அத்துவைதத்தைப் பற்றி உங்கள் அபிப்பிராயம் என்ன? பிரம்மம் ஒன்றே உண்மை; பிரபஞ்சம் அவ்வளவும் பொய்-இதுதானே வேதாந்த முடிவு என்று அத்துவைத சாஸ்திரம் படித்த ஒரு பெரிய பண்டிதர் பரமஹம்ஸரைக் கேட்டார். இந்தச் சந்தர்ப்பத்தில் பகவான் ராமகிருஷ்ணர் செய்த உபதேசம்: எல்லாம் பொய், எல்லாம் மாயை, பரம் பொருள் ஒன்றே உண்மை என்று வாதித்து நிரூபிப்பது எளிது. ஆனால் பேச்சில் நிரூபித்து விட்டதனால் அது நமக்கு மெய்யுணர்வாக முடிந்தது என்று செல்லுவதற்கில்லை. மெய்யுணர்வாகாத அறிவுக்கும் உண்மையான ஞானத்திற்கும் ரொம்பவும் வித்தியாசம் உண்டு. கானல்நீர் என்று கண்டபிறகு குடம் எடுத்துக் கொண்டுமொள்ளப் போகமாட்டோம். யாராவது போகச் சொன்னால் சிரிப்போம். காண்பது பேய்த்தேர், தண்ணீர் இல்லை என்று தெரிந்த பின் தென்பட்ட பொருளைப் பற்றி நாம் அறிந்து கொண்ட உண்மையை உணர்ந்து அதன்படி நடந்து கொள்கிறோம். கானல் நீரைப்பற்றி நாம் அடைந்த அறிவும் நம்முடைய செயலும் எளிதில் ஒன்றுபட்டு விடுகின்றன.
அத்துவைத உண்மை விஷயத்தில் இப்படியில்லை. பரம்பொருள் ஒன்றே உண்மை, ஜீவன்களுடைய வியக்தி நிலையும் பிரபஞ்சத்தில் காணப்படும் சகல பொருள் வேறுபாடுகளும் மாயை என்று மீமாம்ச ஆராய்ச்சியைக் கொண்டு உறுதியாக முடிவு செய்தாலுங்கூட நம்முடைய உள்ளுணர்ச்சியில் அந்த முடிவு சரியான இடம் பெற்றுப்பதிவதில்லை. கண்ட உண்மையானது உயிரோடு ஒட்டாமல் தனித்து நிற்கிறது. உணர்ச்சி என்னும் கெட்டிச் சாந்தில் பதிவதில்லை. படித்தும் வாதித்தும் முடிந்த முடிவு பொதி மாட்டுச் சுமையாக நிற்கிறதே யொழிய உள்ளுணர்ச்சியா வில்லை. மாயை என்று சண்டை போட்டு வாதித்த அறிஞர்களாகிய நாம் மறுநாள் சாப்பாட்டைப் பற்றிக் கவலைப்பட்டு அலைகிறோம். நம்முடைய முயற்சிகள் எதிலாவது யாரேனும் தடையாக நின்றால் அவர் பேரில் கோபம் கொள்கிறோம். அடைந்த அறிவு வாழ்க்கையில் ஏறுவதில்லை. அத்துவைதம் எளிதல்ல. பக்தி வழிபாட்டின் அவசியம் இதுவே.
ஒரு பாம்பையோ புலியையோ கண்டோமானால் உடல் நடுங்குகிறது. புலன் வழியாக அடைந்த அறிவு உடலையெல்லாம் ஆட்டி விடுகிறது. நல்ல ஆகாரத்தைப் பசி வேளையில் ஒருவன் கண்டால் அவன் வாயில் தண்ணீர் ஊறுகிறது. ஆகார உண்மையானது உயிரோடும் உடலோடும் ஒட்டி வேலை செய்கிறது. சிநேகிதனையோ அன்புக்குரிய உறவினரையோ கண்டால் ஆம், இவர் இன்னார் என்று தெரிந்து கொண்டு நாம் சும்மா நிற்பதில்லை; உள்ளம் பூரித்து மகிழ்ச்சியடைகிறோம். படத்திலுள்ள பாம்பையோ புலியையோ கண்டது போல் மட்டும் ஒருவன் அத்துவைத உண்மையை அறிவாராய்ச்சியால் கண்டுவிட்டதால் பயன் ஒன்றுமில்லை. ஒருவன் அத்துவைத ஞானம் உண்மையில் அடைந்தால் அந்தச் சமயமே அவன் மெய்ப் பொருளுடன் ஒன்றுபட்ட நிலையை அடைய வேண்டுமல்லவா? காட்டில் நிஜப் புலியைக் கண்டவுடன் பயங்கொண்டு நடுங்குவதுபோல் உண்மை ஞானம் அடைந்தவன் தட்சணமே ஆனந்தம் மேலிட்டுச் சமாதி நிலையை அடைவான்.
