ஆண்டவன் அருளை அடைந்து ஒருவன் பக்தியாலும் ஒழுக்கத்தாலும் ஞானத்தை பெற்றுவிட்டால், ஒன்றும் சொல்லாமலே அவன் மற்றவர்களுக்கு வழிகாட்டியாகி விடுகிறான். உள்ளத்தில் பக்தி பொங்கி ஆண்டவனை அனுபவித்து வந்தவர்களே, இந்த நிலையை அடைய முடியும். படித்துப் படித்து சாஸ்திர அறிவு மட்டும் பெற்றால் போதாது. இமயமலைப் பனியைப் பற்றிப் புத்தகம் படித்தோ, மற்றவர்கள் சொல்லக் கேட்டோ அடைந்த அறிவினால் ஒருவன் அதை விளக்கி மற்றவர்களுக்குச் சொல்லமுடியுமா? பனியைப்பார்த்தும், தொட்டும், வாயில் போட்டு ருசியும் கண்டவர்களுக்குத் தான் மற்றவர்களுக்கு அதைப்பற்றிச் சொல்லும் திறமை உண்டாகும்.
முக்தி நெறியை நான் அறிந்து கொண்டேன்; மற்றவர்களுக்கும் உபதேசித்து, என்னைச் சுற்றி ஒரு தனிக் குழாம் உண்டாக்கி கொள்ளப் போகிறேன். என்று ஒரு பக்தன் எண்ண ஆரம்பித்தால் அது அகங்காரத்தின் சேஷ்டை என்று அறிந்து கொள்ள வேண்டும். ஆண்டவனுடைய சீட்டு வந்தால் மற்றவர்களுக்குப் போதிக்கும் சக்தி ஒருவனுக்குத் தானாகவே வந்து சேருகிறது. ஆண்டவனுடைய பட்டயம் பெறாமல் ஞானம் புகட்டும் வேலை வெறும் ஆணவக் கூத்தே யொழிய வேறு எவ்விதப் பயனும் அளிக்காது.
புஷ்பங்களில் தேன் நிறைந்தால் வண்டுகள் தாமாகவே வந்து மொய்க்கும். வெல்லம் இருக்கும் இடத்திற்கு வர எறும்புக்குத் தனியாக ஒரு அழைப்பு அனுப்ப வேண்டியதில்லை. ஒரு மனிதன் உண்மையில் ஞானம் பெற்று அவனுடைய வாழ்க்கையானது ஞானம் ஊறிய வாழ்க்கையாகிவிட்டால் ய õரையும் கூப்பிட்டு அழைக்க வேண்டியதில்லை. அவனுடைய ஆத்ம சக்தி அமுத வெள்ளம்போல் நாலா பக்கமும் பாயும் எல்லோரும் அவனைத் தாமாகவே தேடி வருவார்கள். எறும்பையும் தேனீக்களையும் இழுக்கும் இனிப்பு வெல்லத்தில் இருக்கவேண்டும். ஆண்டவன் படைத்த உலகத்தில் மனத்தூய்மையானது வெல்லத்தைப் போன்ற இனிப்பான பொருள். சீடர்களைத் தானாகவே அது இழுத்துக்கொள்ளும். பகவானுடைய அருளைப் பெறாதவர்கள் பிரசாரம் செய்வது பயனற்ற சிரமமேயாகும். அது யாருடைய உள்ளத்தையும் தீண்டாது. பக்தியாலும் ஒழுக்கத்தாலும் ஆண்டவனை அடைந்த அவனுடைய பட்டயம் பெற்றால் மட்டும் சீடர்களை அடைந்து ஆசிரியனாக வேலை செய்ய முடியும். ஆண்டவனுடைய அருள் பெறாத முயற்சி ஒன்றுக்கும் உதவாது.
நெருப்பு ஜொலித்தால் எங்கிருந்தோ திரள் திரளாகப் பூச்சிகள் வந்து அதில் விழுகிறதைப் பார்க்கிறோம். பூச்சிகளுக்கு யாரும் அழைப்புத் தரு கிறதில்லை. ஞானம் பெற்றவர்கள் அந்த நெருப்பைப் போலாவார்கள். அதன் சக்தியே சீடர்களை இழுத்துக் கொள்ளும் எங்கிருந்து வருகிறார்கள் என்று சொல்லக்கூட முடியாது. அருள் பெற்ற குரு எதைச் செய்தாலும் என்ன பேசினாலும் அது ஆண்டவனை ஆராதிக்கும் பூஜையாகவே இருக்கும். அதுவே உபதேசமுமாகும். தனியாக உபதேசமே வேண்டியதில்லை. தன் உள்ளத்தில் பகவானைக் கண்டு, பகவானுடைய நினைவில் ஒருவன் தன் மனதை நிறுத்தினால் அதுவே பிறருக்கும் உபதேசமாய் வேலை செய்யும். சம்ஸார பந்தங்களினின்று விடுதலை அடைவதற்காக ஒருவன் செய்யும் முயற்சியே மற்றவர்களுக்கு உபதேசமாகும். புஷ்பம் மலர்வதைப் போல் அவன் உள்ளம் தேன் நிறைந்து வண்டுகளை இழுத்து அவற்றுக்கு உணவு வழங்கும்.
