|
ஷீரடியில் இருக்கும் ஆலயத்தை நகல் எடுத்தது போலவே அமைக்கப்பட்டிருக்கும் இந்த ஆலயத்தின் நாற்பது அடி உயர கோபுரத்தின் உச்சியில் பறக்கும் கொடி, உலகிற்கு அருளும் மகான் இங்கே இருக்கிறார் வா என்பது போல அசைந்தாடி வரவேற்கிறது. பொன்நிறத்தில் ஒளிரும் எழிலான முகப்பின் நடுவே கதைவடிவில் அமர்ந்து காட்சியளிக்கிறார் ஷீரடி மகான். வணங்கி உள்ளே நுழைந்தால் நேரெதிரே, அமைந்திருக்கிறது மூலஸ்தானம் வெளியே கடுமையான வெப்பம் வீச, உள்ளே மகானின் கருணை மழை நிறைந்திருப்பதால் ஜில் என்று இருக்கிறது. ஐந்தடிக்கும் மேலான உயரத்தில் வெண் பளிங்குக் கல்லால் அமைக்கப்பட்டு, தகதகக்கும் கிரீடம், பளபளக்கும் ஆடை, பொலிவான பூமாலை என எழிலான அலங்காரத்துடன் காட்சிதரும் மகானை தரிசிக்கும்போது, ஆண்டியாக இருந்தாலும் பக்தர்கள். மனதில் அரசனாக சிம்மாசனமிட்டு அமர்ந்திருக்கிறார் ஷீரடி நாயகர் என்பது தெளிவாகப் புரிகிறது.
தினமும் நான்குகால பூஜைகள், ஷீரடியில் நடப்பதுபோலவே நடப்பதால், ஏராளமான பக்தர்கள் இங்கே வந்து அர்ச்சனை ஆராதனைகளைச் செய்கிறார்கள். மனமுருக நின்று வேண்டுகிறார்கள். வியாழக் கிழமைகளில் விசேஷ பூஜைகளும் நடக்கின்றன. அருகே உள்ள கல்லூரி மாணவர்கள், பேராசியர்களும் அதிக அளவில் வருகிறார்கள். தேர்வுகளுக்கு முன் சிறப்பு பூஜைகளும் நடத்தப்படுகிறதாம். எல்லோருக்கும் தன் அருளைக் குறைவின்றி வழங்குகிறார் பாபா என்பதற்கு இங்கே வருவோரின் வேண்டுதல்கள் ஈடேறுததே சாட்சி என்கிறார்கள். |
|