பொய்யும் புனைசுருட்டுமே பலன் தரும் என்று எண்ணி எண்ணி அதுவே வழக்கப்பட்டுப் போயிருக்கிற படியால் தருமோபதேசங்களை இதுவெல்லாம் என்ன பிரயோசனம் என்று தள்ளிவிடுவது உலகத்தார் வழக்கம். ஆயினும் உய்யும் வழி இதுஅல்ல. தருமமே சுகம், தருமமே சந்தோஷம், தருமமே சாதுரியம், தருமமே செல்வம், தருமம் கெட்டால் நாடு செழிக்காது. எல்லோரும் தரித்திரநிலை அடைவார்கள். மோசமும் பித்தலாட்டமும் சமுதாயத்தை நாசம் செய்து விடும். சமுதாயம் கெட்டால் அனைவரும் கெடுவோம்.
சில வலைச்சிகள் சந்தைக்குப்போய் மீன் விற்று விட்டு ஊருக்குத் திரும்பினார்கள். அன்று சந்தையில் அதிக நேரம் இருக்க நேரிட்டபடியாலும், வழியில் மழை பிடித்துக் கொண்டபடியாலும், இருட்டுவதற்கு முன் ஊர் போய்ச்சேர முடியவில்லை. வழியில் ஒரு கிராமத்தில் பூந்தோட்டக்காரன் ஒருவன் குடிசையண்டை நின்றார்கள். தோட்டக்காரன் நல்லவன், இரவு இங்கே தங்கி, விடிந்ததும் போங்கள் என்றான். வலைச்சிகள் அப்படியே, சரி என்று தங்கினார்கள். இராத்திரி வலைச்சிகளுக்கு அங்கே தூக்கமே பிடிக்கவில்லை. புரண்டு புரண்டு தூங்கப் பார்த்தார்கள்.
அவர்கள் இருந்த அறையில் தோட்டக்காரன் மல்லிகைப் பூவைப் பறித்து ஒரு கூடையில் வைத்திருந்தான். மறுநாள் காலை தன்னிடம் வாடிக்கையாகப் புஷ்பம் வாங்குபவர்கள் வீட்டுக்குக் கொண்டு போவதற்காக வைத்திருந்தான். அந்த வாசனை வலைச்சிகளுக்குப் பிடிக்கவில்லை. தூங்க முடியவில்லை. கொஞ்ச நேரம் கழித்து அவர்களில் ஒருத்தி எழுந்து உட்கார்ந்து, இந்த நாற்றம் நிற்கவே மாட்டேன் என்கிறது. வரவர அதிகமாகிறது. இதற்கு என்ன செய்ய? என்றாள். பிறகு கொஞ்சம் தண்ணீர் எடுத்துத் தங்கள் மீன் கூடைகளின் மேல் தெளித்துவிட்டுக் கூடைகளைப் பக்கத்தில் வைத்துக்கொண்டு படுத்தார்கள். மீன் நாற்றம் மிஞ்சி மல்லிகை வாசனையை அடக்கிவிட்டது. வலைச்சிகள் குறட்டை விட்டுத் தூங்கிப் போனார்கள்.
அவரவர்கள் வழக்கம் அவரவர்களுக்குச் சுவர்க்கம். நல்ல சகவாசமும் நல்ல பழக்க வழக்கங்களும் இல்லாமற்போனால் துன்மார்க்கமே மேன்மையாகத் தோன்றும். அது தான் லௌகீக வாழ்க்கைக்கு வேண்டிய கெட்டிக்காரத்தனம் என்றும் தோன்றும். இந்தக் கலியுகத்தில் நாம் செய்யவேண்டிய தவம் ஒன்றே; உண்மை பேசுவது. அதைக்கூடச் செய்ய மாட்டோம் என்கிறோம். வியாபாரம் செய்பவர்கள். கச்சேரியில் வேலையில் இருப்பவர்கள் அனைவரும் உண்மை பேசவேண்டும். சத்தியமே கெட்டிக்காரத்தனம். அதுவே கடவுளை அடையும் வழியும் லௌகீக சாதுரியமும் ஆகும். வீட்டில் பண்டிகை நாட்களில் நந்தா விளக்கு ஏற்றுகிறோம். அது எரிந்துகொண்டே இருக்க வேண்டும். அணைந்து விட்டால் குடும்பத்துக்கு ஏதாவது கஷ்டம் நேரிடும். அப்படியே கடவுள் நினைவும் ஒரு நந்தா விளக்கு. இதய கமலத்தில் ஏற்றி வைத்த அந்த விளக்கு அணைந்து போகாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். எந்த லௌகீக காரியத்தில் ஈடுபட்டிருந்தாலும் அவ்வப்போது அந்த விளக்கில் எண்ணெய் ஊற்றியும் திரியைத் தூண்டிக்கொண்டும் இருக்க வேண்டும். அதனால் எந்த வேலையும் தடைப்படாது வெற்றி ஏற்படும்.