காலை 6.30 மணி முதல் 11 மணி வரை, மாலை மணி 5 முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்
முகவரி:
அருள்மிகு ஆதிகேசவப்பெருமாள் திருக்கோயில், பேயாழ்வார் தேவஸ்தானம், மயிலாப்பூர்- 600 004.
சென்னை
போன்:
+91-44 2464 3873, 2494 3873, 94440 35591.
பொது தகவல்:
தாயாரின் பிற பெயர் பார்க்கவி விமானம் மயூர விமானம். கோபுரம் 5 நிலைகளை கொண்டது.
பிரார்த்தனை
குடும்பத்தில் ஐஸ்வர்யம் உண்டாக, எதிரிகளின் தொந்தரவு குறைய இங்கு வேண்டிக்கொள்ளலாம்.
நேர்த்திக்கடன்:
சுவாமி, தாயாருக்கு திருமஞ்சனம் செய்து, வஸ்திரம் அணிவித்து நேர்த்திக்கடன் நிறைவேற்றுகிறார்கள்.
தலபெருமை:
பேயாழ்வார் அவதார தலம்: முதலாழ்வார்கள் மூவரில் ஒருவரான, பேயாழ்வார் அவதரித்த தலம் இது. திருமாலின் ஆயுதங்களில் ஒன்றான நந்தகம் என்னும் வாள், மகாலட்சுமியிடம் தனக்கு உபதேசம் செய்யும்படி வேண்டியது. ஒப்புக்கொண்ட மகாலட்சுமி, அந்த வாளை பூலோகத்தில் பிறந்து மகாவிஷ்ணுவை வணங்கும்படியும், அதன்பின் தான் உபதேசம் செய்வதாகவும் கூறினாள். அதன்படி நந்தகம் (வாள்), இங்குள்ள மணி கைரவிணி தீர்த்தத்தில் மலர்ந்த அல்லி மலரில் அவதரித்தார். இவர் "மகதாஹ்வயர்' என்று பெயர் பெற்றார். இத்தலத்தில் பெருமாளுக்கு தினசரி பூமாலை அணிவித்து சேவை செய்த இவருக்கு, மகாலட்சுமி உபதேசம் செய்தாள். பெருமாள் மீது அதீதமாக பக்தி கொண்டதால் இவர், "பேயாழ்வார்' என்று பெயர் பெற்றார். "பேய்' என்றால் "பெரியவர்' என்றும் பொருள் உண்டு. ஆழ்வார்களில் இவர் பெரியவர் என்பதாலும் இப்பெயரில்அழைக்கப்பட்டதாகச் சொல்வர். திருமழிசையாழ்வார் இவரை, தனது குருவாக ஏற்றுக்கொண்டு உபதேசம் பெற்றார்.பெருமாள் சன்னதி முன்மண்டபத்தில் தெற்கு நோக்கி, அமர்ந்த கோலத்தில் பேயாழ்வார் தனிச்சன்னதியில் இருக்கிறார். இக்கோயிலிலிருந்து சற்று தூரத்தில், பேயாழ்வார் அவதரித்த கைரவிணி கிணறு தற்போதும் இருக்கிறது. ஐப்பசி மாத சதயம் நட்சத்திரத்தில், பேயாழ்வாருக்கு திருநட்சத்திர விழா நடக்கிறது. அன்று பார்த்தசாரதி கோயிலில் இருந்து சுவாமிக்கு அணிவித்த மாலை, துளசி, பரிவட்டம், சந்தனம் மற்றும் அவருக்குப் படைத்த நைவேத்யம் ஆகியவற்றை கொண்டு வந்து, பேயாழ்வாருக்கு படைக்கின்றனர். இவ்விழாவின் 3ம் நாளில் பேயாழ்வார், தன் பிறப்பிடத்திற்குச் சென்று, "திருக்கோவிலூர் உற்சவம்' காண்கிறார். திருக்கோவிலூரில் முதலாழ்வார்களான பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார் ஆகிய மூவரையும், ஒன்றாக சந்திக்க வைத்து காட்சி கொடுத்தார் பெருமாள். இதன் அடிப்படையில் இங்கு இந்த வைபவம் நடக்கிறது.
