ஸ்வாமிகள் பக்தியின் பெருமையையும் பக்தன் எப்படி இருக்க வேண்டும் என்பதையும் கீழ்கண்ட ஸ்லோகங்களை தன்னிடம் வருபவர்களுக்கு எடுத்துச் சொல்லி அதன் அர்தத்தையும் விளக்கி சொல்லுவார்.
1. அபிராமி அந்தாதி - 69 வது பாட்டு
தனந்தரும் கல்விதரும் ஒருநாளும் தளர்வறியா மனம் தரும் தெய்வ வடிவுந்தரும் நெஞ்சில் வஞ்சமில்லா இனந்தரும் நல்லன எல்லாம் தரும் அன்பர் என்பவர்க்கே ’ மனம் தரும் பூங்குழலாள் அபிராமி கடைக்கண்களே!
95வது பாட்டு
நன்றே வருகினும் தீதே விளைகினும் நான் அறிவ(து) ஒன்றேயுமில்லை உனக்கேபரம் எனக்(கு) உள்ள எல்லாம் அன்றே உனதென்(று) அளித்துவிட்டேன் அழியாத குணக் குன்றே அருட்கடலே இமவான் பெற்ற கோமளமே!
2. ஸ்ரீகாளிதாஸன் செய்த ‘அம்பா நவமணிமாலை ஸ்தோத்ரத்தில் கடைசி ச்லோகம் (11வது)
பாதய வா பாதாளே ஸ்தாபய வா ஸகல புவன ஸாம்ராஜ்யே மாதஸ்தவ பதயுகளம் நாஹம் முஞ்சாமி நைவ முஞ்சாமி
கருத்து:
ஓ தாயான பராசக்தியே! தாங்கள் என்னை பாதாளத்தில் தள்ளினாலும் சரி அல்லது எல்லா உலகங்களுக்கும் சக்ரவர்த்தியாகச் செய்தாலும் சரி, தங்கள் இரண்டு பாதங்களையும் நான் விடமாட்டேன். விடவேமாட்டேன்.
3) வேதாந்த் தேசிகரின் ‘வைராக்ய பஞ்சகம் ’ - முதல் ச்லோகம்
இந்தப் பெரிய பூமண்டலத்தில் ஏதோ தெருக் கோடியில் ஒரு சிறு பூமியை ஆளும் கர்வம் மிக்க அரசனை புகழ்ந்து பெறும் செல்வம் ஒன்றுமில்லை. ஒரு பிடி அவலுக்கு சுதாமா என்கிற குசேலருக்கு குபேரனுக்கு சமமான செல்வத்தை அளித்த தயாநிதியான எம்பெருமானை ஸேவிக்க உறுதி கொண்டுள்ளேன்.
4. ஸ்ரீமத் பாகவதம் 8 வது ஸ்கந்தம் 24 வது அத்யாயம் - 49 ச்லோகம் மத்ஸ்யாவதாரத்தில் ‘ஸத்யவ்ரதர் ’ என்கிற ராஜா செய்யும் ஸ்தோத்ரம் மத்ஸ்யாவதார மூர்த்தியைப் பார்த்து)
உம்மைத் தவிர மற்ற தேவர்களும் குருமார்களும் சேர்ந்து உம்மால் செய்யப்படும் பிரசாதத்தின் பதினாயிரத்திலொரு பாகத்தைக்கூட செய்ய சக்தியற்றவர்களாகிறார்கள். ஆகையால் ஈசுவரனாகிய உம்மையேச் சரணமடைகிறேன்.
5 ஸ்ரீமத் பகவத் கீதை 9 வது அத்யாயம் 33 வது ஸ்லோகத்தின் 2வது வரி
‘அநித்யம் அஸுகம் லோகம் இமம் ப்ராப்ய பஜஸ்வ மாம் ’
கருத்து:
நித்யம் இல்லாததும் (எந்த நிமிஷமும் அழியக் கூடிய ஜன்மா) கஷ்டங்களே நிறைந்ததுமான இந்த லோகத்தை அடைந்திருக்கிற நீ என்னை பஜனம் செய் ’ என்று கிருஷ்ணன் அர்ஜுனனைப் பார்த்துச் சொல்லுகிறார்.
(இந்த மாதிரி எண்ணத்துடன் ஸ்வாமிகள் குருவாயூரப்பனிடம் பிரபத்தி செய்திருந்தார் (சரணாகதி) பகவான் எது செய்தாலும். நல்லது தான் என்ற முடிவுடன் இருந்தார்.)