அம்மா, எனக்கு நீ கொடுத்த கண்ணாடியில் முகம் சரியாகத் தெரியவில்லையே! என்றாள் கமலி. கண்ணாடியை நன்றாகத் துடைத்து வைத்துக்கொள் என்றாள் கமலியின் தாயார். அதன் மேல் எண்ணெயும் தூசியும் படிந்திருந்தால் சரியாகத் தெரியாது. துப்புரவாக வைத்துக் கொண்டால் நன்றாகத் தெரியும், பார்! என்று சொல்லித் துணி எடுத்துக் கண்ணாடியைச் சுத்தமாகத் துடைத்துக் குழந்தைக்குத் தந்தாள். கமலி சிரித்துக்கொண்டு ஆம், ஆம்! என்று தன் முகத்தைக் கண்ணாடியில் பார்த்துப் பார்த்து மகிழ்ச்சி யடைந்தாள்.
தியானத்தில் கடவுளைக் காணும் ரகசியமும் இதுவே. உள்ளத்தைத் துப்புரவாக வைத்துக் கொண்டால் அதில் ஆண்டவன் முகத்தைக் காணலாம். ஆசையும் அழுக்கும் படிந்திருக்கும் உள்ளத்தில் அந்த திவ்ய சொரூபம் காணப்படாது. ராமகிருஷ்ணர் தேவியை நேரில் கண்டு மகிழ்ந்து ஆனந்தத்தில் மூழ்கினார். என்றால் அதன் காரணம் இதுவே. அவர் உள்ளத்தில் அழுக்கே இருக்கவில்லை. இதுவே அவர் பிறருக்கும் உபதேசித்தது. அந்த உபதேசத்தை உணர்ந்து பயன்படுத்திக் கொள்வோமாக.
குளத்து ஜலத்தில், கரையிலுள்ள மரமும் செடியும் வானமும் வெளிச்சமும் நன்றாகப் பிரதிபலிக்கிறது. காற்றடித்து ஜலம் கலங்கினால் மறைந்து போகிறது. நாம் கடவுளைக் காண்பதும் அவ்வாறே. உள்ளத்தைப் பாசி மூடாமலும் கோபம் துவேஷம் முதலிய காற்று வீசிக் கலங்கிப் போகாமலும் வைத்துக்கொண்டால் அதில் ஆண்டவன் ஒளியைக் காணலாம். கோபமும் ஆசையும் துவேஷமும் பற்றுகளும் பாபங்களும் உள்ளதைப் பற்றிக் கொண்டு மூடியும் கலக்கியும் வந்தால் ஒளி மறைந்து போகிறது.
சிறு விஷயங்களில் ஆசையைத் தீர்த்துக் கொண்டு, பேராசைகளை விவேகத்தைக் கொண்டு ஒழித்துக் கொள்ள வேண்டும். அறிவை இதற்குப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அடைந்த அறிவை யெல்லாம் வாதிப்பதிலும் அகம்பாவத்திலும் செலுத்தினால் பயனில்லை.
ஆசைகளையும் பற்றுகளையும் நீக்கிக் கொள்ளுவதில் அறிவைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அப்படிச் செய்தால் உள்ளம் நிர்மலமான ஜலம்போல் ஒளிவீசும், ஆண்டவனுடைய முகம் பிரதிபலிக்கும்.
உலக வாழ்க்கை ஒரு பெரும் பாதாளக் கிணறு போலாகும். குழந்தை அதன் பக்கத்தில் நின்று கொண்டு எட்டி எட்டிப் பார்த்தால் என்ன சொல்லுவோம்? அங்கே நிற்காதே, எட்டிப் பார்க்காதே, தூர நில் என்போம். அவ்வாறேயாகும் வாழ்க்கையின் அபாயங்கள். கிணற்றில் விழுந்து விட்டால் மீள்வது துர்லபம். லோபமும் கோபமும் விடமாட்டேன். என்கின்றனவே, இதற்கு என்ன செய்ய?
ஆசையும் கவலையும் கோபமும் சுபவாத்தில் நிலைத்திருக்கின்றன. அவற்றைப் பிடுங்கி ஏறிய முடியவில்லையானால் சரியான வழியில் அவற்றைத் திருப்பி அமைத்துக்கொள்ள வேண்டும். உன் காதல் சுபாவத்தைக் கடவுள் மேல் செலுத்து, உன் ஆசையையும் சக்தியையும் ஆண்டவனை அடையும் முயற்சியில் செலவழிக்கப் பார். உன் கோபத்தைக் கூடக் கடவுள்மேல் செலுத்து! ஏன் எனக்குத் தரிசனம் தரமாட்டாய் என்று அவன் மேல் கோபித்துக்கொள். மக்கள் பேரில் உண்டாகும் ஆத்திரத்தை ஆண்டவன் பேரில் செலுத்தித் தீர்த்துக்கொள் என்றார் பரமஹம்ஸர். இது சுபாவத்தை வெல்லும் வழி.
பெருங்காட்டு மிருகங்களை யெல்லாம் சாதுவாகச் செய்துவிடுகிறேமல்லவா? யானையை அடக்கி, சொன்ன படி செய்யப் பண்ணுகிறோம். நம்முடைய மனமும் அடக்கி ஆளக்கூடிய ஒரு மிருகம். முயற்சி வீண் போகாது. உள்ளத்தை அடக்காமல் கண்டபடி காட்டில் திரிந்து மேய விடாதீர்கள். பயனற்ற எண்ணங்களே காடு. அதில் மேயவிட்டால் உள்ளம் ஒரு காட்டு யானையாகப் போகும். அடக்கி ஆள முடியாமற் போகும். ஏமாந்து போகாதீர்கள். விவேகமே யானையை அடக்கும் அங்குசம்.
பற்றுகளையும், ஆசைகளையும் குறைத்துக்கொண்டே போகவேண்டும். அவை வளர்ந்தால் விவேகம் வளராது. பூண்டு வளர இடம் கொடுத்து விட்டால் பயிருக்குச் சேதம்; களை பிடுங்கினால் பயிர் நன்றாக வளரும். இல்லாவிட்டால் பயிர் அழிந்து வயல் காடாகிப் போகும். அப்படியே விவேகமும், ஆசைகளையும் பற்றுகளையும் குறைத்துக்கொள்ளாமற் போனால் விவேகம் வளராது.