ஆடி, தை மாதம் முழுதும் திருவிழா, சித்ராபவுர்ணமி, நவராத்திரி, ஆடிப்பூரம்.
தல சிறப்பு:
பொதுவாக ஐப்பசி பவுர்ணமியில் சிவனுக்கு தான் அன்னாபிஷேகம் நடக்கும். ஆனால் இத்தலத்தில் அம்மனுக்கு அன்னாபிஷேகம் நடப்பது சிறப்பு.
திறக்கும் நேரம்:
காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்
முகவரி:
அருள்மிகு முண்டக கண்ணியம்மன் கோயில்,
மயிலாப்பூர்,
சென்னை- 600 004.
போன்:
+91- 44 - 2498 1893, 2498 6583.
பொது தகவல்:
இங்கு அம்பாளின் சுயம்பு வடிவத்திற்கு நாக கிரீடம் அணிவித்து, 2 கரங்களுடன் அமர்ந்த கோலத்தில் அலங்கரிக்கின்றனர். இவளுக்கு மேலே சிறிய விமானம் அமைக்கப்பட்டிருக்கிறது. அதிலேயே துவாரபாலகிகள் இருக்கின்றனர். காலை 6 மணியில் இருந்து 11.30 மணி வரையில் அபிஷேகம் நடக்கும்போது மட்டுமே அம்பாளை சுயம்பு வடிவில் தரிசிக்க முடியும். இந்த அபிஷேகத்தில் பக்தர்கள் கலந்து கொள்ள, ரூ.150 கட்டணம்.
இவளிடம் வேண்டிக்கொள்பவர்கள் மஞ்சள், சந்தனம், குங்குமம் காப்பு மற்றும் அன்னாபிஷேகம் செய்வது விசேஷம். பொதுவாக சிவன் கோயில்களில்தான் சுவாமிக்கு அன்னாபிஷேகம் செய்து வேண்டிக்கொள்வர். ஆனால், இங்கு அம்பிகை பார்வதியின் அம்சம் என்பதால் இவளுக்கு அன்னாபிஷேகம் செய்து வழிபடுவது விசேஷம். இவளுக்கான நைவேத்யமான பொங்கல் தயாரிக்க பசுஞ்சாணத்தில் செய்த வறட்டியையே பயன்படுத்துகின்றனர். இதில் கிடைக்கும் சாம்பலையே பிரசாதமாகவும் தருவது விசேஷம். 1008 மலர் கூடை அபிஷேகம்: இக்கோயிலில் அம்பாளுக்கு பூஜித்த வேப்பிலை, மஞ்சள், எலுமிச்சை மற்றும் தீர்த்தமே பிரதான பிரசாதமாக கொடுக்கப்படுகிறது. அம்பிகை சன்னதியின் முகப்பில் பிராம்மி, மகேஷ்வரி, வைஷ்ணவி, வராஹி, கவுமாரி, இந்திராணி, சாமுண்டி ஆகிய சப்த கன்னியரும் சிலை வடிவில் காட்சி தருகின்றனர். ஆடி, தை மாதம் முழுதும் இங்கு விழா எடுக்கப்படுகிறது. ஆடி மாதத்தில் கூழ் ஊற்றும் விழாவும், தை மாதத்தில் பொங்கல் வைக்கும் வைபவமும் பிரசித்தி பெற்றது.
ஆடி கடைசி வெள்ளியில் 1008 மலர்க்கூடை அபிஷேகம், தை கடைசி வெள்ளியில் 108 விளக்கு பூஜை, சித்ரா பவுர்ணமியில் 1008 பால்குட அபிஷேகம் நடப்பது விசேஷம். நவராத்திரி ஒன்பதாம் நாளில் அம்பிகை, மகிஷாசுரமர்த்தினி அலங்காரத்தில் வீதியுலா செல்கிறாள். இவளிடம் வேண்டுபவர்கள் வேப்பிலையை ஆடையாக அணிந்து சன்னதியை வலம் வந்து நேர்த்திக்கடன் செலுத்தும் வழக்கமும் இருக்கிறது. தினமும் மாலையில் அம்பிகை தங்கத்தேரில் உலா செல்கிறாள். இதில் பங்கேற்க கட்டணம் ரூ. 1000.
பிரார்த்தனை
அம்மை நோய் கண்டவர்கள் அம்பாளிடம் வேண்டிக்கொள்ள நிவர்த்தியாவதாக நம்பிக்கை. திருமண தோஷம், கண்நோய் நீங்கவும் இங்கு அதிகளவில் வேண்டிக்கொள்கிறார்கள். கல்வியில் சிறப்பிடம் பெற அம்பிகைக்கு 23 விளக்கேற்றி வழிபடுகிறார்கள்.
நேர்த்திக்கடன்:
பிரார்த்தனை நிறைவேறியவர்கள் அம்பிகைக்கு அபிஷேகம், அங்கபிரதட்சணம் செய்து நேர்த்திக்கடன் நிறைவேற்றுகின்றனர்.
