பதிவு செய்த நாள்
11
ஆக
2015
05:08
நீரில் படகு தங்குகிறது. ஆனால் படகுக்குள் தண்ணீர் புகும்படி விடக்கூடாது. புகவிட்டால் ஓடம் முழுகிப் போகும். அப்படியேதான் உலக வாழ்க்கையிலே இருக்கும். பக்தர்களின் நிலையும். உலக வாழ்க்கைக்கு வேண்டிய காரியங்கள் செய்து கொண்டிருக்கலாம். ஆனால் உள்ளத்துக்குள் உலகத்தைப் பாயவிடக் கூடாது. விட்டால் படகு கவிழ்ந்து போகும்! இல்லறம் நடத்துங்கள், ஆனால் ஒரு கையால் வாழ்க்கைக் கடமைகளைச் செய்துகொண்டு, ஒரு கை பகவான் காலைப் பிடித்துக்கொண்டே இருக்க வேண்டும். வேலை செய்யாமலிருக்கும் போது இரண்டு கைகளும் ஆண்டவன் பாதங்களைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டிருக்கப் பயன்படவேண்டும்.
நல்ல செவிலித் தாயானவள் தன் எஜமானியின் குழந்தையை அன்புடன் எடுத்து, பால் கொடுத்து வளர்க்கிறாள். பெற்ற தாயைப் போலவே அன்பு செலுத்திப் பால் கொடுத்து வந்தாலும் இந்தக் குழந்தை எனக்கு ஒன்றும் செய்யப் போவதில்லை; இது என்னுடைய சொத்து அல்ல, பால் ஊட்டுவது தான் இதனுடன் என் சம்பந்தம் என்று செவிலித்தாய் தன் கடமையைச் செய்வதுபோல் பக்தர்கள் இல்லறத்தை ஆண்டவன் பணியாக எண்ணிச் செய்து வருவார்கள். ஒரு வீட்டில் வேலைக்காரி என்ன உணர்ச்சியோடு நம்ம வீடு என்கிறாள்? அவள் சொந்த வீடு எங்கேயோ ஒரு கிராமத்தில் இருக்கிறது; பட்டணத்தில் வேலை செய்து வருகிறாள். வேலை செய்யும் வீட்டை நம்ம வீடு என்கிறாள். எஜமானியின் குழந்தையை எடுத்து, என் கண்ணே என்று சீராட்டுகிறாள். என் கோபாலன் ரொம்ப துஷ்டன் என் கோபாலனுக்கு, பாவம், அதிக பசி என்றெல்லாம் குழந்தையைக் கொஞ்சிப் பேசுகிறாள். பேசும்போது கோபாலன் எஜமானியின் குழந்தை, தன் குழந்தையல்ல, தன் குழந்தை தன் ஊரில் பாட்டியிடம் இருக்கிறது. என்பதை அவள் மறக்கவில்லை! அப்படியே என் இல்லற சீடர்களே! நீங்களும் வேலைக்காரி பாவத்தில் இல்லறத்தை நடத்துங்கள்.
உங்கள் இல்லம் ஆண்டவன் வீடு, அதன் எஜமானன் ஆண்டவன் என்கிற பாவத்தை வழக்கப்படுத்திக் கொண்டு இல்லறத்தை நடத்துங்கள் வழக்கம் பலப் பட்டதும் அதுவே மனசின் பான்மையாகி விடுகிறது. குடும்ப வாழ்க்கை நடத்திக்கொண்டே பகவானையடைய முயற்சி செய்யும் மக்கள் ÷ காட்டைக்குள் சுவருக்குப் பின்னால் நின்று சண்டை செய்யும் சிப்பாய்களைப் போன்றவர்கள். துறவு பூண்டு ஆண்டவனை வழிபடுகிறவர்கள் மைதானத்தில் நின்று யுத்தம் செய்யும் வீரர்களைப் போன்றவர்கள். இரு பாலாரும் வீரர்களே, கோட்டைக்குள்ளிருந்து ஊரைக் காக்கும் சிப்பாய்கள் சவுகரியங்களைப் பயன்படுத்திக்கொண்டு போர் நடத்துகிறார்கள். அதில் ஒரு குற்றமுமில்லை. மைதானத்தில் சென்று எதிரியுடன் யுத்தம் செய்வதற்கு முன், லஷ்கரில் சிப்பாய்கள் பயிலுவதைப் பார்த்திருக்கிறீர்கள். அல்லவா? அதுபோல் இல்லறமும் வைராக்கியம் பயிலும் இடமாகும். சில சவுகரியங்களை அமைத்துக் கொண்டு துறவு மார்க்கத்தைப் பயிலுவதே இல்லறத்தின் பயன், உள்ளத்தைப் பக்குவப்படுத்திக் கொள்ளுவதற்குக் குடும்ப வாழ்க்கையை ஒரு பயிற்சிக் களமாகப் பாவித்துக் கொண்டு இல்லறம் நடத்துங்கள்.
