இங்கு வள்ளி, தெய்வானையுடன் முருகன், ஸ்ரீதேவி, பூதேவியுடன் திருமால், கருடன், ஐயப்பன், ராமர், ஆஞ்சநேயர், தட்சிணாமூர்த்தி மற்றும் நவக்கிரகங்களையும் தரிசிக்கலாம்.
பிரார்த்தனை
திருமண தடை நீங்க, குழந்தை வரம், நோய்நொடிகள் குணமாக, சகல பிரச்சனைகளும் தீர பக்தர்கள் பிரார்த்தனை செய்து கொள்கின்றனர்.
நேர்த்திக்கடன்:
பக்தர்கள் தங்கள் பிரார்த்தனை நிறைவேறியதும் கருடபகவானுக்கு அர்ச்சனை செய்தும், முருகனுக்கு செவ்வரளி சார்த்தி அத்துடன் தேன் கலந்த தினைமாவும், ரவா கேசரியும் சமர்ப்பித்து, நெய் விளக்கு ஏற்றி வழிபடுகின்றனர்.
தலபெருமை:
திருமாலுக்கு மார்கழி முப்பது நாளும் விசேஷம்! வைகுண்ட ஏகாதசியின்போது செய்யப்படும் புஷ்பப் பந்தல் அலங்காரத்தைத் தரிசிக்கப் பெருங்கூட்டம் கூடும். இந்தக் கோயிலின் மற்றொரு சிறப்பம்சம் கருடபகவான் தரிசனம். இவரைப் பிரார்த்தித்து அர்ச்சனைகள் செய்து வழிபட, திருமணத் தடை நீங்கும்; குழந்தை இல்லாத தம்பதிக்கு பிள்ளைச்செல்வம் வாய்க்கும் என்கிறார்கள். இங்கே குடியிருக்கும் துர்கையம்மனும் வரப்ரசாதியானவள். இந்தத் தேவிக்கு ஆடி வெள்ளிக்கிழமைகளில் சந்தனக்காப்பு; ஆடிப்பூரத்தன்று வளையல் சாத்துதல் சிறப்பாக நடைபெறுகிறது.
திருமால் மருகனாம் முருகப்பெருமானுக்கு செவ்வரளி சார்த்தி வழிபடுவது விசேஷம். அத்துடன், தேன் கலந்த தினைமாவும், ரவா கேசரியும் சமர்ப்பித்து, நெய் விளக்கு ஏற்றி வைத்து இவரை வழிபட, நோய்நொடிகள் குணமாகும். சகல பிரச்னைகளும் தீரும் என்கின்றனர் பக்தர்கள். ஆடி கிருத்திகையில் காவடி உத்ஸவம் கோலாகலமாக நடைபெறுகிறது. வெளிநாட்டில் வசிக்கும் பக்தர்களும் வேண்டுதல் நிறைவேறியதும் ஆடி கிருத்திகைக்கு இங்கு வந்து, அழகன் முருகனுக்குக் காவடி எடுத்துப் பிரார்த்தனை செலுத்துகிறார்கள். தவிர, அலகு குத்திக்கொண்டும், பாற்குடம் எடுத்து வந்தும் தங்கள் பிரார்த்தனையை நிறைவேற்றுகிறார்கள் பக்தர்கள். தைப்பூசம், பங்குனி உத்திரம், வைகாசி விசாகம் ஆகிய திருநாட்களும் இங்கே வெகு சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.
தல வரலாறு:
மருகன் என்றால் மருமகன் என்று பொருள். பாற்கடல் வாசனாம் திருமாலின் சகோதரி பார்வதிதேவி. எனில், பார்வதியின் மைந்தன் முருகப் பெருமான் திருமாலுக்கு மருமகன்தானே?! ஆகவேதான் இவருக்குத் திருமால் மருகன் என்று திருப்பெயர். திருத்தணி மிதியா பாதமும், திருப்பதி வணங்கா முடியும் பாழ் என்பார்கள் ஆன்மிக ஆன்றோர். அந்த இரண்டு தலங்களிலும் உறையும் தெய்வங்களை ஒருங்கே தரிசிக்கும் வாய்ப்பைத் தருகிறது இந்தத் திருத்தலம். இங்கே மாலுக்கும் மருகனுக்கும் இடையே கொலுவீற்றிருக்கும் அமிர்தகணேச நாயகனாம் ஆனைமுகனும் கொள்ளை அழகு!
சிறப்பம்சம்:
அதிசயத்தின் அடிப்படையில்:இங்கு முருகப்பெருமானுடன், பெருமாளும் சேர்ந்து அருள்பாலிப்பது சிறப்பு.