தலபெருமை:
முண்டககண்ணியம்மன் சிவன், விஷ்ணு, பிரம்மா என மும்மூர்த்தி அம்சத்துடன் காட்சி தருவதாக ஐதீகம். அம்பாள் சன்னதிக்கு பின்புறத்தில் ஆலமரம் இருக்கிறது. இம்மரத்திற்குள் நாக புற்றும், அருகில் நாகதேவதை சன்னதியும் இருக்கிறது. நாக தோஷம் உள்ளவர்கள் நாகதேவதைக்கு பால், பன்னீர், மஞ்சள் அபிஷேகம் செய்து, நெய்தீபம் ஏற்றி வழிபடுகிறார்கள். மூலஸ்தானத்திற்கு இடப்புறத்தில் உற்சவ அம்பாள் சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கிறாள்.
இவளுக்கு இருபுறமும் சிம்ம வாகனம் இருக்கிறது. பிரகாரத்தில் சப்த கன்னியர் லிங்கம் போன்ற அமைப்பில் காட்சி தருகின்றனர். இவர்களுக்கு இருபுறமும் ஜமதக்னி மகரிஷி மற்றும் அவரது மகன் பரசுராமர் இருவரும் காவல் தெய்வமாக இருக்கின்றனர். கோயில் முகப்பில் அரசமரத்தின் கீழ் விநாயகர் இருக்கிறார். நாக தோஷம் உள்ளவர்கள் இம்மரத்தின் கீழ் நாகர் பிரதிஷ்டை செய்து வேண்டிக்கொள்கிறார்கள்.
நாயன்மார்களில் வாயிலார், ஆழ்வார்களில் பேயாழ்வார் அவதரித்த தலம் இது. இக்கோயிலை சுற்றி கபாலீஸ்வரர், பார்த்தசாரதி, மாதவப்பெருமாள் ஆகிய பிரசித்தி பெற்ற பிற தலங்கள் அமைந்திருக்கிறது. முண்டக கண்ணியம்மனை தரிசிக்கச் செல்பவர்கள் இத்தலங்களையும் தரிசித்து திரும்பலாம்.
தல வரலாறு:
முற்காலத்தில் இத்தலத்தில் தாமரைக் குளம் ஒன்று இருந்தது. அதன் கரையிலிருந்த ஆலமரத்தின் அடியில் அம்பாள், சுயம்பு ரூபமாக எழுந்தருளினாள். பக்தர்கள் ஆரம்பத்தில் அம்பாளுக்கு ஓலைக்குடிசை வேய்ந்து சிறிய சன்னதி அமைத்தனர். பிற்காலத்தில் கோயில் விரிவாக கட்டப்பட்டது. ஆனாலும் அம்பிகையின் உத்தரவு கிடைக்காததால் மூலஸ்தானம் மட்டும், தற்போதும் குடிசையிலேயே இருக்கிறது.
அம்பாள், எளிமையை உணர்த்துவதாக ஓலைக்குடிசையின் கீழிருந்து அருளுவதாக சொல்கிறார்கள். இத்தலத்து அம்பிகையின் சுயம்பு வடிவம் தாமரை மொட்டு போன்ற வடிவில் காட்சியளிக்கிறது. எனவே இவள், "முண்டககண்ணியம்மன்' என்று அழைக்கப்படுகிறாள். முண்டகம் என்றால் "தாமரை' என்று பொருள். சுயம்புவின் மத்தியில் அம்பிகையின் பிரதான ஆயுதமான சூலம் இருப்பது சிறப்பான அமைப்பு.
சிறப்பம்சம்:
அதிசயத்தின் அடிப்படையில்:பொதுவாக ஐப்பசி பவுர்ணமியில் சிவனுக்கு தான் அன்னாபிஷேகம் நடக்கும். ஆனால் இத்தலத்தில் அம்மனுக்கு அன்னாபிஷேகம் நடப்பது சிறப்பு.
இருப்பிடம் : மயிலாப்பூர் பகுதியின் மத்தியில் கோயில் அமைந்துள்ளது. கபாலீஸ்வரர் கோயில் ஸ்டாப் அல்லது திருவள்ளுவர் சிலை ஸ்டாப்பில் இறங்கி நடந்தே சென்றுவிடலாம்.
நகரின் அனைத்து பகுதிகளில் இருந்தும் மயிலாப்பூருக்கு பஸ் வசதி உண்டு.
அருகிலுள்ள ரயில் நிலையம் :
மயிலாப்பூர், எக்மோர்
அருகிலுள்ள விமான நிலையம் :
சென்னை மீனம்பாக்கம்.
தங்கும் வசதி : சென்னை
தாஜ் கோரமண்டல் போன்: +91-44-5500 2827 லீ ராயல் மெரிடியன் போன்: +91-44-2231 4343 சோழா ஷெரிட்டன் போன்: +91-44-2811 0101 தி பார்க் போன்: +91-44-4214 4000 கன்னிமாரா போன்: +91-44-5500 0000 ரெய்ன் ட்ரீ போன்: +91-44-4225 2525 அசோகா போன்: +91-44-2855 3413 குரு போன்: +91-44-2855 4060 காஞ்சி போன்: +91-44-2827 1100 ஷெரிமனி போன்: +91-44-2860 4401, 2860 4403 அபிராமி போன்: +91-44-2819 4547, 2819 2784 கிங்ஸ் போன்: +91-44-2819 1471 சன் பார்க் போன்: +91-44-4263 2060, 4264 2060