|
ஆடித் திருவிழா இங்கு அமர்க்களமாக நடந்தேறும், ஆடி மாதம் துவங்குவதற்கு முன்னதாக வரும் திங்கட்கிழமையில், அதிகாலை வேளையில் பந்தக்கால் நட்டு, சிறப்பு ஹோமங்கள் நடைபெறும் .பிறகு ஆடி முதல் வெள்ளியன்று கணபதி ஹோமம் வளர்த்து பூஜைகள் முடிந்ததும் காப்புக் கட்டி சுப தருணத்தில் பதி விளக்கு ஏற்றுகிறார்கள் இது, இந்தக் கோயிலின் சிறப்பம்சம். விளக்கு ஒன்றில் தீபம் ஏற்றி, அதைச் சிம்ம வாகனத்தில் வைத்து அம்மனிடம் உத்தரவு பெறுவார்கள். இந்தத் தலத்தில் உனக்குத் திருவிழா நடத்தப் போகிறோம் நடத்தலாமா? கூழு ஊத்துவதற்கு உன் அனுமதி வேண்டும்என, பிரகாசமாக எரியும் அந்த விளக்கு ஜோதியின் மூலம் அம்மனிடம் அனுமதி கேட்கிறார்கள்.
அம்மன் உத்தரவு கிடைத்ததும், பொங்கல் வைத்து வழிபாடு நடைபெறும். அன்றைய தினமே ஊர் எல்லையில் உள்ள பெரிய பாளையத்து அம்மன் கோயிலில் இருந்து கும்டீம் வைத்து, சக்தி கிரகம் எடுத்து வருவார்கள். மறுநாள், சனிக்கிழமை அபிஷேக ஆராதனைகளைத் தொடர்ந்து, அம்மனின் வரலாற்றை கோயில் பூசாரிகள் கதையாகச் சொல்வார்கள். ஞாயிறன்று கூழ்வார்க்கும் வைபவம், அதைத் தொடர்ந்து அம்மனின் திருவீதியுலா நடைபெறுகிறது.
ஆடி வெள்ளிகளில் சந்தனக்காப்பு அலங்காரத்தில் காட்சி தரும் அம்மனைத் தரிசிக்கக் கண்ணிரண்டு போதாது! ஆடி மாதம் 4-வது வெள்ளியும், தை மாதம் 4-வது வெள்ளியும், கோயிலில் திருவிளக்கு பூஜை நடைபெறுகிறது. விழா துவக்கத்தில் பதி பூஜையில் எலுமிச்சைப் பழம் சமர்ப்பிப்பார்கள். பிறகு ஞாயிறன்று கும்பம் கலைக்கும் தருணத்தில், குழந்தை வரம் வேண்டும் பெண்களுக்கு அந்தப் பழங்கள் பிரசாதமாகத் தரப்படும். அதை வாங்கிச் செல்லும் பெண்களுக்கு விரைவில் குழந்தை பாக்கியம் கிடைக்கும். அதேபோன்று, கல்யாணம் தடைப்படும் அன்பர்களுக்கு இங்கே மஞ்சள் கயிறுக கட்டுகிறார்கள். இதனால் வெகு சீக்கிரமே கல்யாணம் கைகூடும் என்பது நம்பிக்கை. ஆடிப்பூரமும் இங்கே விசேஷம்! அன்று சுமங்கலிகளுக்கு திருமாங்கல்யக் கயிறு, வளையல், குங்குமம், சீப்பு, கண்ணாடி என ஐந்து வகை பிரசாதங்கள் தரப்படுகின்றன. |
|