சுயசரிதங்கள் எல்லாருமே எழுதுகிறார்கள். ஆனால் நல்ல விஷயங்களை மட்டும் பொறுக்கி எழுதி விட்டு, ஆகாத விஷயங்களைச் சரிப்படுத்தியும் மறைத்துவிட்டும் எழுதுகிறார்கள். உண்மையை முற்றிலும் எழுத ஆரம்பித்தால் எத்தனை மகா பாபச் செயல்களைச் செய்ய எண்ணினோம், அதை பகவான் எப்படியோ தடுத்து நம்மைப் பாபத்தினின்று தப்புவித்தான் என்பதை எல்லோருடைய வாழ்க்கைச் சரித்திரத்திலும் காணலாம். ஆண்டவன் பேரருளால் பாபங்களினின்று தப்புகிறோம். அவன் அருள் இல்லாவிட்டால் மிகப் புகழும் பேரும் பெற்ற பெரியோர்களுடைய கதியும் அதோ கதியாகி யிருக்கும். அவன் அருள் இருந்தால்தான் மீள்வோம் என்பது உண்மையாயினும், நாமும் எத்தனமின்றிச் சும்மா இருக்கக்கூடாது. அருள் என்பது கடற்காற்றைப் போல், காற்று வீசிக் கொண்டேயிருக்கிறது. ஆயினும் அந்தக் காற்றைப் பயன்படுத்துவதற்காகப் படகுக்காரர்கள் பாய் விரித்தாலன்றிப் படகு செல்லாது. நம்முடைய உள்ளங்களாகிய பாய்களைச் சரியாக விரித்து, வீசுகின்ற அவன் அருளைப் பயன்படுத்திக் கொள்வோமாக.
உலக வாழ்க்கையில் நாம் செய்ய வேண்டியதாக ஏற்படும் வேலைகளில் ஒரு வேலை உயர்ந்தது ஒரு வேலை தாழ்ந்தது என்றில்லை. எந்த வேலையும் ஒன்றே; வித்தியாசமில்லை. எந்தக் காரியத்தையும் ஆண்டவனை மனதில் நிறுத்திக்கொண்டு பக்தியுடன் செய்யவேண்டும். அப்படிச் செய்தால் அவன் அருள் பாயில் தங்கி நம்முடைய படகைச் செலுத்தும். எடுத்த காரியத்துக்கு வேண்டிய சாதனங்களும் சூழ்நிலையும் அவன் அருளால் ஏற்படும். எத்தனை ஆண்டுகளோ இருள் மூடியிருந்த ஒரு வீட்டில் விளக்கு ஏற்றினதும் உடனே இருள் நீங்கி ஒளி உண்டாகிறது. அதைப் போலவே ஆண்டவனுடைய அருள் விளக்கு ஏற்றினதும் எத்தனையோ ஜன்மங்களின் பாவங்களும் உன்னை விட்டு விலகி, பக்தி ஒளி வீச ஆரம்பிக்கும். சுவாமி! நீங்கள் ஆண்டவன் தரிசனத்தைப் பெற்றீர் என்று எல்லோரும் சொல்லுகிறார்களே, எங்களுக்கும் அவ்வாறு ஆண்டவன் தரிசனம் கிடைக்கச் செய்யுங்கள். என்று சில சம்சாரிகள் ஒரு நாள் ராமகிருஷ்ணரைக் கேட்டார்கள்.
ஆண்டவன் அருள் இருந்தால், உங்களுக்கு அவன் தரிசனம் கிடைக்கும். ஆனால் நீங்களும் முயற்சி செய்ய வேண்டும். பால் கறந்து, தயிர் ஆக்கி, வெண்ணெய் கடைந்து உங்கள் வாயில் ஊட்டச் சொல்லுகிறீர்களோ? என்றால் பகவான் சிரித்துக்கொண்டு. காற்றுவீசும்போது விசிறி வேண்டியதில்லை. காற்று வீசாதிருந்தால் விசிறிக் கொள்ளவேண்டும். ஆண்டவன் அருள் உண்டானால் நம்முடைய முயற்சிகளை எல்லாம் நிறுத்தி விடலாம். அப்போது பிரார்த்தனையும் வேண்டாம். ஜபமும் வேண்டாம். தியானமும் தவமும் வேண்டாம். அவன் அருள் ஒன்றே போதும், காற்று வீசாத வரையில் விசிறியை எடுத்து விசிறிக் கொள்ள வேண்டியது அவசியம். நான் எனது என்று எண்ணும் வரையில் அவன் அருள் வீசுவதற்குத் தடை, உன்னை நீ மதிக்கும் வரையில் அவன் தூரவே நிற்பான். ஆண்டவன் ஒருவனே எல்லாம் நடத்துகிறான் என்று மனதினின்று ஆணவத்தை முற்றிலும் அப்பபுறப்படுத்தினால் அவன் அருளுக்கு ஓடத்தின் பாயை விரித்த மாதிரியாகும். ஆணவம் நிறைந்து கிடந்தால் அருள் காற்றுக்கு இடமில்லை.
குழந்தையின் சுபாவம், தன் மேல் மண்ணும் குப்பையும் பூசிக் கொள்ளும், தாயின் மகிழ்ச்சி அந்த அழுக்கைத் தேய்த்து அலம்பி நன்றாகச் சுத்தப்படுத்தித் தன் குழந்தையின் அழகு முகத்தைப் பார்த்துக் களிப்படைவது. இவ்வாறே மக்கள் தவறு செய்வது அவர்களுடைய சுபாவமானாலும், ஈசவரி அந்த அழுக்கைத் துடைப்பாள். நாம் அவளுடைய அருமைக் குழந்தைகள். பயப்பட வேண்டாம். தாயைத் தாயென்று உணர்ந்து அன்பு செய்யுங்கள். பாவங்கள் எல்லாம் இருந்தவிடம் தெரியாமல் தொலைந்து போகும். மகனே! தாயை ஏமாற்றப் பார்க்காதே! அன்பு செய்; ஈசுவரிக்குத் தாய் என்பது ஒரு பெயர் மட்டுமல்ல. உன்னைப் பெற்றது யார் என்று எண்ணுகிறாய்? அவள் தானே? பெற்றத் தாயை எவ்விதம் அன்பு செய்து வருகிறாயோ அவ்விதம் உன்னையும் அனைத்தையும் பெற்ற ஈசுவரியை அன்பு செய். அதன் பயனை உடனே பார்ப்பாய். உன் உடல், உன் மனம் அனைத்தும் ஒளி பெற்று விளங்கும். உள்ளத்தின் மகிழ்ச்சி பொங்கும். தாயின் மடியில் உட்கார்ந்து தாயின் முகத்தைப் பார்த்துச் சிரிக்கும் குழந்தை போல் சுகமும் ஆனந்தமும் பெறுவாய்!