கதை, காலக்ஷேபம், பிரசங்கம் முதலிய தருமோபதேச முயற்சிகளில் பலர் ஈடுபட்டு வேலை செய்து வருகிறார்கள். இவர்கள் நன்றாகப் படித்து சாஸ்திரப் பயிற்சி பெற்றவர்கள் என்பதில் சந்தேகமில்லை. இவர்களுடைய முயற்சியும், நல்ல எண்ணத்துடன் செய்யப்படும் முயற்சியேயாகும். ஆனால் மக்களைத் திருத்த வேண்டுமானால் முக்கியமாக வேண்டியது பக்திவேகம், போதிப்பவர்களுடைய பக்தியே கேட்பவர்கள் உள்ளத்தில் பாய்ந்து வேலை செய்யும். சாமார்த்தியமாகப் பேசுவது மட்டும் போதாது. சமயப் பிரசாரம் செய்கிறவர்களைப் பற்றி உங்கள் அபிப்பிராயம் என்ன? என்று பகவான் ராம கிருஷ்ணரை ஒருவர் கேட்டார்.
இதற்கு அவர் பதில் சொன்னதாவது: ஒருவன் தன்னுடைய வீட்டில் தனக்கே போதும் போதாததுமாக சாப்பாடு இருக்கும்போது நூறுபேரைச் சாப்பிடக் கூப்பிட்டால் அவனுடைய நிலைமை எப்படியிருக்கும்? அந்த நிலைமையே சாதாரணமாகப் பிரசாரம் செய்பவர்கள் நிலைமை. அவர்கள் உள்ளத்தில் உண்மையாக நிலைத்திருக்கும் பக்தி அவர்கள் உய்வதற்கே போதாது. அப்படியிருக்க மற்றவர்களுக்குப் பக்தி ஊட்டுவது எப்படி? முதலில் உங்கள் உள்ளத்தில் ஆண்டவனை அமைத்துக் கொள்ளுங்கள். பிறகு மற்றவர்களுக்குப் போதிக்கப் பிரசங்கமும் உபதேசமும் ஆரம்பியுங்கள். ஒருவன் தன் உள்ளத்தில் காமமும் கோபமும் பற்றுகளும் வைத்துக்கொண்டு பிறருக்கு வைராக்கியமும் பக்தியும் உபதேசித்தால் என்ன பயன் உண்டாகும்? பிறருக்கு உபதேசம் எளிதில் செய்து விடலாம். ஆனால் அது மூர்த்தியில்லாத பாழுங் கோயிலில் மணியடித்து, சங்கு ஊதுகிற மாதிரி.
குற்றங்கள் இருக்கலாம். ஆயினும் உண்மையான பக்தி உண்டாகி ஆண்டவனைச் சரண்அடைந்து அந்தக் குற்றங்களினின்று நீங்கிப் பிறருக்கும் வழி காட்டலாம். இத்தகைய ஒருவனை பகவான் ராமகிருஷ்ணர் கண்டு பேசிய கதை ஒன்று சொல்லுகிறார்: என்ன சுவாமிகளே! தருமோபதேசம் பலமாகச் செய்து வருகிறீர். உம்முடைய சொந்தகதை வேறு விதமாக இருக்கிறதே! இவ்வளவு தோஷங்களை வைத்துக் கொண்டு நீர் எப்படி மக்களை வசீகரித்து அவர்களைப் பக்தியில் ஈடுபடச் செய்து வருகிறீர்! இதன் ரகசியம் என்ன? என்று பரமஹம்ஸர் கேட்டார். நான் மகா நீசன் என்பது உண்மை. ஆயினும் ஆண்டவன் அருள் என்பது ஒன்று இருக்கிறது. ஒரு துடைப்பக்கட்டை தெருவையும் வீட்டையும் பெருக்கிச் சுத்தம் செய்ய உபயோகப்படுகிறதல்லவா? அத்தகைய அழுக்குப்பட்ட ஒரு கருவி நான் என்றார் அந்த மனிதர்.
இதற்கு நான் ஒரு பதிலும் சொல்ல முடியவில்லை என்கிறார் ராமகிருஷ்ணர். ஒருவனுடைய உள்ளத்தில் பக்தி அமைந்து இதய கமலத்தில் ஆண்டவன் கோயில் கொண்டபின் எந்த தோஷமும் தடையாகாது! சூரியனுடைய கிரணங்கள் வெளிச்சமும் வெப்பமும் பரப்புவதுபோல் அவனுடைய பக்தி மற்றவர்களுடைய உள்ளத்துக்குள் ஊடுருவிப் பாயும்.