இது வேண்டும்; அது வேண்டாம் என்று ஆண்டவனைக் கேட்காதே, எல்லாம் உன் இஷ்டப் படி என்று அவனுக்கு விட்டுவிடு. இவ்வாறு எல்லா சாஸ்திரங்களும் சொல்லியிருப்பது உண்மை, ஆயினும் மானிட ஜன்மத்தின் பண்பு இதற்கு இணங்க முடியவில்லை. தொன்றுதொட்டு இதுவரையிலும் பிரார்த்தனை செய்துதான் வருகிறோம். எல்லாம் உன் அருள்; உன் பொருள் என்று வாயால் சொல்லிவந்த போதிலும், உள்ளத்தில் எண்ணியும் பிரார்த்தித்தும் வரும்முறை இதை எனக்கு தா, அதை எனக்குச் செய் என்றே நடந்துவருகிறது.
ஆண்டவனுடைய செயலும் பண்பும் நம் அறிவுக்கு எட்டாதபடியாலும் எது நன்மை, எது துன்பம் என்பதை நாம் சரியாக முற்றிலும் அறிந்துகொள்ள முடியாதபடியாலும் எல்லாவற்றையும் அவனுக்கே விட்டுவிடுவது மேலான முறை, இதில் சந்தேகமில்லை. ஆனபோதிலும் சேதனம் பெற்றிருக்கும் உயிர்கள் ஒருவரோடு ஒருவர் பேசிச் சம்பாஷணை செய்வதுபோல் ஆண்டவனிடமும் சம்பாஷிப்பதில் குற்றம் ஒன்றுமில்லை. அதுவே இயற்கைச் செயல், உள்ளத்திலுள்ளதை ஆண்டவனிடம் சொல்லிவிடுவதில் என்ன தவறு? ஒன்று மில்லை. புருஷனும் மனைவியும் வாய்விட்டுப் பேசிக் கொள்ளுவதுபோல் ஆண்டவனை சர்வ விஷயத்திலும் எஜமானனாயினும் பிரார்த்தனை மூலம் அவனோடு தாராளமாகச் சம்பாஷிப்பதில் குற்றமில்லை. நன்மையேயாகும். தினமும் ஒரு வேளையாவது ஈசனோடு பேசி, அழுது, விளையாடி, சம்பாஷித்து வருவோமானால் நம் உள்ளமும் பேச்சும் செயலும் துப்பரவு அடையும். பிரார்த்தனையின் பயனாக உள்ளம் அழுக்கு தீர்ந்து சுத்தியடைகிறது என்பதில் ஐயமில்லை. அனுபவத்தில் அனைவரும் காணக்கூடிய உண்மை. பிரார்த்தனை எந்த முறையில் செய்யவேண்டும்? மனதில் மவுனமாகச் செய்யவேண்டுமா? அல்லது பிறர் கேட்கும்படி வாய்விட்டுச் செய்வதா? என்று ஒருவர் கேட்டதற்கு பகவான் ராமகிருஷ்ணர் சொன்னார்: எப்படி இஷ்டமோ அப்படிச் செய்யலாம். மெள்ள அழுதாலும் அவன் சாதுக்கு எட்டும். சிற்றெறும்பின் காலடிச்சத்தம் கூட ஆண்டவன் காதுக்கு எட்டும்.
பிரார்த்தனை செய்வதனால் பயன் உண்டா?
மனமும் வாக்கும் ஒன்றுபட்டு உள்ளச் சுத்தியுடன் செய்யப்படும் பிரார்த்தனை கட்டாயம் பலன், தரும். வாயால் இவை அனைத்தும் உன் சொத்து என்று சொல்லுவதும், அப்படிச் சொல்லும்போதே உள்ளத்தில் இவையனைத்தும் எனது என்று எண்ணிக் கொண்டு பிரார்த்தனை செய்தால் பயன் அடைய முடியாது. பிரார்த்தனை செய்யும்போது உன்னை நீயே ஏமாற்றிக் கொள்ளாதே. ஆண்டவனிடம் பொய் சொல்லாதே. உள்ளமும் செயலும் ஒன்றாக இருக்க வேண்டும். இந்த உள்ளத்துடனும் நல்ல சிந்தனையுடனும் பிரார்த்தனை செய். ஆண்டவன் மறுக்க மாட்டான். அவன் உன்னிடம் மிகப் பிரியம் கொண்டவன். காலத்தில் என்ன செய்யவேண்டுமோ அதைச் செய்துவிட்டு ஆண்டவன் பேரில் பாரம் போட்டுவிடு. எதற்கும் கவலைப்படாதே!.
கடலில் திசைகாட்டும் துருவமுள்ளைச் சரியாக வைத்துக் கொண்டிருக்கும் வரையில் கப்பலுக்கு அபாயமில்லை. காந்தமுள் எப்போதும் துருவத்தை நோக்குவதைப்போல் மனம் இடைவிடாமல் ஆண்டவனை நோக்கியே நின்றால் வாழ்க்கை என்னும் கப்பல் கரையைப்போய்ச் சேரும்; பயமில்லை.
பாமரர்களும் மற்றவர்களும் பழைய முறையில் வழிபடும் மூர்த்திகளைப் பக்தியோடு உன்னால் வழிபட முடியாமலிருந்தாலும் கவலைப்பட வேண்டாம். உனக்கு உருவம் உண்டோ இல்லையோ, அது எனக்குத் தெரியவில்லை. உன் சொரூபம் எனக்கு விளங்கவில்லை. நான் அறியமாட்டேன். எவ்வாறாயினும் எனக்கு அருள்வாய் என்று வேண்டிக்கொள்.
ஆண்டவன் உன்னை நிச்சயமாகக் கவனிப்பான். மகனே, அவனைப்போல் உன்னைக் கவனிப்பார். யாருமே இல்லை. நீ அவனே வேண்டிக்கொண்டதெல்லாம் அவன் கவனித்தே இருக்கிறான். உனக்கு எது நன்மை என்பதை அவனே அறிவன். ஒருநாள் உனக்கு நிச்சயமாகத் தரிசனம் தருவான். மரணத்தறுவாயிலாவது தரிசனம் தருவான். பிரார்த்தனை செய்வதை விடாதே. கஷ்டத்திலும் சுகத்திலும் சம்பாஷணைக்குத் தகுந்த நண்பன் அவனைப்போல் வேறு யாருமில்லை. பிரார்த்தனை என்பது சேதன உயிர்கள் ஆண்டவனோடு சம்பாஷிப்பதேயாகும். மக்கள் ஊமையாக இருக்க இயலாது. பக்தி நிறைந்த பிரார்த்தனை என்பது அந்த நியதிக்குள் அடங்கும்.