ஆயிரம் ஆண்டு தண்ணீரில் கிடந்தாலும் வெளிச்சக்கல்லில் உள்ள நெருப்பு அணைந்து போகாது. எஃகாணி தாக்கினதும் அதிலிருந்து பொறி கிளம்பும். பல்லாயிர வருஷம் நீரில் அமிழ்ந்து கிடந்தாலும் உள்ளே மறைந்து நிற்கும் அக்னியின் வேகம் கொஞ்சமும் சேதப்படாமல் வெளியாகிறது. நல்ல பக்தனுடைய பக்தியும் இத்தகையதே. உலகத்திலுள்ள அழுக்கு அவனுடைய உறுதியான பக்தியைப் பழுது படுத்தாது. என்ன துன்பம் நேரிடினும் அவனுடைய நிலை மாறாது. ஆண்டவனிடம் அவனுக்குள்ள அன்பு வெளிச்சக் கல்லின் நெருப்புபோல் ஒரு அழியாத பொருள். எஃகு பட்டதும் கல்லினின்று தீப்பொறி பறப்பதுபோல், ஆண்டவனுடைய நாமம் கேட்டதும் அவன் உள்ளத்தினின்று பக்தித்தீப் பொறி பறக்கிறது. துன்பமும் பழியும் வந்து பக்தனைப் தாக்கும். ஆனால் உரைக்கல்லில் தங்கத்தைத் தேய்ப்பதுபோல் அதுவெல்லாம் பரீக்ஷையேய ன்றித்துன்பமல்ல, பக்தனுடைய பக்தி அந்தச் சோதனைகளில் எல்லாம் வெற்றிபெற்று உறுதியடையும்.
புலன்களின் வழியாய் அடையும் போகங்களின் மோகத்தை ஒருவன் எப்படித் தப்புவது? ஆண்டவன் நினைவிலும் தியானத்திலும் ஆனந்தம் கண்டு வழக்கப்படுத்திக் கொண்டால். புலன்களின் அபாயம் ஒழியும். சிற்றின்பத்தின் வலையினின்று தப்பவேண்டுமானால், பகவத் தியானத்தில் மகிழ்ச்சி காணப் பயிலுவதே வழி. பெருமகிழ்ச்சி கண்டதும் சிறு மகிழ்ச்சியின் சக்தி குறைந்து போகும். ஆண்டவனை நுகர்ந்து ருசிகண்ட பக்தன், க்ஷணமாத்திரம் ஆரம்பத்தில் சுகம் தந்து பின்பு துன்பமாக முடியும். புலன் நுகர்ச்சி இன்பங்களைத் தேடி அலையமாட்டான். அலைச்சலைத் தவிர அவற்றில் உண்மைச் சுகமில்லை. என்பதை அறிந்தபின் தன்னைத்தானே ஒருவன் துன்பப்படுத்திக் கொள்ளமாட்டான். கற்கண்டை அறிந்தவன் குப்பையும் மண்ணும் நிறைந்த கருப்புக்கட்டியை மதிக்கமாட்டான். அரண்மனையில் கட்டிலில் படுத்துத் தூங்கியபின் அழுக்கு நிறைந்த சேரிக் குடிசையைத் தேடி ஒருவன் மண்ணில் படுத்துத் தூங்குவானா? கடவுளைக் குறித்து ஆனந்தம் கண்டபக்தன் கள்ளுக்கு ஆசைப்படமாட்டான்.
சிற்றின்ப எண்ணங்களை உண்டாக்கும் சந்தர்ப்பம் ஏதேனும் நேரிட்டால். உடனே உள்ளத்தை ஆண்டவன் பால் செலுத்து, இதைப் பழக்கப்படுத்திக் கொண்டால் எல்லா அபாயமும் தாண்டிப்போகலாம். எங்கேயும் ஈசுவரி உன்பக்கத்தில் நிற்கிறாள் என்பதை நினைவில் வைத்துக்கொள். தனியான இடத்தில் யாரும் உன்னைப் பார்க்காத சந்தர்ப்பத்திலும் அவள் உன் பக்கத்திலேயே நிற்கிறாள். இதை உணர்ந்துவிட்ட பக்தனுக்கு அபாயம் ஏது? எந்தப் பண முடிப்பும் எந்தப் பெண்ணழகும் அவனுக்கு ஆபத்தாகாது. புகழுக்காகப் பக்தியும் பூஜையும் செய்பவனுடைய பக்தியும் பூஜையும் உண்மை பக்தியல்ல; உண்மைப் பூஜையும் அல்ல, மவுனமும் தனிமையுமான பக்தியே பக்தி. ஆரவாரமும் ஆகுலமும் கூடிய பகவதாராதனம் எல்லாம் பயனற்ற வேஷமாகும். மலையருவியானது பாறைகளிடையில் குதித்து ஓடி, பிறகு கம்பீர நதியாக அகன்று செல்கிறது. பக்தன் இதயமும் அவ்வாறே. துன்பமும், தடையும், ஐயமும் தாண்டிப் பிறகு உறுதிநிலை. அடைகிறது. அவ்வப்போது நேரிடும் கவலையும் கலக்கமும் எளிதில் தீர்ந்துபோய்ச் சமநிலை அடைகிறது. பக்தனுடைய நெஞ்சில் உண்டாகும் கலக்கங்கள் க்ஷண மாத்திரமே துன்பம் உண்டாக்கும். உடனே பக்தி நிலையின் ஆனந்தத்தில் அவை கரைந்துபோகும்.
பக்தன் பகவானுடைய குழந்தை, அவன் கண்களில் வடியும் கண்ணீரே அவன் பலம். ஹரியின் பெயர்களில் ஒன்றைக் கேட்ட மாத்திரத்தில் மயிர்க்கூச்சு எடுப்பதும் கண்களில் நீர் வடிவதும் பக்தனுக்கு அடையாளம். அக்குறிகள் உண்டானால் இதுவே உன் கடைசிப் பிறப்பு, சம்சாரத்தினின்று மோக்ஷம் அடுத்தாற்போல் இருக்கிறது என்பதை அறிவாய்.