இவ்விழாவின்போது, மூன்று ஆழ்வார்களையும் அருகருகில் நெருக்கமாக வைத்து, கருட வாகனத்தில் சுவாமி காட்சி கொடுப்பார். 9ம் நாளில் பேயாழ்வார் தேரில் உலா செல்கிறார். தை மாதத்தில் தெப்பத்திருவிழாவின்போது, திருமழிசையாழ்வாருக்கு பேயாழ்வார் குருவாக இருந்து உபதேசம் செய்த வைபவம் மிக விசேஷமாக நடக்கும்.புரட்டாசி மாதத்தில் ஒருநாள் பேயாழ்வார், திருவல்லிக்கேணிக்கு எழுந்தருளுவார். அப்போது சுவாமியின் சடாரியால் ஆழ்வாருக்கு மரியாதை செய்து வரவேற்பு கொடுப்பர். அதன்பின், ஆழ்வார் மூலஸ்தானத்திற்குள் சென்று சுவாமியை தரிசித்து, மங்களாசாசனம் செய்வார். பின்பு பார்த்தசாரதியுடன் வீதியுலா சென்றுவிட்டு, கோயிலுக்குத் திரும்புவார்.
மணி பிரார்த்தனை: பிருகு மகரிஷி, மகாலட்சுமி தன் மகளாகப் பிறக்க வேண்டி கைரவிணி புஷ்கரிணி கரையில் தவமிருந்தார். அவருக்கு ஒரு பங்குனி உத்திர நாளில், குளத்தில் ஒரு மலரின் மத்தியில் தவழ்ந்தாள் லட்சுமி. அவளை வளர்த்த பிருகு, திருமணப் பருவத்தில் பெருமாளுக்கே மணம் முடித்துக் கொடுத்தார். பிருகு மகரிஷியின் மகளாகப் பிறந்ததால் இவளுக்கு, "பார்க்கவி' என்றும் பெயருண்டு.இவள் சுவாமிக்கு வலப்புறத்தில் தனிச்சன்னதியில் இருக்கிறாள். வெள்ளிக்கிழமை தோறும் காலையில் விசேஷ ஹோமம், மாலை 6.30 மணிக்கு மணிக்கு, "ஸ்ரீசூக்த வேத மந்திரம்' சொல்லி, "வில்வ இலை'யால் அர்ச்சனை செய்யப்படுகிறது. இந்த நேரத்தில் தாயாரை வழிபடுவது விசேஷமான பலனைத் தரும். திருமண தோஷம் நீங்க, கல்வி சிறக்க, உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டிக்கொள்ளும் பக்தர்கள், இவளுக்கு வில்வ அர்ச்சனை செய்து, 2 மணிகளை அவளது பாதத்தில் வைத்து பூஜித்து பின்பு, சன்னதி கதவில் கட்டி வழிபடுகின்றனர். இந்த மணிகள் எப்போதும் ஒலித்து,பக்தர்களின் கோரிக்கைகளுக்காக தாயாரிடம் பிரார்த்தனை செய்வதாக நம்பிக்கை. வேண்டுதல் நிறைவேறிய பின்பு, மீண்டும் 2 மணிகளைக் கட்டிவிட்டு நேர்த்திக்கடன் நிறைவேற்றுகின்றனர்.
சர்வ தீர்த்த சிறப்பு: சந்திரன், தனக்கு ஏற்பட்ட ஒரு சாப விமோசனத்திற்காக இங்கு பெருமாளை வழிபட்டான். அப்போது சுவாமி, இங்கு அனைத்து புண்ணிய தீர்த்தங்களையும் இங்கு பொங்கச் செய்து, காட்சி கொடுத்தார். அதில் நீராடி சுவாமியை வழிபட்ட சந்திரன், விமோசனம் பெற்றான். இங்கு பொங்கிய தீர்த்தங்களை, பெருமாள் இங்கேயே தங்கும்படி கூறவே, அவையும் தங்கிவிட்டன. சர்வ தீர்த்தங்களும் ஒன்றாக இருப்பதால் இது, "சர்வ தீர்த்தம்' என்றழைக்கப்படுகிறது. சந்திரன் விமோசனம் பெற்றதால் "சந்திர புஷ்கரிணி' என்றும் இதற்கு பெயருண்டு. தற்போது இத்தீர்த்தம், "சித்திரக்குளம்' என்ற பெயரில் அழைக்கப்படுகிறது.