பெரிய மண்டியில் தானியம் அளந்து விற்கப்படுவதைப் பார்த்திருக்கிறீர்களா? அளந்து போடுகின்றவன் நிறுத்தாமல் அளந்து கொண்டேயிருப்பான். அளந்து போடப் போட ராசியிலிருந்து தானியம் சரிந்து விழுந்து குவிந்து கொண்டேயிருக்கும். அந்த மாதிரியே சத்குருவின் உபதேசமும், ஆண்டவனுடைய பெரிய மண்டியில் தானியம் அளந்து போடுகிறான். ஞானமும் உபதேசமும் வந்து குவிந்து கொண்டே யிருக்கும். வழங்கப்படும் தானியம் ஆண்டவனுடையது. சின்ன பலசரக்குக் கடையில் நடைபெறும் வியாபாரம் வேறு விதம். அங்கே நடைபெறும் வியாபாரத்தில் பண்டம் சீக்கிரம் தீர்ந்து போகும். நூல்களைப் படித்துச் செய்யும் உபதேசத்துக்கும் பக்தியினால் ஆண்டவனுடைய அருளைப் பெற்றுச் செய்யும் உப÷ தசத்துக்கும் இதுவே வித்தியாசம். அருள் பெற்றுச் செய்யும் உபதேசத்தில் பண்டத்துக்குப் பஞ்சமில்லை. நூலைப் படித்துச் செய்யும் உபதேசத்தில் சரக்கு சீக்கிரம் தீர்ந்துபோகும்.
மழை பெய்யும்போது மாளிகைக் கூரையிலிருந்து ஜலம், பெருந்தாரையாகக் கீழே விழுகிறது. கோமுகமாகவும், புலிமுகமாகவும், ஆங்காங்கே கட்டிடத்தில் அமைக்கப்பட்ட கடைகால் கழிகளில் ஜலம் ஏராளமாக விழும்போது, பார்ப்பவர்கள் மாட்டு வாய் அல்லது புலிவாயினின்றுதான் ஜலம் வருவதாக எண்ணலாம். உண்மையில் வானிலிருந்து பெய்யும் மழைதானே அந்தக் கடைகால் வெள்ளமாகிறது? ஞானிகள் உபதேசிக்கும் மொழிகள் அனைத்தும் ஆண்டவன் பெய்யும் அமுத வெள்ளம், அருள் பெற்ற உபதேசிகள் வாயிலாக அந்த வெள்ளம் வருகிறது.
குடத்தில் தண்ணீர் மொள்ளும் பொழுது பொள் பொள் என்று சப்தம் உண்டாகிறது. ஆனால் குடத்தில் தண்ணீர் நிறைந்த பின் சப்தம் நின்றுவிடுகிறது. சாஸ்திரம் மட்டும் படித்தவர்கள் வெகுவாகப் பேசுவார்கள் வாதிப்பார்கள். ஞானம் அடைந்தவர்கள் மவுனமாய்ப் பகவானை அனுபவித்து ஆனந் தத்தில் மூழ்கியிருப்பார்கள்.
விருந்துக்கு ஜனங்கள் கூடியபோது முதலில் கலகல வென்று சப்தம் உண்டாகும். எல்லோரும் பேசிக் கொண்டிருப்பார்கள். ஆனால் சாப்பிட ஆரம் பித்ததும் சப்தம் அடங்கிப் போகும். பரிமாறத் தொடங்கும் போது, முக்கால் பங்கு இரைச்சல் நின்று போகும் பாயசம் வந்தவுடன் சாப்பாட்டுக் கூடம் நிச்சப்தமாகி விடும், உர் உர் என்று உறிஞ்சும் சப்தம் ஒன்று தான் கேட்கும். சாப்பிட்டு முடிந்ததும் எல்லோரும் திண்ணையில் படுத்துத் தூங்கியே ÷ பாவார்கள். வாதப் பிரதிவாதங்கள் எல்லாம் கடவுளைக் காண்பதற்கு முந்திதான். ஆண்டவனைக் கண்டதும் பேச்செல்லாம் நின்று போய்விடும்.
சந்தைக்கு வெளியில் பெரிய இரைச்சல் கேட்கும் அது என்ன சப்தம் என்று கேட்டால். சரத்தை கூச்சல் என்போம். ஆனால் சந்தைக்குள்ளே பிரவேசி த்து விட்டால் இரைச்சல் காதில் படாது. பண்டத்தின் விலை கேட்பதிலும் வியாபாரம் முடிப்பதிலும் கவனம் செலுத்துகிறோம். இப்படியே தான் பக்தியும், தொலைவில் நிற்கும்போது, வாதங்களின் இரைச்சல் அதிகமாக இருக்கும். பகவானே அண்டிப் பக்கத்தில் நெருங்கியதும் வாதங்களின் சப்தம் அடங்கிப் பகவானிடம் லயித்து விடுவோம். பணியாரச் சட்டியில் நெய்யில் அப்பம் பொறியும்போது ரொம்ப சப்தம் உண்டாகும். அப்பம் பக்குவமானதும் சப்தம் அடங்கிப் போகும். பக்தி செய்கிறவர்கள் முதலில் மிகவும் பேசுவார்கள். பிறகு பேச்சு அடங்கிப்போய் ஞானம் முற்றும்.