பிரம்மம் ஒன்றே உண்டு; மற்றவையெல்லாம் மாயை என்று ஒருவன் உண்மையில் கண்டால் பேத உணர்ச்சிக்கு இடம் ஏது? பேத உணர்ச்சி நீங்காமலிருந்தால் அடைந்த அறிவு பேச்சளவுதான்; ஞானானுபவம் அல்ல. அத்துவைத மெய்யுணர்வைப் பெற்றால், எரியும் கற்பூரம் எரிந்து ஒன்றுமில்லாமல் போவது போல் அறியாமையான பேத உணர்ச்சி முற்றிலும் அற்றுப் போகும். துளிச் சாம்பலும் இராது. கற்பூரம் எரிந்து போன பின் நான் எரிந்து ஒழிந்தேன் என்று சொல்லுவதற்குக் கற்பூரம் இருந்தால்தானே? ஆனந்த நிலையை அடைந்திருக்கும் ஒருவன் மாயையை மாயையாகவும் உண்மையை உண்மையாகவும் அனுபவிக்கிறான். ஆனால் அந்த நிலையில் நீ, அது, இது, அறிவு, அறியாமை, இன்மை என்கிற பேச்சுக்கே இடமில்லை. கரையற்ற மவுன வெள்ளத்தோடு அவன் உயிர் சேர்ந்து விடுகிறது. உப்பால் செய்யப்பட்ட ஒரு பிரதிமையைத் தண்ணீரில் போட்டால் கரைந்து போவது போல் அத்துவைத மெய்ஞ்ஞான மடைந்தவனுடைய உள்ளம் பரம்பொருள் வெள்ளத்தில் கரைந்து ஒன்றாகிவிடும். கரைந்து போனதைப் பற்றி கரைந்து போனதைப் பற்றிக் கரைந்து போன உப்பு பேசமுடியுமா? அறிந்தேன் அறியவில்லை என்று யாரேனும் வாதிக்கும்போது நான், நீ என்கிற பேத உணர்ச்சியுடன் தான் பேச்சு நடக்கிறது. அந்த நான் தன்மை இருக்கும் வரையில் அவனுக்குப் பிரபஞ்சம் எப்படி மாயையாகும்? பேத உணர்ச்சி நீத்த பின்னர் வாதப் பிரதிவாதமே இல்லை. மவுன நிலை.
இதுவே அத்துவைதத்தை உபதேசிப்பதில் உள்ள சிக்கல்; அறிவுக் கெட்டாத மெய்ப்பொருளை மாயையால் உண்டான நிலையில் வாதித்து விளக்கிப் பார்ப்பதி<லுள்ள கஷ்டம். உபதேசமும் வாதமும் நடத்தும் ஆசாரியனுக்கும் கேட்கும் சீடனுக்கும் நீ நான் என்கிற பேத உணர்ச்சி இருந்தே தீருகிறது. இருவருக்கும் உலகம் உண்மையில் மெய்யாவே இருக்கிறது. சமாதி நிலை ஒன்றில்தான் அத்துவைதத்தை ஒருவன் அனுபவித்து உணரலாம். மற்ற நிலையில் பேசப்படும் அத்துவைதம் வெறும் காற்று மூட்டை; அதைக் கொண்டு ஓரளவு நீந்தலாம். அடைந்த அறிவைக் கொண்டு பக்தி செய்து ஆண்டவனை வழிபட்டால் மெய்யுணர்வு அடையலாம்.