ஒரு கோயிலின் கோபுர வாசலில் துறவி ஒருவன் ஜாகை வைத்துக்கொண்டிருந்தான். எதிரில் ஒரு தாசி வீடு, அந்த வீட்டுக்கு ஆட்கள் தினமும் வந்து போவதைத் துறவி பார்த்துக்கொண்டே வந்தான்; இவ்வளவு பேர் கெட்டுப் போகிறார்களே என்று துறவி மிகவும் வருந்தி ஒரு நாள் தாசியைக் கூப்பிட்டு அவளைக் கண்டித்தான். பாவி! இரவும் பகலும் நீ இம்மாதிரி தீயவழியில் கழிக்கிறாய். யமன் உன்னை இழுத்துப்போகும் சமயத்தில் என்ன செய்யப்போகிறாய்? என்று அவளை ஏசினான் துறவி, இவ்வாறு அழைத்துச் சொன்னது அந்தத் தாசியின் மனதில் பட்டு, அவள் தன் வாழ்க்கையைப் பற்றி வருந்தி ஆண்டவனைப் பிரார்த்திக்கத் தொடங்கினாள். ஆண்டவனே! நான் செய்யும் பாவத்தை நீ தான் தீர்க்க வேண்டும். என்று மிக நொந்து, தினமும் பகவானை எண்ணி வந்தித்து வந்தாள். ஆனால் அவளுக்குப் பிழைக்க வேறு வழியில்லை; பழைய விருத்தியிலேயே இருந்து வந்தாள்.
ஐயோ வேறு வழியில்லாமல் இப்படிச் செய்கிறேன். ஆண்டவனே என்னை எப்படியாவது காப்பாற்று! என்று இரவும் பகலும் பகவானை வணங்கி வந்தாள். துறவி பார்த்தான். ஏது, என் பேச்சு ஒன்றும் பலிக்கவில்லை. இவள், தன் பழைய தொழிலை விட வில்லை. பார்க்கலாம்; இவளைத் தேடி மொத்தம் எத்தனை பேர் வருகிறார்கள். கணக்கெடுப்போம் என்று தீர்மானித்தான். அதுமுதல் அத்துறவியின் கவனம் அந்தத் தாசி வீட்டின் மேலேயே சென்று. அவள் வீட்டுக்கு வந்த ஆட்களை எண்ணி வந்தான். ஆள் ஒன்றுக்கு ஒரு கல்லாகக் கணக்கு வைத்துக் கொண்டே வந்தான். நாள் செல்லச் செல்லக் கற்குவியல் உயர்ந்து வளர்ந்தது. ஒரு நாள் மறுபடியும் துறவி அந்த தாசியை அழைத்து அவளுக்குச் சொன்னான்; பார்த்தாயா, இந்தக் கற்களின் குவியலை! இந்தக் கற்கள் உன் பெரும் பாவங்களின் எண்ணிக்கை. நான் சொன்னதைக் கேட்காமல் உன் தொழிலிலேயே இருக்கிறாய். நான் எச்சரித்த பிறகும் நீ செய்துவந்த பிழையின் எண்ணிக்கை இது. நீ அனுபவிக்க வேண்டிய நரக தண்டனையை இதிலிருந்து அறிந்துகொள், உனக்குக் கதியே இல்லை; போ! என்றான்.
