியும் வழிபட்டால் ஆயுள் கூடும், கல்வி சிறக்கும் என்பது நம்பிக்கை. குருப்பெயர்ச்சியின்போது பிரம்மாவிற்கு விசேஷ பூஜைகள் நடக்கிறது. மும்மூர்த்திகள் தலம்: விஷ்ணு கிழக்கு பார்த்தபடி பள்ளி கொண்ட கோலத்திலும், உற்சவர் பிரயோக சக்கரத்துடன் நின்ற கோலத்திலும் உத்யோக விமானத்தின் கீழ் அருள்பாலிக்கிறார். பூரணவல்லி தாயார் தனிச்சன்னதியில் அருளுகிறாள். இவள் என்றும் உணவிற்கு பஞ்சமில்லா நிலையைத் தரக்கூடியவள். அருகில் மகாலட்சுமிக்கும் தனிச்சன்னதி இருக்கிறது. இவ்விரண்டு தாயார்களது தரிசனம் விசேஷ பலன்களைத் தரக்கூடியது. பெருமாளுக்கு நேர் பின்புறத்தில் சிவன் மேற்கு பார்த்தபடி லிங்க வடிவில் இருக்கிறார். இவர் பிட்சாடனாராக கோஷ்டத்திலும், உற்சவராகவும் இருக்கிறார். சிவன், பிரம்மா, விஷ்ணு ஆகிய மும்மூர்த்திகளும் தனித்தனி சன்னதிகளில் அம்பாள்களுடன் காட்சி தருகின்றனர். ஒரே தலத்தில் மும்மூர்த்திகளையும் தரிசனம் செய்வது அபூர்வம். கார்த்திகை தீபத்திருவிழாவின் போது மூவருக்கும் மூன்று திசைகளில் சொக்கப்பனை கொளுத்தப்பட்டு ஒன்றாக உலா வருகின்றனர். தைப்பூசத் திருவிழாவில் சிவனுக்கும், மாசி மகத்தில் பெருமாளுக்கும் கொள்ளிடத்தில் தீர்த்தவாரி விழா நடக்கிறது.
சிவகுரு தெட்சிணாமூர்த்தி, விஷ்ணு குரு வரதராஜர், குரு பிரம்மா, சக்திகுரு சவுந்தர்ய பார்வதி, ஞானகுரு சுப்பிரமணியர், தேவகுரு வியாழன், அசுரகுரு சுக்ராச்சாரியார் ஆகிய ஏழு குரு சுவாமிகளும் குருவிற்குரிய இடங்களில் இருந்து அருளுகின்றனர். குருப்பெயர்ச்சியின்போது ஏழு குருக்களுக்கும் விசேஷ அபிஷேகங்கள் நடக்கிறது. எனவே இத்தலம் "சப்தகுரு தலம்' எனப்படுகிறது.
தல வரலாறு:
சிவனைப் போலவே ஐந்து தலைகளுடன் இருந்த பிரம்மாவைக் கண்ட பார்வதிதேவி அவரை தனது கணவன் என நினைத்து பணிவிடை செய்தாள். இதைக்கண்ட சிவன், குழப்பம் வராமல் இருக்க பிரம்மாவின் ஒரு தலையை மட்டும் கிள்ளி எடுத்தார். இதனால் சிவனுக்கு பிரம்மஹத்தி தோஷம் பிடித்ததோடு, பிரம்மாவின் கபாளமும் (மண்டை ஓடு) அவரது கையுடன் ஒட்டிக்கொண்டது. சிவன் எவ்வளவோ முயன்றும் அவரால் கபாளத்தை பிரிக்க முடியவில்லை. அவருக்கு படைக்கப்பட்ட உணவுகள் அனைத்தையும் கபாளமே எடுத்துக் கொண்டது. எவ்வளவு உணவு இட்டாலும் கபாளம் மட்டும் நிறையவேயில்லை. பசியில் வாடிய சிவன், அதனை பிச்சைப்பாத்திரமாக ஏந்திக்கொண்டு பிட்சாடனார் வேடத்தில் பூலோகம் வந்து பல தலங்களுக்கும் சென்றார். அவர் இத்தலத்திற்கு வந்தபோது பெருமாள், சிவனின் பாத்திரத்தில் பிச்சையிடும்படி மகாலட்சுமியிடம் கூறினார். அவளும் கபாளத்தில் பிச்சையிடவே அது பூரணமாக நிரம்பி சிவனின் பசி நீக்கியது. இதனால் தாயார் "பூரணவல்லி' என்ற பெயரும் பெற்றாள்.மகாவிஷ்ணுவும் பள்ளிகொண்ட கோலத்தில் சிவனுக்கு காட்சி தந்தார்.