தகப்பனுடனோ, மனைவியுடனோ சண்டை பிடித்துக்கொண்டு அதற்காகத் துறவு பூண்டால், அது உண்மையான சன்னியாசமாகாது. அது வெறுப்புத் துறவாகும். அது நிலைக்காது. வெகு சீக்கிரத்தில் அப்படிப்பட்ட துறவியின் மனம் பழைய விஷயங்களில் சென்று மறுபடி உலக வாழ்க்கை ஆரம்பமாகும். இல்லற வாழ்க்கையை ஆண்டவனிட்ட கடமை என்று சரியாகப் பக்தியுடன் நடத்தி, எல்லாம் ஈசன் பணி என்று மனதைப் பழக்கப்படுத்தி,பக்குவமடைந்த பின் துறவு பூண்டவர்கள் துறவு நிலையின் பயனைப் பெறுவார்கள். ஒரே பரம்பொருளின் தோற்றங்களை எல்லா உயிரும் என்கிறமெய்யுணர்வைப் பெறுவார்கள்.
ஒரு கிராமத்தில் ஆண்டி மடம் ஒன்று இருந்தது. அங்கே பல ஆண்டிகள் ஓடு ஏந்தி ஊருக்குள் சென்று பிச்சைச் சோறு வாங்கிச் சாப்பிட்டு வந்தார்கள்.ஒரு நாள் ஆண்டிகளில் ஒருவன் ஊரில் சுற்றிய காலத்தில் ஒரு ஜமீன்தார் தன் ஏழைச் சேவகனைப் பலமாகப் புடைத்துக் கதறச் செய்வதைப் பார்த்தான். அதனால் மனம் மிகவும் நொந்து, ஐயா, போதும் அடித்தது! எனக்காக நிறுத்தி விடுங்கள். உங்களுக்கு நன்மை யாகுக! என்று ஆண்டி ஜமீன்தாரை வினயமாக வேண்டிக் கொண்டான். இதைக் கேட்டதும் ஜமீன்தாருக்கு முன்னைவிடக் கோபம் அதிகமாகிவிட்டது. சேவகனை விட்டு விட்டு தமக்குப் புத்தி சொல்ல வந்த ஆண்டியைக் கண்ட படி அடிக்க ஆரம்பித்தார். ஆண்டி நன்றாகப், புடைக்கப்பட்டுப் பிரக்ஞையில்லாமல் தரையில் விழுந்தான். அவன் விழுந்ததும் ஜமீன்தாருடைய ஆவேசம் தீர்ந்து தம் வீட்டுக்குள்ளே போய்விட்டார். யாரோ வழியில் போகிறவர்கள். ஆண்டி அடிபட்டு விழுந்து கிடப்பதைப் பார்த்து மடத்துக்குப் போய்ச் செய்தி சொன்னார்கள்.
ஆண்டிகள் ஓடிப்போய், ஜமீன்தார் வீட்டு வாசலில் கிடந்த தங்கள் சகோதரனைத் தூக்கி எடுத்து மடத்துக்குக் கொண்டுபோய்க் குளிர்ந்த ஜலம் தெளித்து, வாயில் தண்ணீரும் பாலும் ஊற்றிச் சிகிச்சை செய்தார்கள். வெகு நேரங்கழித்து ஆண்டிக்குப் பிரக்ஞை வந்தது. கண் திறந்தது. நினைவு வந்த மாதிரி காணப்பட்டதும். ஒருவன், தம்பி, நான் யார் தெரிகிறதா? என்றான்.
அண்ணே! தெரிகிறது! நீ தான் முதலில் என்னை அடித்தாய்; இப்போது என்னுடைய வாயில் நீயே பால் ஊற்றுகிறாய் என்றான். துறவி ஞானப் பிரகாசம் அடைந்தவனானபடியால் தன்னை அடித்தவனையும் தனக்குப் பணிவிடை செய்தவனையும் ஒன்றாகக் கண்டான். நன்மையும் தீமையும், சுகமும் துக்கமும் ஆண்டவன் விலை அல்லவோ?