|
பிரம்மாவின் புத்திரரான புலஸ்தியருக்கும் திருவண விந்துவின் புத்திரிக்கும் விஸ்வாரா என்பவர் பிறந்தார். இந்த விஸ்வாராவின் மகனே குபேரன். இவரது மாற்றாந்தாய்க்கு பிறந்தவனே ராவணன். முதலில் இலங்கை அதிபதியாக இருந்தவர் குபேரனே. அவரிடம் இருந்து ராவணன் ஆட்சியைக் கைப்பற்றி விட்டான். குபேரனின் விமானம் எங்கு பறந்து சென்றாலும் அந்த விமானம் தங்கம், முத்து ஆகியவற்றை சிந்திக் கொண்டே செல்லும். குபேரனை ராவணன் இலங்கையில் இருந்து வெளியேற்றியதைத் தொடர்ந்தே அவன் பல சோதனைகளைச் சந்திக்க நேர்ந்தது என்றும், கூறுவதுண்டு. குபேரன் சிவனிடம் அதிக பக்தி கொண்டவர். குபேரன் கடுந்தவம் புரிந்து சிவனை வழிபட்டார். அவரது பக்திக்கு மெச்சிய சிவனும், பார்வதி சமேதராகக் காட்சி தந்தார். சிவனுடன் அழகே வடிவான பார்வதியைக் கண்ட குபேரன், "ஆஹா இப்படியொரு தேவியை இதுநாள் வரை துதிக்கவில்லையே' என்று எண்ணினான்.இந்த நினைப்பில் குபேரனின் ஒரு கண் துடித்து அடங்கியது. இதைப் பார்த்து பார்வதி மிகவும் ஆத்திரமடைந்து, குபேரனின் துடித்த கண்ணை வெடிக்கச் செய்தாள். குபேரனுக்கு ஒரு கண் போய் விட்டது. பின், அவர் மன்னிப்பு கேட்க, பார்வதியும் பெருந்தன்மையுடன் குபேரனை மன்னித்தாள். ஆனால், போன கண் போனது தான் என்றாலும் அதற்குப் பதிலாக சிறிய கண் ஒன்றை குபேரனுக்கு தோன்றும்படி செய்தார் சிவபெருமான்.அத்துடன் குபேரனின் தவத்தையும், பூஜையையும் மெச்சி எட்டு திக்கு காவலர்களில் ஒருவராக குபேரனை சிவன் நியமித்தார். அதன்பின், லட்சுமி தேவி குபேரனை தன தானிய அதிபதியாக்கினாள். அதாவது பணத்துக்கும், தானியத்துக்கும் அவர் சொந்தக்காரர் அல்ல, அவற்றை கண்காணிப்பது மட்டுமே அவர் பொறுப்பு. கொடுப்பது அன்னை லட்சுமி.
ஓம் யஷயாய குபேராய வைஸ்ரவனாய தனதாந்யாதி பதயே தநதாந்ய ஸம்ரும்திம்மே, தேஹி தபாயஸ்வாஹ!
என்ற குபேர மந்திரத்தை தினமும் சொல்லி குபேரனின் பேரருளைப் பெறுவோம்.
|
|