பதிவு செய்த நாள்
11
ஆக
2015
05:08
ஒரு நாள் சில வாலிபர்கள் பரமஹம்ஸரிடம் வந்து, நாங்கள் சமுதாயச் சேவையில் ஈடுபடுவதென்று நிச்சயம் செய்திருக்கிறோம் என்று சொன்னார்கள். மிக உற்சாகமாயிருந்த அவர்களைப் பார்த்து ராமகிருஷ்ண பரமஹம்ஸர் சொன்னார்; நீங்கள் தீர்மானித்திருக்கிற விஷயம் ரொம்பவும் சிலாக்கியமானது. சமூக கைங்கர்யத்தில் ஈடுபடுவது மிக நல்ல யோசனை. ஆனால் முதலில் தெய்வ வழிபாடு செய்து தியானித்து உள்ளத்தைத் துப்புரவாக்கிக்கொண்டு பிறகு நீங்கள் தீர்மானித்திருக்கிற வேலையில் இறங்குங்கள். ஈசுவரத் தியானம் செய்வதால் உங்களுக்குச் சக்தி உண்டாகும். பகவானைப் பக்தியோடு வேண்டிக்கொண்டால். சமூகத்துக்கு நன்மை செய்யும் திறன் உங்களுக்கு வந்துசேரும். நீங்கள் எடுக்கும் காரியங்களுக்கு வேண்டிய சாமர்த்தியமும் சவுகரியங்களும் ஆண்டவன் அருளால் பெறுவீர்கள். பகவானுடைய நாமங்களைச் சொல்லித் துதியுங்கள். அவனைப்பற்றிப் பக்தர்கள் பாடியிருக்கும். பாட்டுகளைப் பாடுங்கள். பிறகு உங்கள் காரியங்களை எப்படிச் செய்ய வேண்டும். என்பது உங்களுக்கு நன்றாக விளங்கும்.
எந்தப் பொதுக் கைங்கர்யத்தில் இறங்கினாலும் தேசபக்தர்கள் ராமகிருஷ்ணர் செய்யும் இந்த முக்கியமான உபதேசத்தைக் கவனிக்க வேண்டும்:- உலக நன்மைக்காக வேலை செய்யும் ஆசை மேலிட்டு இதைச் செய்வோம். அதைச் செய்வோம். என்று வேலைகளைத் தேடி அலையாதிர்கள். சகஜமாக நேரும் பணியில் ஈடுபடுங்கள். புகழும் பெயரும் சம்பாதிப்பதை உத்தேசித்து இந்த வேலை சிறந்தது, அந்த வேலை சிறந்தது என்று அலையாதீர்கள். சமூகத்துக்கு உழைப்பதென்றால் எந்தவிதமான புகழோ லாபமோ பெறும் யோசனையை விட்டுவிட்டுக் கடமைகளைச் செய்ய வேண்டும். ஆண்டவனை, எனக்குப் பக்தியை அருள்வாய்! பரிசுத்த உள்ளத்தோடு உழைக்கும்படி செய்வாய்! என்று வேண்டிக் கொள்ளுங்கள். தேச சேவை பலவிதத்தில் செய்யலாம். பொதுப் பணி செய்வது மிக நல்லதானாலும் புகழ் சம்பாதிக்கலாம். என்கிற ஆசை வைத்துக்கொண்டு ஆரம்பிக்கக் கூடாது. புகழாசையானது பொதுநலப்பணியாளர்களுடைய முயற்சிகளைச் சிக்கல் நேரிட்டபோது கோணல் மார்க்கங்களில் செலு த்திவிடும். புகழாசையும் வேறு சுயநலப்பற்றுகளும் வெளிப்படையாகவோ அல்லது உள்ளத்தில் அந்த ரங்கமாக இருந்தோ மிக நல்ல முயற்சிகளை யெல்லாம் பயனறச் செய்துவிடுகின்றன.