தாசி நடுங்கினாள் கற்குவியலைப் பார்த்து ஆண்டவனை! நான் என்ன செய்வேன்! என்று பயந்தவளாக வீடு சென்றாள். வீடு போய்ச் சேர்ந்ததும் துக்கத்தைத் தாங்க முடியாமல் அழத் தொடங்கினாள். ஹே, கிருஷ்ணா! என்னை எப்படியாவது கை தூக்கிவிடமாட்டாயா? என் உயிரை எடுத்துக்கொள் என்று கதறிக் கதறி அழுது, ஓய்ந்து மெய்மறந்து போனாள். ஆண்டவன் அந்தப் பேதையின் பேரில் கருணை கொண்டான். யமதருமராஜா அன்றிரவே அவளுடைய உயிரைக் கொண்டேகினான். துறவியின் காலமும் அன்றிரவே முடிந்து விட்டது, அவன் உயிரும் உடலை நீத்துச் சென்றது. ஆச்சர்யத்திலும் ஆச்சர்யம்! துறவியின் உயிரை யம கிங்கரர்கள் பிடித்து இழுத்துக்கொண்டு நரகம் சென்றார்கள்; ஆனால் தன் பாவத்தை எண்ணி வருந்திய தாசியின் உயிரோ விஷ்ணு பதம் சென்றது. துறவி விண்ணுலகம் சென்றுகொண்டிருந்த தாசியின் ஆன்மாவை வழியில் பார்த்து, ஏ, தாசி! நீயா பரமபதம் செல்வது? எண்ணற்ற பாவங்கள் செய்தாய். நான் வைத்த கணக்கே பெருங் குவியலாகக் குவிந்தது. நானோ சுத்தத் துறவியாக இறந்தேன். ஒரு பிழையும் செய்யவில்லை. என்னை நரகம் போக விட்டு, உன்னை ஆண்டவன் தன் பதத்துக்கு அழைத்துச் செல்கிறான். இந்த ஆண்டவன் தருமம் அறியாதவன்! என்று கூக்குரலிட்டான்.
விஷ்ணு தூதர்கள் துறவிக்குச் சமாதானம் சொன்னார்கள்; அப்பனே! கதற வேண்டாம். ஆண்டவனுக்குப் புத்தித் தடுமாற்றமில்லை! உன் வாழ்க்கை வெளிவேஷமாக இருந்தது. துறவு பூண்ட போதும் நீ தேடியது ஆடம்பரமும் புகழும். அதே பார் உன் ஊனுடல். அது பிழையற்றே நின்றது. அதற்காக மக்கள் அதை மலர்களால் அலங்கரித்து வாத்திய கோஷத்தோடு தூக்கிக்கொண்டு போகிறார்கள். நீ தூய்மையாக வைத்திருந்த ஊனுடல் பெருமையடைந்து விட்டது! ஆனால் நீதான் நரகம் செல்கிறாய். இந்தத் தாசியின் உடல் பல பாவங்கள் செய்தது. அதோ பார்! அவளுடைய உடலைப் பருந்துகள் கொத்தித் தின்கின்றன. அவள் உடலை யாரும் சரியாகத் தகனம் செய்யக்கூட இல்லை. அவள் உள்ளம் தூய நிலையில் இருந்தபடியால் அவளை ஆண்டவன் சன்னிதானத்துக்கு எடுத்துச் செல்கிறோம். தாசியின் குற்றங்கள் நீ எண்ணி வந்தாய் அல்லவா? உன் கவனம் அவள் பாவத்தில் தங்கியபடியால் அந்த அழுக்கு உன்னைப் பற்றிக் கொண்டது. தன் பாவத்தை நினைத்து வருந்தி பகவானைச் சரண் புகுந்து அவளுடைய உள்ளம் பாவத்தினின்று விடுபட்டுப் பரிசுத்தமாயிற்று. தாசியின் பாவங்களை எண்ணிக் கொண்டிருந்த நீ அவளுடைய பாவங்களைச் சுமக்கிறாய் என்று சொன்னார்கள்.
பிறர் குற்றங்களை எண்ணுவது பக்தனுடைய வேலை அல்ல. ஆண்டவன் விலையை யாரே அறிவார்! அவன் இட்டவழி, அவன் இடும் பரீட்சை. அவற்றின் நன்மையும் தீமையும் ஆண்டவனே அறிவான். தன்னுடைய உள்ளத்தைத் தூய நிலையில் வைத்துக் கொண்டு, பிறரிடம் உள்ள குற்றங்களை அருள் கண்ணால் பார்க்க வேண்டும்.