பிட்சாடனராக வந்த சிவன் அர்த்த மண்டபத்தில் உற்சவர் வடிவில் இருக்கிறார்.முன்மண்டபத்தில் 12 ராசிகள் குறித்த கட்டம் மேல் விதானத்தில் இருக்கிறது. இதற்கு கீழே நின்றுகொண்டு சிவ லிங்கத்தையும், பிட்சாடனாரையும் ஒரே நேரத்தில் வழிபட்டால் ராசி மற்றும் கிரகதோஷங்கள் நீங்கும் என்கிறார்கள்.
பிரகாரத்திலும் பிட்சாடனார் சிலை இருக்கிறது. பல்லாண்டுகளுக்கு பின்பு இத்தலம் பராய் மரங்கள் நிறைந்த வனமாக இருந்தபோது, சிவலிங்கம் இருந்ததைக் கண்டு கோயில் எழுப்பப்பட்டது.
சுவாமியும் "பராய்த்துறை நாதர்' என்ற பெயர் பெற்றார். கருவறைக்கு பின்புள்ள பிரகாரத்தில் தலவிருட்சம் பராய் மரத்தின் அடியிலும் ஒரு சிவலிங்கம் இருக்கிறது.
இந்த மரத்தின் அடியில் சிவன் காட்சி தந்ததாக சொல்கிறார்கள். அம்பாள் பசும்பொன் மயிலம்மையும், நடராஜரும் தனிதனிச்சன்னதிகளில் தெற்கு பார்த்தபடி அருளுகின்றனர். வைகாசியில் பிரம்மோற்ஸவம் நடக்கும்போது தேரில் நடராஜர் மட்டும் எழுந்தருளி வீதியுலா வருகிறார். அவருடன் அம்பாள்கூட வருவதில்லை.
இது வித்தியாசமானதாகும். திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், அருணகிரியார் ஆகியோர் இத்தலம் மற்றும் சுவாமியைக் குறித்து பாடியுள்ளார்.
இத்தலத்தின் அருகேயுள்ள காவேரி "அகண்ட காவேரி' என்கின்றனர். இங்கிருந்து சுமார் 2 கி.மீ., தூரத்தில் காவேரி, கொள்ளிடம் என இரண்டு நதிகளாக இது பிரிகிறது.
மாயூரத்தில் (மயிலாடுதுறை) ஐப்பசிமாதம் கடைசி நாளன்று "கடை முழுக்கு' எனும் துலா ஸ்நானம் நடப்பதுபோல இங்கு ஐப்பசி மாதம் முதல் தேதியில் காவேரிக் கரையில் "முதல் முழுக்கு' எனும் துலாஸ்நானம் நடக்கிறது. இந்நாளில் சிவன், அம்பாளுடன் ரிஷப வாகனத்தில் காவிரிக்கரையில் எழுந்தருளுகிறார்.
இந்நாளில் காவேரியில் நீராடி சுவாமியை வணங்கினால் பாவங்கள் நீங்கும் என்பது நம்பிக்கை. பிரகாரத்தில் முருகன் வள்ளி, தெய்வானையுடன் தனிச்சன்னதியில் இருக்கிறார். இவரை குறித்து அருணகிரியார் திருப்புகழில் பாடியுள்ளார். இவருக்கு அருகில் மற்றொரு சன்னதியில் இருக்கும் தண்டாயுதபாணி காலில் செருப்பு அணிந்த கோலத்தில் இருக்கிறார்.
திருமணத்திற்கு வரன் தேடுபவர்கள் சப்தகன்னிகளில் ஒருவளான வராகிக்கு அபிஷேகம் செய்து, தீபம் ஏற்ற வழிபடுகின்றனர். இத்தல விநாயகரின் திருநாமம் செல்வ விநாயகர். கோயில் ராஜகோபுரம் 7 நிலை உடையது.
|