முப்பத்து மூவர் உலா: மூலஸ்தானத்தில் ஆதிகேசவப்பெருமாள், நின்ற கோலத்தில் காட்சி தருகிறார். உடன் ஸ்ரீதேவி, பூதேவி இல்லை. திருவல்லிக்கேணி பார்த்தசாரதியை மங்களாசாசனம் செய்த திருமங்கையாழ்வார், இத்தலத்தையும் சேர்த்து, "மாடமாமயிலைத் திருவல்லிக்கேணி கண்டேனே'' என்றும், திருமழிசையாழ்வார், "நீளோதம் வந்தலைக்கும் மாமயிலை' என்றும் பாடியுள்ளனர். பிரகாரத்தில் ராமர், சக்கரத்தாழ்வார், ஆண்டாள், வீர ஆஞ்சநேயர் ஆகியோருக்கு சன்னதிகள் உள்ளது. ஏகாதசி, திருவோணம், பவுர்ணமி, அமாவாசை, தமிழ் மாதப்பிறப்பு ஆகிய நாட்களில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் ஆதிகேசவரும், உத்திரம் நட்சத்திரம், வெள்ளிக் கிழமைகளில் தாயார், பூரம் நட்சத்திரத்தில் ஆண்டாள், புனர்பூச நட்சத்திரத்தில் ராமர் மற்றும் திருநட்சத்திர நாட்களில் ஆழ்வார்களும் இங்கு புறப்பாடாவது விசேஷம்.பங்குனி மாதத்தில் பிரம்மோற்ஸவம் நடக்கிறது. இவ்விழாவின் 10 நாளில், 12 சப்பரங்களில் 12 ஆழ்வார்கள் மற்றும் 21 வைணவ ஆச்சார்யார்கள் என 33 பேர் எழுந்தருளி, சுவாமியுடன் வீதியுலா செல்வர். இந்த விழா இங்கு விமரிசையாக நடக்கும். தை அமாவாசையை ஒட்டி 5 நாட்கள் தெப்பத்திருவிழா நடக்கிறது.
தல வரலாறு:
திரேதாயுகத்தில் இத்தலத்தில் உள்ள கைரவிணி புஷ்கரிணியின் கரையில் மகரிஷிகள் யாகம் நடத்தினர். மது என்ற அசுரன், யாகம் நடக்க விடாமல் தொந்தரவு செய்தான். இதனால், மகரிஷிகள், அசுரனை அழித்து யாகம் நடத்திட அருளும்படி மகாவிஷ்ணுவிடம் வேண்டினர். அவர்களுக்கு காட்சி தந்த மகாவிஷ்ணு, அசுரனை அழிப்பதாக ஒப்புக்கொண்டார். மேலும், யாகத்தை தொடர்ந்து நடத்தும்படி கூறினார். அதன்படி மகரிஷிகள், யாகத்தை தொடர்ந்தனர். அசுரன் அங்கு வந்தான். அப்போது, மகாவிஷ்ணு யாகத்தில் இருந்து தோன்றி, அசுரனை அழித்தார். பின்பு, மகரிஷிகளின் வேண்டுதலுக்காக இத்தலத்தில் எழுந்தருளினார். இவரே இத்தலத்தில், "ஆதி கேசவப்பெருமாள்' என்ற பெயரில் அருளுகிறார்.
இருப்பிடம் : சென்னையில் எந்த பகுதியில் இருந்தும் மயிலாப்பூருக்கு எளிதாக வரலாம். சித்திரக்குளம் பஸ் ஸ்டாப்பில் இறங்கி, எளிதில் கோயிலுக்குச் சென்றுவிடலாம்.
அருகிலுள்ள ரயில் நிலையம் :
சென்னை, எக்மோர்
அருகிலுள்ள விமான நிலையம் :
சென்னை மீனம்பாக்கம்
தங்கும் வசதி : சென்னை
தாஜ் கோரமண்டல் +91445500 2827 லீ ராயல் மெரிடியன் +91442231 4343 சோழா ஷெரிட்டன் +91442811 0101 தி பார்க் +91444214 4000 கன்னிமாரா +91445500 0000 ரெய்ன் ட்ரீ +91444225 2525 அசோகா +91442855 3413 குரு +91442855 4060 காஞ்சி +91442827 1100 ஷெரிமனி +91442860 4401 அபிராமி +91442819 4547