சுபாவத்தை எப்படி நான் வெல்ல முடியும் என்று பயப்படாதே, கன்னங்கரேல் என்றிருக்கும் கரியை நெருப்பு தீண்டியதும் அது என்னவாகிறது! அதன் சுபாவமான கறுப்பு தீர்ந்து போகிறது. அவ்வாறே உன்னுடைய சுபாவமும், ஞானத் தீ பட்டதும் உள்ளத்தின் கறுப்பு தீர்ந்து போகிறது! உள்ளத்தைச் சுவாதீனத்தில் வைத்துக்கொண்டு அதில் அழுக்குச் சேராமல் வைத்துக்கொண்டால் எதையும் செய்ய முடியும்.
வண்ணான் வீட்டிலிருந்து வந்த புதுத் துணிக்கு எந்தச் சாயமும் ஏற்றிவிடமுடியும். அந்தத் துணியைப் போன்றதுதான் மனமும். நல்ல சகவாசமும் முயற்சியும் இருந்தால் அதை நல்வழிக்குத் திருப்பலாம். ஆங்கிலம் படித்தவர்களுடைய பேச்சைப் பாருங்கள். ஆங்கில மொழிகள் கலந்தே எப்போதும் பேசுவார்கள். சமஸ்கிருதம் படித்தவர்கள் எப்போதும் சுலோகங்களை மேற்கோள்களாக எடுத்துக் காட்டியே பேசுவார்கள். சத்சங்கத்திலிருப்பவர்களுடைய மனம் கோணல் வழிகளில் செல்லாது. கெட்ட சகவாசத்தில் இருப்பவர்களுடைய சிந்தனை எப்போதும் கெட்ட விஷயங்களில் செல்லும். துணியில் சாயம் ஏறுவது போல் மக்கள் உள்ளங்கள் சகவாச குணத்தை ஏற்றுக்கொண்டுவிடும். சகவாசம் நல்லதாயிருந்தால் நல்ல குணம் உண்டாகும். சகவாசம் தோஷங்கள் கொண்டதாக இருந்தால் கெட்ட சுபாவம் வளரும்.
தன்னைத்தான் மோசம் செய்து கொள்ளக்கூடாது. உன் உள்ளத்தை நீ மோசம் செய்யப் பார்த்தால் உனக்கே நஷ்டம், உண்மையும் பக்தியும் தெய்வத்தை அடையும் வழி. ஆண்டவனை மறந்தால் மாண்டு போவாய். பக்தி இல்லையேல் வாழ்க்கை இல்லை.
பிறரைக் கொல்ல வேண்டுமானால் கத்தியும் துப்பாக்கியும் வேண்டும். தற்கொலைக்கு ஒரு ஊசியும் போதும். அதைப் போலவே பிறருடைய அஞ்ஞானத்தைப் போக்கி ஞானம் ஊட்டவேண்டுமானால் பல்வேறு சாஸ்திரங்கள் ஓத வேண்டும். தன் உள்ளம் ஒளி பெறுவதற்கு ஒரு சின்னஞ்சிறு மந்திரம் போதும், ஆனால் பக்தியிருக்க வேண்டும்.
பக்தியே எல்லாச் சமயங்களுக்கும் வேர். பக்தியிருந்தால் அவனவன் சமயமும் ஆசாரமும் அவனவனுக்குப்போதும். பக்தியில்லாத ஒருவன் எத்தனை அறிவு பெற்றாலும், சமயம் மாறினாலும் ஞானம் அடையமாட்டான்.
இதைத் தின்னும் அதை தின்னாது என்று வைத்த உணவை மோந்து பார்த்துத் தள்ளும் பசு என்ன பால் கறக்கும்? எதை வைத்தாலும் ஆவலோடு தின்று விடுகின்ற பசுவோ மடி நிறைந்து வேண்டிய பால் தரும்.
ஐயம் குடி கொண்ட மூளையில் ஞானப்பால் சுரக்காது.
தாகம் அதிகரித்தபோது ஒருவன் ஆற்று நீரில் ரொம்ப மண் கலந்திருக்கிறது என்று தாகத்தைத் தீர்த்துக் கொள்ளாமலிருக்கமாட்டான். இந்த ஜலத்தில் மண் கலந்திருக்கிறது என்று நல்ல சுத்தமான தண்ணீருக்காகக் கிணறு வெட்ட ஆரம்பிக்க மாட்டான். தாகத்தைப் போன்றதுதான் ஆண்டவன் அருளைப் பெறும் ஆசையும். அருகில் இருக்கும் சமயத்தை, சேறு கலந்திருக்கிறது என்று தள்ளிவிட்டு அதில் தாகம் தவிர்த்துக் கொள்ளாமல் வேறு மதங்களைத் தேடிப் போகமாட்டான். தனக்காக ஒரு புது மதமும் உண்டாக்க முயற்சி செய்ய மாட்டான். உண்மையான வேட்கை ஏற்பட்டிருப்பின் தான் பிறந்த சமயத்தைக் கொண்டே தாகம் தீர்த்துக் கொள்ளுவான். புதுமதம் உண்டாக்கிக் கொள்வதற்கு வேண்டிய கற்பனைக்கும் யோசனைக்கும் அவனுக்கு ஏது அவகாசம்?
லோபி ஒருவன் பணத்துக்கு ஆசைப்படுவது போல் பக்தன் ஆண்டவனை விரும்புகிறான். குளத்தில் விழுந்து முழுகிப்போய் இறக்கும் தறுவாயில் ஒருவன் சுவாசத்துக்காக எப்படித் தத்தளிக்கிறானோ அப்படி ஆண்டவனைக்காண பக்தன் தத்தளிப்பான். குருட்டு பக்தி என்று ஏளனமாகச் சிலர் பேசுவதைக் கேட்டிருக்கிறீர்கள். இது எனக்கு விளங்கவே இல்லை என்றார். ராமகிருஷ்ணர், குருட்டு பக்தி என்றால் என்ன? குருட்டு பக்தி என்றும் கண்ணுள்ள பக்தி என்றும் இரண்டுவித பக்தி கிடையாது. அறிவு என்றும் பக்தி என்றும் உண்டு. ஆனால் பக்தியில் குருட்டு பக்தி என்ற ஒரு தகாத பக்தி கிடையாது. பக்திக்குக் கண்கள் இல்லை. எல்லாவித பக்தியுமே குருடுதான். ஆண்டவனை நீக்கிவிட்டு வாழ்க்கை நடத்தும் மக்கள் பெருந் துன்பத்துக்கு ஆளாகிறார்கள். ஐயத்தை நீக்கிவிட்டு பக்தி செய்யுங்கள். சூன்யத்திலிருந்து இந்த அற்புத பிரபஞ்சம் தானாக உண்டாகவில்லை. மனிதனுடைய சேதனமும் சிந்தினையும் வெறும் சூன்யத்திலிருந்து தோன்றமுடியுமா? பரம் பொருளைப் பற்றி ஐயப்படவேண்டாம்.
நரகம், நரகம் என்று பயப்படாதீர்கள். ஆண்டவனைத் தியானித்து, செய்யத் தகாத பல காரியங்களைச் செய்துவிட்டேன். செய்யவேண்டியதைச் செய்யாமலும் விட்டேன். அப்பனே! என்னைக் காப்பாயாக! என்று வேண்டிக்கொள்ளுங்கள். பாபங்கள் அனைத்தும் ஓட்டமாக ஓடி மறையும் என்றார் பகவான் ராமகிருஷ்ண பரமஹம்ஸர்.