பதிவு செய்த நாள்
11
ஆக
2015
05:08
வீடு கட்டும்போது சாரம் கட்டி அதன் மேல் நின்று வேலைக்காரர்கள் கட்டிட வேலை செய்வார்கள். வீடு கட்டி முடிந்ததும் சாரத்திற்கு வேலையில்லை. நல்ல ஞானம் அடைந்தவர்களுக்குக் கோயிலும் குளமும் வேண்டியதில்லை. தியானத்தில் தியானத்தில் மனதை அலையாமல் நிறுத்தப் பயிலாதவர்களுக்குப் பூஜையும் ஸ்நானமும் அவசியமாகும். பக்தியுடன் களிமண்ணை எடுத்து லிங்கமாகப் பிடித்து வைத்தால் அதுவே ஈசன். அனைத்திலும் இருக்கும் ஈசன் அந்த லிங்கத்தினின்று நீங்கிவிடவில்லை. இந்த விக்ரகம் வெறும் களிமண்ணாயிற்றே, இதை எப்படிக் கடவுளென்று தியானிக்க முடியும்? என்று ஒருவர் கேட்டார். ஏன் மண், கல், செம்பு என்று எண்ணுகிறீர்? பரம்பொருளால் ஆன உருவம் என்று ஏன் காணமாட்டீர்? அனைத்திலும் கடவுள் இருக்க அனைத்தும் பரம் பொருளாகவே இருக்க, ஏன் இந்தமூர்த்தியும் அந்தப் பரம்பொருளை உபாசிக்க உதவாது? மண்ணும் பரம்பொருளே, செம்பும் பரம்பொருளே, பரம்பொருள் அன்றி ஒரு பொருளுமில்லை. ஒரு சிறு நீர்த்துளியும் பராசக்தியின் உருவமே. குடிக்கும் நீரும் பராசக்தியே. உள் சென்று தாகத்தைத் தணிப்பதும் பராசக்தியே. துளசி மாலையைக் கையில் வைத்துக்கொண்டு ஹரி நாமங்களைச் சொன்னோமானால் ஒவ்வொரு துளசி மணியும் ஹரியின் உருவமே யாகும்.
ஆகாயம் கறுத்து, வஜ்ராயுதம் பாய்ந்து இடியும் மின்னலும் கக்கும் மேகத்தில் பராசக்தி இருக்கிறாள். அந்த மேகம் மலைமேல் மழையாகப் பெய்து கம்பீரமான நதியாக ஓடும்போது, அதிலும் பராசக்தி இருக்கிறாள். ஆற்றங்கரையில் பக்தன் சந்தியாகாலத்தில் ஜலமே உன் ஆனந்தம் என்னுள் மகிழ்ச்சியை உண்டாக்குக உன் சக்தி எனக்குள் பாய்ந்து என்னை பலவானாக்குக ஜலமே என் கண்கள் விசாலப் பார்வை பெறச் செய்வாயாக தாய் தன் அருமைக் குழந்தையை ஆர்வங் கொண்டு போஷிப்பது போல, ஜலமே, உன் மங்களச் சுவையும் சத்தும் என்னைப் போஷிக்கும்படி அருள்வாயாக. ஜலமே எதையும் துப்புரவாக்கிவிட்டு, நீ உலர்ந்து மறைந்து போகிறாய், அந்தக் குணத்தை எனக்கும் தந்து என்னையும் துப்புரவாக்குவாயாக அதற்காக உன்னைச் சரண்புகுந்தேன் என்று தலையில் ஜலத்தைத் தெளித்துப் புரோக்ஷணம் செய்து கொண்டு கையில் ஆசமனத்துக்குக் கொஞ்சம் ஜலம் எடுத்து, அழிவற்ற பரம்பொருளே உன்னை வணங்குகிறேன் என்று சொல்லி உறிஞ்சி அருந்துகிறான். அந்த ஜலமும் பரா சக்தியே.
எங்கும் ஆண்டவன் உளன் என்று உண்மையில் கண்டோமானால் மனதைத் தியானத்தில் நிறுத்துவதற்குச் சாதனமாக ஏன் ஒரு திவ்விய மூர்த்தியை வைத்துக்கொண்டு ஆராதிக்கக் கூடாது? எங்கும் இருப்பவன் அந்த மூர்த்தியில் இல்லாமற் போய்விட்டானா? மூர்த்தி பூஜை செய்யாதவர்கள் செய்யவேண்டியதில்லை. செய்பவர்களைக் குற்றம் சொல்வது மடமை. ஈசன் சர்வ வியாபகன். பராசக்தியானவள் எதிலும் வீற்றிருக்கிறாள். உண்ணும் உணவில் ஒரு பருக்கையை வைத்துப் பூஜை செய்யலாம். பூஜை செய்து உணவை உண்போமானால் பராசக்தி உள் நின்று அருளுவாள்.
