ராகு கேது பரிகார தலம், சிவன், அம்பாள், சண்முகர் என மூவருக்கும், மூன்று கொடிமரத்துடன் அமைந்த தலம் இது. மகாலட்சுமி, திருமாலை மணந்து கொள்வதற்காக இங்கு சிவனை வணங்கியதாக ஐதீகம். இதன் அடிப்படையில் இங்குள்ள ஒரு தூணில் மகாலட்சுமி கைகளில் கலசத்தை வைத்து, சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்தபடி காட்சி தருகிறாள். மகாலட்சுமி, சரஸ்வதியும் மற்றொரு சன்னதியில் அருகருகே இருக்கின்றனர். சரஸ்வதியிடம் வீணை கிடையாது. இக்கோயிலுக்கான விநாயகர், எதிரே தனிச்சன்னதியில் இருக்கிறார். பக்தர்கள் இவருக்கு தேங்காய் மாலை சாத்தி, தேங்காய் எண்ணெய் தீபம் ஏற்றி வழிபடுகிறார்கள். பிரகாரத்தில் சண்முகர் தனிச்சன்னதியில் ஆறு முகங்களுடன் மயில் மீது அமர்ந்த கோலத்தில் காட்சி தருகிறார். ஒவ்வொரு சஷ்டியின்போதும் இவருக்கு 6 மலர்கள், 6 நைவேத்யம், 6 வகையான பழங்கள் படைத்து, 6 குருக்கள் "சத்ருசம்ஹார திரிசதை' பூஜை செய்வது சிறப்பு.
திறக்கும் நேரம்:
காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 9.30 மணி வரை திறந்திருக்கும்
முகவரி:
அருள்மிகு திருவேட்டீஸ்வரர் கோயில்,
திருவல்லிக்கேணி - 600 005.
சென்னை.
போன்:
+91-44 -2841 8383, 2851 1228.
பொது தகவல்:
பிரகாரத்தில் விநாயகர், சண்முகர், சூரியன் மனைவி சங்கிலி நாச்சியாருடன் சுந்தரர் மற்றும் வள்ளலாருக்கு சன்னதி இருக்கிறது. கோஷ்டத்தில் யோக தெட்சிணாமூர்த்தியும் அருள்பாலிக்கிறார்கள்.
பிரார்த்தனை
அறியாமல் செய்த தவறுக்கு வருந்துபவர்கள், நாகதோஷம் உள்ளவர்கள் இங்கு வேண்டிக் கொள்கிறார்கள்.
நேர்த்திக்கடன்:
சுவாமிக்கு அபிஷேகம் செய்து தஙகள் நேர்த்திக்கடனை செலுத்துகி்ன்றனர்.
தலபெருமை:
ராகு கேது தலம்: தேவர்கள் பாற்கடலை கடைந்தபோது வெளிப்பட்ட அமுதத்தை சாப்பிட அசுரனான ஸ்வர்பானு என்பவன், தேவர்களுடன் அமர்ந்து கொண்டான். இதை சூரியனும், சந்திரனும் திருமாலிடம் காட்டிக் கொடுத்து விட்டனர். திருமால் அமுதம் பரிமாறிய கரண்டியால் ஸவர்பானுவை அடிக்கவே தலையும், உடலும் துண்டானது. அவன் அமுதத்தை சாப்பிட்டதால் உயிர் பிரியவில்லை. பின்பு சிவனருளால் தனியே விழுந்த தலையுடன் பாம்பு உடல் சேர்ந்து ராகுவாகவும், மீதி உடலுடன் நாக தலை சேர்ந்து கேதுவாகவும் உருமாறினான். அமுதம் உண்டதால் அழியாத்தன்மை பெற்ற அவர்களுக்கு கிரக பதவியும் கிடைத்தது. தங்களைக் காட்டிக்கொடுத்த சூரிய சந்திரரை இவர்கள் ராகு, எமகண்ட நேரத்தில் சக்தியின்றி செய்து விடுவர். குறிப்பிட்ட நாட்களில் முழுமையாக விழுங்கி விட்டு, அவர்களின் பணியை தாங்கள் செய்வார்கள். இந்த நிகழ்வின் அடிப்படையில் இவர்கள் நாக வடிவில் சூரிய, சந்திரனை விழுங்க முயலும் அமைப்புடன் காட்சி தருகின்றனர். இந்த கிரகங்கள் சுவாமி சன்னதி எதிரேயுள்ள மண்டபத்தின் மேல் சுவரில் உள்ளன. வெள்ளிக்காப்பு அணிவிக்கப்பட்டுள்ளது. ராகு, கேது தோஷம் உள்ளவர்கள் இந்த கிரகங்களுக்குரிய தானியமான உளுந்து, கொள்ளு தானியம், மந்தாரை மற்றும் செவ்வரளி மலரை திருவேட்டீஸ்வரருக்கு படைத்து வழிபடுகிறார்கள்.
சுவாமி சிறப்பு: சிவன் கோயில்களில் அர்த்தஜாம பூஜை முடிந்து, பள்ளியறை பூஜையின்போது பெரும்பாலும் சிவனின் பாதமே கொண்டு செல்லப்படும். ஆனால், இங்கு பள்ளியறைக்குள் சிவனே செல்கிறார். இதற்காக சிலை ஒன்று செய்யப்பட்டுள்ளது. இவர் அர்த்த மண்டபத்தில் காட்சி தருகிறார். கோஷ்டத்தில் யோக தெட்சிணாமூர்த்தி, இடது காலை குத்திட்டு அமர்ந்தபடி காட்சி தருகிறார். இவருக்கான உற்சவரும் இங்கிருக்கிறார். இத்தலத்தில் சிவனை, இந்திரன் வழிபட்டதாக ஐதீகம். இதனடிப்படையில் புரட்டாசியில் இந்திரபூஜை விழா நடக்கிறது. அப்போது, சுவாமி சன்னதி முழுதும் காய்கறி, பழம் மற்றும் இனிப்பு வகைகளால் அலங்காரம் செய்யப்படுகிறது.