நான் பிறருக்காக இவ்வளவு பாடுபட்டேன். ஒன்றும் பலிக்கவில்லை. என்றிவ்வாறு பல தேசபக்தர்கள் வருத்தப்படுவதைப் பார்க்கறோமல்லவா? இப்படித் துக்கமும் மனக்கசப்பும் உண்டாவதற்குக் காரணம் என்ன? ஒரு ஆசையை வைத்துக்கொண்டு வேலை செய்து அதை அடையாதபடியால் உண்டாகின்றன. புகழும் பெயரும் அடைவதற்காக தேசப்பணியோ, சமூகப் பணியோ, செய்யப்போனால் பிறகு அனுபவிப்பது நிச்சயம். பாவி ஆசையானது எந்த நல்ல பணியையும் கெடுத்துக் குட்டிச் சுவராக்கிவிடும் பிறருக்கு நன்மை செய்வதற்காகவோ அல்லது சமூகத்துக்குப் பணியாற்ற வோ எந்தக் காரியத்திலாவது நாம் ஈடுபட்டால் அதை ஆண்டவனுடைய அருளுக்கு விட்டுவிடுவோம். விட்டுவிட்டால் வெற்றியடைந்தாலும் சரி, தோல்வியானாலும் சரி, மனக்கலக்கம் உண்டாகாது.
வெளிப்படையான சுய லாபத்துக்கோ அல்லது மனசில் புகழாசை பொதிந்தோ, வேலையில் ஈடுபட்டால் அது சேவையாகாது. ஒருவித வியாபாரமாகும். தேச சேவை செய்த <உத்தமர்கள் புகழும் பெயரும் அடைந்திருக்கிறார்கள் என்பது உண்மை. ஆனால் அவ்வாறு புகழடைந்தவர்கள் அதற்காகவே வேலையில் புகவில்லை. அவர்களுடைய புகழின் ரகசியமும், வெற்றிக்குக் காரணமும் புகழை எதிர்பார்க்காமல் வேலை செய்ததே யாகும். இதை உணராமல் அவர்களைப்போல் நாமும் புகழ் பெறலாம் என்ற ஆசையோடு ஆரம்பித்தவர்கள் தோல்வியும் ஏமாற்றமும் அடைவதை பார்க்கிறோம். ஒரு ஆசையுமில்லாமல் மனிதன் எப்படிப் பொதுப் பணி செய்யமுடியும் என்று சிலர் ஐயப்படலாம். அவ்வாறு ஐயப்படுகிறவர்கள் தங்கள் குடும்ப காரிங்களை மட்டும் கவனித்துக்கொண்டு யோக்கியமாகச் சொந்த வாழ்க்கை நடத்திக்கொண்டு இருத்தலே போதிய தேச சேவையாகும். பொதுநலப் பணியில் பிரவேசித்து ஏமாற்றமும் அருவருப்பும் அடைய வேண்டியதில்லை.
பற்றும் ஆசையும் இல்லாமல் பொதுநலச் சேவை செய்வது கடினம். ஆகையினால்தான் ராமகிருஷ்ணர் பகவானுடைய திருவருளைப் பெற்றுப் பொதுவேலையில் ஆண்டவனே என் உள்ளத்தில் பக்தியை நிறுத்து என்று முதலில் வேண்டிக்கொள்ளுங்கள் என்கிறார். பொதுக் காரியங்களில் இந்தக் காலத்தில் அலைப்புறும் மக்களுக்கு ராமகிருஷ்ணர் செய்திருக்கும் எச்சரிக்கை மிகவும் முக்கியமானது. மெய்வருந்திப்பாடுபட்டு, பொருள் விரயம் செய்துவிட்டு, பட்ட சிரமமெல்லாம் வீணாயிற்றே என்று பலர் துக்கப்படுகிறார்கள். இதன் ரகசியம் முதலில் ஈடுபடச் செய்த மனப்பான்மையிலிருந்த தோஷமே. பாலில் விழுந்த மோர்த் துளிபோல், அந்தத் தோஷம் தன் வேலையைச் செய்து விடுகிறது. புகழும் பெயரும் சம்பாதித்துவிடலாம். என்கிற ஆவலை அஸ்திவாரமாகக் கொண்டு கட்டின கட்டிடம் விழுந்ததும் துக்கம் ஏற்படாமல் வேறு என்னவாக முடியும்? இதனாலேதான் பொதுப் பணியில் இறங்குவதற்கு முன் ஆண்டவனைத் துதியுங்கள்; பக்தி என்னும் புனித நீரைக்கொண்டு, மனதைக் கழுவிச் சுத்தப்படுத்திக்கொண்டு வேலை செய்யுங்கள் என்றார் ராமகிருஷ்ண பரமஹம்ஸர். அஸ்திவாரம் சரியாகப் பலப்பட்டு நின்றால், பிறகு கட்டிடம் எந்த வகையில் எழுந்தாலும் பழுதில்லை.