ஆராதித்துப் பூஜை செய்யும் ஒரு சின்னம் மாத்திரமல்ல. எங்கும் உள்ள ஈசன் அந்த மூர்த்தியிலும் சாக்ஷாத் வீற்றிருக்கிறான். பூஜைக்கு அமைத்துக் கொண்ட விக்கிரகத்தை நம்முடைய பெரியோர்கள் அர்ச்சாவதாரம் என்று ஒரு அவதாரமாகவே பாவித்து வந்திருக்கிறார்கள். ராமன், கிருஷ்ணன் இவர்களைப் போல் இந்த மூர்த்தியும் ஒரு நிரந்தர அவதாரம். கம்பத்திலும் மீனிலும் பன்றியிலும் தசரதன் மகனிலும் அவதரித்ததுபோலவே, திருவரங்கத்துக் கோயிலும் மற்றும் பல திருப்பதிகளிலும் ஈசன் நம்முடைய பக்திக்கு இணங்கி அவதரித்து நிற்கிறான். பரிபூரண வேதாந்த ஞானம் அடைந்த ஆழ்வார்களும் நாயன்மார்களும் ஆசாரியர்களும் அந்தத் திருப்பதிகளில் ஆண்டவனைக் கண்டார்கள். கண்டு மனதை ஒன்றித்தும், தியானித்தும், பாடியும், ஆடியும் வந்தார்கள்.
தெருவில் குழந்தைகள் விளையாட்டாகத் திருவரங்கக் கோயிலையும், பள்ளிகொண்டான் உருவத்தையும் மண்ணில் கோடிழுத்துக் காட்டிய மாத்திரத்தில் உஞ்சவிருத்தியில் சென்றுகொண்டிருந்த ராமாநுஜர் தரையில் விழுந்து தெண்டன் சமர்ப்பித்துச் சர்வேசு வரனைத் தியானித்ததாக ஒரு கதை கூறப்படுவதுண்டு. நம்முடைய செயற்கைப் பதுமைகளிலும் ஆண்டவன் இல்லை என்று எண்ணுவது அறியாமையாகும்.
சேதனங்களும் அசே தனங்களும் எல்லாப் பொருள்களுமே பிரம்மம் என்று கண்டபின் பூஜைக்கென்று அமைத்துக்கொண்ட மூர்த்தி ஏன் பரம்பொருளின் உருவம் அல்ல? அல்லவென்று எண்ணுகிறவர்கள் உண்மையில் பிரம்மத்தைத் தனிப்படுத்தி வேறு உலகத்தில் வைக்கிறார்கள் போலும். வாதப்பிரதிவாதத்தில் பரம்பொருளைப் பற்றி சர்வவியாபகத்தைச் சொல்லிப் பேசுகிறார்களே யொழிய அவர்கள் கடவுளின் சர்வ வியாபகத்தை நம்பவில்லைபோல் தோன்றுகிறது. ஞானமும் பக்தியும் கொண்டு சித்தத்தை ஒருமுகப்படுத்தி பிரம்மத்தைத் தியானித்து உபாசிக்கலாம். ஆனால் இது அனைவருக்கும் முடியாது. முடியும்போல் தோன்றினும் அது அநேகமாக பிரமையும் ஒருவித ஆணவமுமேயாகும். அசே தனலிங்கத்தை வைத்து அதன் மூலம் எங்கும் நிறைந்த பரம்பொருளைத் தியானிப்பது அனைவருடைய சக்திக்குள் அடங்கும் ஒரு சரியான முறையேயாகும்.
அதைக் குறைவுபடுத்திப் பேசுவது தவறாகும். பகவான் ராமகிருஷ்ணரும் சங்கர, ராமாநுஜ, மத்வா சாரியார்களும், மேல்நாட்டில் பல கிறிஸ்துவ ஞானிகளும் பக்தர்களும் அர்ச்சாவதார பூஜையை அவலம் பித்து அமைதியும் ஆனந்தமும் அடைந்தார்கள் என்பது பிரசித்தம். ஆனபடியால் அர்ச்சனைக்கென்று கல், மரம் முதலிய அசேதனப் பொருள்களை அமைத்துக் கொண்டு நாமும் பரம்பொருளைத் தியானித்து நன்மை பெறலாம்.