நவக்கிரக பூஜை: இக்கோயிலில் தினமும் காலை (முதல்) பூஜையின்போது மூலவர் அருகில் ஸ்படிக லிங்கத்தையும், அருகில் நவக்கிரகங்களுக்கு உரிய நவரத்தினங்களையும் வைக்கின்றனர். பின்பு, ஒவ்வொரு கிரகத்திற்குமான தானியம் மற்றும் மலர்களை படைத்து பூஜை செய்கின்றனர். அதன்பிறகு, சூரியனுக்கு வைத்த மலரை, பிரகாரத்திலுள்ள சூரியன் சிலை முன்பு வைத்து தீபாராதனை செய்யப்படுகிறது. இதன் பின்பே, மூலவருக்குரிய பூஜை நடக்கிறது. அப்போது சிவனுக்குரிய 300 திருமந்திரங்கள் சொல்லி "ருத்ரதிரிசதை அர்ச்சனை' செய்கின்றனர். இந்நேரத்தில் சிவனை வழிபட்டால் கிரக தோஷம் நீங்கும் என்பது நம்பிக்கை.
கண்ணப்ப நாயனார்: சிவன் வேடராக வந்தபோது, அர்ஜுனன் அவரை அறியாமல் அடித்துவிட்டதற்கு வருந்தினான். அவனே, அடுத்த பிறப்பில் கண்ணப்பன் என்னும் வேடனாக பிறந்தான். சிவனுக்கு தன் கண்ணையே கொடுத்து பரிகாரம் தேடிக்கொண்டான். சிவனருளால் நாயனாராகவும் அந்தஸ்து பெற்றார். அர்ஜுனன் வழிபட்ட தலமென்பதால் இங்கு கண்ணப்ப நாயனார் உற்சவராக இருக்கிறார். இவர் தை மிருகசீரிஷத்தில், குருபூஜையின்போது வீதியுலா செல்கிறார். பிரகாரத்தில் மனைவி சங்கிலி நாச்சியாருடன் சுந்தரர் மற்றும் வள்ளலாருக்கு சன்னதி இருக்கிறது. பூச நட்சத்திரத்தில் வள்ளலாருக்கு சிறப்பு பூஜை நடக்கிறது. தைப்பூசத்தன்று உற்சவ வள்ளலார் வீதியுலா செல்கிறார். இதுதவிர உற்சவர் சண்முகர் சன்னதியிலும் வள்ளலார் சிலை உள்ளது.
தல வரலாறு:
அர்ஜுனன் தீர்த்த யாத்திரை மேற்கொண்ட சமயத்தில், ஒரு பன்றியை வேட்டையாடினான். சிவபெருமான் வேடன் வடிவில் சென்று, அது தனக்குரியது என்று சொல்லி அவனை சண்டைக்கு இழுத்தார். அவருடன் போரிட்ட அர்ஜுனன் அம்பு எய்யவே, சிவனின் தலையை பதம் பார்த்தது. ரத்தம் வழிய நின்ற வேடன், சுயரூபம் காட்டினார். வருந்திய அர்ஜுனன் மன்னிப்பு வேண்டினான்.
சிவன் அவனை மன்னித்ததோடு, பாசுபதாஸ்திரம் கொடுத்தருளினார். அதன்பின், அவன் பல இடங்களில் சிவவழிபாடு செய்தான். அவன் இத்தலத்திற்கு வந்தபோது, இங்கும் சுயம்புலிங்கத்தைக் கண்டு வழிபட்டான். வேடன் வடிவில் வந்து அர்ஜுனனுக்கு அருள் புரிந்தவர் என்பதால், இவர் "திருவேட்டீஸ்வரர்' என்று பெயர் பெற்றார். பார்த்தபிரகரலிங்கம்' (பார்த்தன் அர்ஜுனன்) என்றும் இவருக்கு பெயர் உண்டு.
சிறப்பம்சம்:
அதிசயத்தின் அடிப்படையில்:ராகு கேது பரிகார தலம், சிவன், அம்பாள், சண்முகர் என மூவருக்கும், மூன்று கொடிமரத்துடன் அமைந்த தலம் இது. மகாலட்சுமி, திருமாலை மணந்து கொள்வதற்காக இங்கு சிவனை வணங்கியதாக ஐதீகம். இதன் அடிப்படையில் இங்குள்ள ஒரு தூணில் மகாலட்சுமி கைகளில் கலசத்தை வைத்து, சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்தபடி காட்சி தருகிறாள். மகாலட்சுமி, சரஸ்வதியும் மற்றொரு சன்னதியில் அருகருகே இருக்கின்றனர். சரஸ்வதியிடம் வீணை கிடையாது. இக்கோயிலுக்கான விநாயகர், எதிரே தனிச்சன்னதியில் இருக்கிறார். பக்தர்கள் இவருக்கு தேங்காய் மாலை சாத்தி, தேங்காய் எண்ணெய் தீபம் ஏற்றி வழிபடுகிறார்கள். பிரகாரத்தில் சண்முகர் தனிச்சன்னதியில் ஆறு முகங்களுடன் மயில் மீது அமர்ந்த கோலத்தில் காட்சி தருகிறார். ஒவ்வொரு சஷ்டியின்போதும் இவருக்கு 6 மலர்கள், 6 நைவேத்யம், 6 வகையான பழங்கள் படைத்து, 6 குருக்கள் "சத்ருசம்ஹார திரிசதை' பூஜை செய்வது சிறப்பு.