பதிவு செய்த நாள்
20
ஆக
2015
05:08
விடுதலை யடைந்து விட்டோம்; நம்முடைய நாடு குடியரசு நாடாகி விட்டது. உலகத்தில் பெரும் கவுரவஸ்தானம் நம் தேசம் பெற்றுவிட்டது. நம்முடைய தலைவரை உலகப் பெரியோர்கள் அனைவரும் மிகப் பெரியவராகப் புகழ்ந்தும், வணங்கியும் வருகிறார்கள். இப்படியெல்லாமிருந்தும், ஏன் நாம் இன்னும் பிச்சைக்காரர்களாகவும் மோசக்காரர்களாகவும் நடந்து கொள்ளுகிறோம்? பொய்யும் மோசமும் வாழும் வழி என்று ஏன் நாம் எண்ணுகிறோம்? எச்சில் சோற்றைத் தேடித் திரியும் நீசர்களைப் போல் ஏன் நடந்து கொள்ளுகிறோம்? நம் பாரத தேவியின் பெரும் பதவியை நாம் அறியாமல் அநியாயமாக நம்மை நாம் ஏன் தாழ்த்திக் கொள்ளுகிறோம்? இவ்வாறு வருந்தி ஆராயும் தேசபக்தர்களுக்கு ராமகிருஷ்ணர் அந்தக் காலத்தில் சொன்ன ஒரு கதையை எடுத்துச் சொல்லலாம்.
ஒரு நாள் காட்டில் மேய்ந்துகொண்டிருந்த ஒரு ஆட்டு மந்தையைப் புலி ஒன்று தாக்கிற்று. புலி வயிற்றில் குட்டியிருந்தது. முதிர்ந்த பிரசவப் பருவம், தாக்கின வேகத்தினால் அவ்விடமே குட்டி போட்டு விட்டுத் தாய்ப் புலி உயிர் நீத்தது. குட்டி பிழைத்து, ஆட்டு மந்தையிலேயே வளர்ந்து வந்தது. ஆடுகளோடு ஆடாகப் புல் மேய்ந்து தன்னுடைய சுய சொரூபம் தனக்குத் தெரியாமல் வளர்ந்து வந்தது. ஆட்டுச் சுபாவத்தையே புலிக் குட்டியும் அடைந்து விட்டது. சில ஆண்டுகள் கழிந்தன. அந்த ஆட்டுமந்தையை வேறொரு புலி ஒருநாள் தாக்கிற்று. ஆடுகள் சிதறி ஓடின. அப்போது புலிக்குட்டியும் ஆடுகளைப் போலவே ஓடிற்று. தாக்கிய புலி தன் இனத்தைச் சேர்ந்த இந்தக் குட்டியைப் பார்த்து. இது எப்படி இங்கே வந்து சேர்ந்தது என்று வியந்து துரத்திப்போய் அதன் கழுத்தைக் கவ்விப்பிடித்து, புலிக்குட்டி, பா, பா, என்று ஆட்டுக் குட்டியைப்போல் கத்த ஆரம்பித்தது. கிழப்புலி அந்த ஆட்டுப் புலிக்குட்டியை ஒரு தண்ணீர்க் குட்டையண்டை இழுத்துப்போய்த் தண்ணீரில் அதன் பிம்பத்தைக் காட்டி, ஏ, மூடக்குழந்தாய்! நீயும் நானும் ஓர் இனம், அதோ பார், என்னைப் போலவே நீயும் இருக்கிறாய். ஏன் ஆட்டைப் போல பயந்து ஓடுகிறாய்? நீயும் என்னைப் போல ஒரு புலிதான். பயப்படாதே! என்றது. இப்படிச் சொல்லி ஆட்டிறைச்சித் துண்டை அதன் வாயில் போட்டு தின்னு தின்னு! என்றது. முதலில் குட்டி தின்னவில்லை. பா, பா என்று கத்திக்கொண்டு வெறுப்புடன் இறைச்சியைத் தின்ன மறுத்தது. கொஞ்ச நேரத்திற்குள் நாக்கில் பட்ட இறைச்சியின் ருசி ஏறிவிட்டது. புலிச் சுபாவம் மேலிட ஆரம்பித்தது. இறைச்சித் துண்டைத் தின்று விட்டது. இன்னும் வேண்டுமென்று கேட்டது. அவ்வளவு நாள் மறைந்திருந்த புலிச் சுபாவம் மிக வேகத்தோடு கிளம்ப ஆரம்பித்தது.
நீ யார் என்பதை இப்போது தெரிந்த கொண்டாயோ? வா, என்கூட, ஆட்டு மந்தையில் இனி உனக்கு வேலையில்லை என்றது பெரும் புலி. பழைய அடிமை வாழ்க்கையின் குண விசேஷங்களை சீ என்று நீக்கிக்கொண்டு, சீக்கிரம் நமக்குரிய கவுரவத்தை அடைவோமாக, வறுமையல்ல துன்பம், சிறுமையே துன்பம், வறுமையிலும் பெருமையுடன் வாழலாம். அயோக்கியம் வேண்டாம். நம்பாரத தேவியின் புது கவுரவ நிலையைக் காப்பாற்றுவோமாக, திருட்டு, பொய் முதலிய பயங்கொள்ளி நீச சுபாவங்கள் வேண்டாம்.