குழந்தாய் தூங்கு, தூங்கு என்று தாய் சொல்லுகிறாள். நான் தூங்கிப் போனேன், அம்மா என்கிறது குழந்தை. தாயிடம் உள்ள அன்பினாலும் தூக்கம் என்றால் என்ன என்பதை அறியாதபடியாலும் குழந்தை அப்படி சொல்லுகிறது. சமாதி நிலையடையாத ஒருவன் சிவோஹம் சிவோஹம் என்று புத்தகம் படித்துவிட்டுச் சொல்லுவதும் இத்தகைய பேச்சுத்தான். குழந்தையானது உண்மையில் தூங்கினால் தூங்கினேன் என்ற பேச்சு எப்படி உண்டாகும்? எவ்வளவு இல்லை என்றாலும் நான் என்பது உள்ளத்தை விடாப்பிடியாகப் பிடித்துக்கொண்டிருக்க, அத்தகையவனுக்குப் பிரம்மம் நிர்க்குணமாக நின்று எப்படி உதவ முடியும்? பரம்பொருளை ஈசுவரனாகப் பாவித்து வழிபட்டுப் பக்தி செய்தலே முறை. அவ்விதம் செய்து வந்தால், நான் என்னும் காயானது முற்றிக் கனியாகி நன்றாகப் பழுத்து உதிர்ந்துபோகும். அடையாத ஞானத்தை அடைந்துவிட்டதாகப் பாவிப்பதனால் ஒருவிதமான பயனும் இல்லை.
அத்துவைத பண்டிதருக்குப் பரமஹம்ஸர் தம்மைப் பற்றியே அடக்கத்துடன் சொல்லுகிறார். நான் நான் என்னும் அஞ்ஞானத் தன் நினைவு என்னைப் பாதித்துக் கொண்டிருக்கும் வரையில் என் பிரம்மம் சகுணப் பிரம்மமே யாகும். சர்வேசுவரனைத் தியானித்து பக்தி செய்வதில் என்ன குறை? தேவியை நான் வழிபடுகிறேன். அவள் பல ஜீவன்களாகவும், பிரபஞ்சமாகவும் என் முன் நிற்கிறாள். பகவதியும் ஈசனும் ஒன்றே. வைரக் கல்லும் வைரக்கல்லின் பிரகாசமும் வெவ்வேறா? சூரியன் வேறு, வெய்யில் வேறல்ல. ஒன்று இன்றி மற்றொன்றைக் காண முடியாது. நான் வழிபடும் தேவி இரண்டறத் தனியே நிற்கும் பிரம்மமேயாவாள். சிவோஹம் என்று வாயால் சொல்வதில் பயனில்லை. பக்தி செய்து நான் என்னும் ஆணவம் முற்றிலும் அற்றுப்போன பின்னரே, சிவோஹம். அது வரையில் நான் ஆண்டவனுக்கு அடிமை. நான் அவன் ஏவியதைச் செய்யும் கருவி.
ஒரு சாது புண்ணிய ஸ்தலம் ஒன்றுக்கு வந்து அத்துவைத <உபந்நியாசங்கள் ஏராளமாகச் செய்து கொண்டிருந்தார். அச்சமயம் அங்கே இருந்த ராமகிருஷ்ண தேவர் அவரைப் பற்றி ஒரு கெட்ட சமாசாரம் கேள்விப்பட்டார். பிறகு ஒரு நாள் சாது இருந்த பக்கம் சென்றபோது சாதுவைச் சந்தித்து, என்ன துறவி யாரே வேதாந்தத்தை அலகிக் கொட்டுகிறீரே ஊரிலே ஏதோ சொல்லிக் கொள்ளுகிறார்களே, அதைப் பற்றிய உண்மை என்ன? என்று பரமஹம்ஸர் கேட்டார். அதனால் என்ன? நிழல் நிழலுடன் விளையாடியதைப் பற்றி வேதாந்த ஞானம் பெற்றவர்க்கு என்ன விசாரம்? உலகமெல்லாம் மாயை. இந்தப் பிரபஞ்சமே பொய்யாக இருக்க, என்னுடைய உடலின் காம சேஷ்டைகள் மட்டும் உண்மையா? எல்லாம் பேய்த்தேர். இதற்கு வேதாந்த ஞானியான தாங்கள் ஏன் வருத்தப்பட வேண்டும்? இவ்வாறு அத்துவைத நிபுணராகிய அந்தச் சன்னியாசி சொன்னதைக் கேட்ட ராமகிருஷ்ணருக்கு அடக்கமுடியாத வெறுப்பு உண்டாயிற்று.
உங்களுடைய வேதாந்தத்தைத் தீயில் போட்டுக் கொளுத்தும். உம்முடைய படிப்பு ஒரு பெரும் மோசம், ஜனங்களை ஏமாற்றிச் சிற்றின்பத்துக்கு ஒரு வழிதேடினீர் என்றார். பக்தியில்லாத வேதாந்த மாயாவாதம் மிகவும் அபாயகரமானது. துரியோதனன் கூட ஒரு சமயம் ஆண்டவன் என் உள்ளத்தில் வசிக்கிறான். அவனல்லவோ, என்னை இவ்வாறு செய்யச் சொல்லுகிறான்? என் பொறுப்பு ஒன்றுமே இல்லை. என்னை ஏன் குற்றம் சொல்லுகிறீர்கள்? என்றானாம். ஒருவன் ஆண்டவனுக்கு அடிமையாகிப்போய்த் தன் செயல் எல்லாம் ஆண்டவன் திருவுள்ளம் என்று உண்மையில் நினைத்தால் அவன் எவ்வாறு பாபச் செயலில் புக முடியும்? பாப எண்ணமே அவனை அணுகாது. பரதநாட்டியம் நன்றாகக் கற்ற பெண் ஒரு அடி பிசகாக வைப்பாளா? அவளுடைய கால்கள் ஒரு யோசனையுமின்றித் தாளத்தோடு துள்ளும். நான் ஆண்டவனுடைய அடிமை, எல்லாம் அவனுடைய செயல்- என்கிற புனித எண்ணம் உள்ளத்தில் நிலைத்து விட்டால் அந்த இதயத்தில் அழுக்கு வந்துசேர இடமே இல்லை. இதை மறந்துவிட்டுச் சில கற்றறிமூடர்கள் சாஸ்திர சூத்திரங்களை மோசத்துக்கும் பாபத்துக்கும் கருவியாக <உபயோகிக்கப் பார்க்கிறார்கள். உலகமெல்லாம் மாயை; ஆகையால் நாம் சிற்றின்பம் நுகர்வதில் என்ன பாபம்? என்று தம்மைத்தாமே மோசம் செய்து கொள்ளுகிறார்கள். ஞானானுபவமாகாத அத்துவைத வீண் பேச்சை விட்டுப் பக்தி முறையில் ஈடுபடுவதே மேலானது.
உபநிஷத பிரம்மசூத்திர வேதாந்த சாகரத்தின் கரையைக் கண்டவரான சங்கர பகவத் பாதாசாரியரே உலகம் வியக்கும் தம் ஞானமயமான மதியை நோக்கி மூடமதியே கோவிந்தனைத் துதி கோவிந்தனைத் துதி என்று பாடியிருக்கிறார். சங்கராசாரியரே இப்படிச் சொல்ல, நாம் எம்மாத்திரம்.