சஸ்திர வைத்தியர்கள் கத்தி எடுத்து அறுப்பதற்கு முன் என்ன செய்கிறார்கள்? கையையும் கத்தியையும் நன்றாகத் தோஷமறத் துலக்கிக்கொண்டே வேலை ஆரம்பிப்பார்கள். அவ்விதமாகவே, பொதுப்பணித் திட்டங்கள் போடுகிறவர்கள் முதலில் மனதை நன்றாகச் சுத்தி செய்து கொள்ள வேண்டும். இப்படிச் செய்தால் ஆண்டவன் அருளால் எல்லாம் சுகமாக முடியும். வெற்றிக்கும் சாந்தநிலைக்கும் வேறு சாதனமில்லை. ஆண்டவனைத் தியானித்து எல்லாம் உன்னுடையது என்று மனதை உறுதியான நிலையில் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றால் வாயால் மந்திர மொழிகள் சொல்லி மனதை ஏமாற்றிக் கொள்வதல்ல. அவ்வித வற்றல் சடங்கினால் பயனில்லை. மனப்பூர்வமாகபண பக்தி செலுத்த வேண்டும். அதன் பின்னரே எந்த விதமான பொதுப் பணியும் ஆரம்பிக்கவேண்டும். ஆண்டவனை வேண்டிக்கொள்ளாமல் புகழுக்காக ஆரம்பிக்கும் பணி பொய்ப்பணியாகி, துக்கத்துக்கும் கோபத்துக்கும் அசூயைக்கும் விதைபோட்டுப் பயிரிடுவதாக முடியும்.
பொதுப்பணியில் ஈடுபடுவதற்கு முன் பகவான் ராமகிருஷ்ணர் உபதேசப்படி ஆண்டவனைத் தியானித்து, பக்தி செய்வது மல்லாமல், வேலையில் இறங்கிய பின்னும் எந்த நேரமும் எந்தத் தொண்டு செய்து கொண்டிருக்கும்போதும் ஆண்டவன் நினைவை மனதில் நிறுத்திக்கொண்டே வேலை செய்ய வேண்டும். பொதுநல வேலை வேறு; சுவாமி பூசை வேறு என்று எண்ணுவது தவறு. எல்லாம் ஆண்டவன் வழி பாடாகவே எண்ணி வேலையைச் செய்ய வேண்டும். கடவுள் நினைவு வைத்துக்கொண்டு வேலை செய்வது, காரியத்திற்குத் தடையாகாது. எந்த வேலை செய்யும் போதும் பக்தி செய்துகொண்டே வேலை செய்வது பழக்கத்தில் மகிழ்ச்சியாகவே முடியும். ஊக்கமும் தரும். வேலைத் திறமையும் தரும். மகாத்மா காந்தியடைந்த வெற்றிகளின் ரகசியம் இதுவே என்று நான் உறுதியாகச் சொல்லுவேன். மனிதன் நடக்கும்போது, கூடவே நிழல் செல்வதுபோல் அவர் செய்து நடத்திய எந்த வேலை, எந்தத் திட்டம், எந்த முயற்சியிலும் ஆண்டவனுடைய நினைவை உள்ளத்தில் எப்போதும் நிறுத்தி வந்தார். அவருடைய வேலைகளுக்கு அது தடையாக இருக்கவில்லை. வெற்றிக்கே காரணமாக இருந்தது. நாம் செய்யும் சிறு தொண்டுகளிலும் அவ்வாறே ஆண்டவன் நினைவு, பக்கத்தில் நிழல்போல் நின்று ஆரவாரமின்றி மவுனமாக உதவி செய்யும். ஈசுவரனை எப்போதும் மனதில் வைத்துக்கொண்டு வேலை செய்வது பொதுப்பணிக்கு ஒரு இன்றியமையாத ஆசாரமாகும். சஸ்திர வைத்தியத்துக்குரிய துப்புரவு-ஆசாரத்தைப் போல் இந்த உள்ளத் துப்புரவு-ஆசார முறை பொதுபணிக்கு இன்றியமையாதது. பழுதற்ற மனம் என்பது ஒரு பெருஞ் செல்வமும் சாதனமுமாம். அதைப் பெறுவதற்கு பக்தி ஒன்றே வழி.