இங்கு தியாகராஜர் பூஜித்த ஸ்படிக லிங்கம் உள்ளது சிறப்பு.
திறக்கும் நேரம்:
காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை திறந்திருக்கும்.
முகவரி:
தியாகராஜர் பிருந்தாவனம், திருவையாறு,
தஞ்சாவூர் மாவட்டம்.
போன்:
+91 94436 62578
பொது தகவல்:
இசையஞ்சலி: கோயிலுக்கு எதிரே வெளியில் இரண்டு கச்சேரி மேடைகள் உள்ளன. இங்கு வரும் இசைக்கலைஞர்கள் இந்த மேடையின் மீது, தியாகராஜர் கீர்த்தனைகள் பாடி இசையஞ்சலி செலுத்துகின்றனர். அருகில், இவ்விடத்தில் தியாகராஜருக்கு வழிபாடு ஏற்படுத்திக்கொடுத்த நாகரத்தினம்மாள் சிலை உள்ளது. பிரகாரத்தில் விநாயகர், தவக்கோலத்தில் யோக ஆஞ்சநேயர் உள்ளனர். கோயிலுக்கு வெளியே தியாகராஜர் தியானம் செய்த அரசமரம் உள்ளது. சித்திரை பூசம் நட்சத்திரத்தில் நடக்கும் தியாகராஜர் திருநட்சத்திர விழாவின்போது, மகாபிஷேகம் நடக்கும். சிவராத்திரிக்கு முதல் நாள் காலையில் இருந்து மறுநாள் காலை வரையில் இங்கு சன்னதி அடைப்பதில்லை. முழு நாளும் தியாகராஜர் சிவன் மீது பாடிய கீர்த்தனைகளை அகண்டகானம் (இடைவிடாது பாடுதல்) செய்வர்.
தலபெருமை:
சங்கீத வழிபாடு: காவிரியின் வடகரையில் அமைந்த பிருந்தாவனம் இது. தியாகராஜர் ஜீவசமாதியான இடத்தின் மேலே அவரது சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இவர் பத்மாசனத்தில் அமர்ந்து, வலது கையில் சின்முத்திரை காட்டி, இடக்கையில் கீர்த்தனை ஓலைச்சுவடி வைத்திருக்கிறார். மார்பில் ருத்ராட்ச மாலை அணிந்திருக்கிறார். இவருக்கு பின்புள்ள பீடத்தில் தியாகராஜர் பூஜித்த ஸ்படிக லிங்கம் உள்ளது. பிருந்தாவனத்தின் முன்புறம் இசை தெய்வங்களான நாரதர், தும்புரு உள்ளனர். சன்னதியைச் சுற்றிலும் இங்கு ஐக்கியமான தியாகராஜரின் 4 சீடர்கள் உள்ளனர். முன் மண்டபத்தில் லவ, குசனுக்கு உபதேசம் செய்யும் வால்மீகியின் சிலை வடிவம் உள்ளது. சங்கீதம் கற்க செல்வோர் தியாகராஜருக்கு தேன் அபிஷேகம் செய்து, அதை சாப்பிட்டுச் செல்கின்றனர். சங்கீதம் கற்றவர்கள் முதலில் இங்கு வந்து அரங்கேற்றம் செய்கின்றனர். தியாகராஜருக்கு தினமும் காவிரி தீர்த்தத்தால் அபிஷேகம் செய்து, மதியம் சுத்தான்னம், இரவில் பால், பழம் நைவேத்யம் செய்து பூஜிக்கின்றனர். தேய்பிறை பஞ்சமி நாட்களில் தியாகராஜருக்கு விசேஷ அபிஷேகத்துடன், உற்சவர் புறப்பாடு நடக்கும்.
பஞ்ச கீர்த்தனை விழா:இவரது ஆராதனை விழா 5 நாள் நடக்கும். விழாவின்போது தினமும் நள்ளிரவு வரையில் தியாகராஜர் கீர்த்தனைகளைப் பாடி கச்சேரி நடக்கும். பஞ்சமியன்று காலையில் தியாகராஜர் வாழ்ந்த வீட்டிற்கு, தியாகராஜர் சென்று வருவார். அப்போது, தியாகராஜரின் பிரபலமான சேதுலாரா கீர்த்தனை இசைக்கப்படும். பின், விசேஷ அபிஷேகம் செய்வர். அவ்வேளையில் அனைத்து இசைக்கலைஞர்களும் "பஞ்சரத்ன கீர்த்தனை' பாடுவர். இதுவே, இவ்விழாவின் முக்கிய நிகழ்வாகும். தியாகராஜர் இந்த கீர்த்தனைகள் பாடியபோது தான், ராமபிரான் அவருக்கு காட்சி கொடுத்தார்.
மூல ராமர்: முன் மண்டபத்தில் தியாகராஜருக்கு காட்சி தந்த மூலராமர், இருக்கிறார். இவருக்கு தினமும் விசேஷ திருமஞ்சனம் நடக்கும். ராம நவமி விழாவில் சீதையுடன் திருக்கல்யாணம் நடக்கும். தியாகராஜர் ஸ்ரீரங்கம் ரங்கநாதர், திருக்கோவிலூர், திருப்பதி, திருச்சி லால்குடி சப்தபுரீஸ்வரர், சுவாமி மலை முருகன் மற்றும் விநாயகர், ஆஞ்சநேயர் உட்பட பல சுவாமிகளைப் போற்றி, மொத்தம் 24 ஆயிரம் கீர்த்தனைகள் பாடியுள்ளார். இதில், 750 மட்டுமே கிடைக்கப்பெற்றுள்ளன. இங்கு எந்த விழா நடந்தாலும் விநாயகர் கீர்த்தனையும் துவங்கி, ஆஞ்சநேயர் கீர்த்தனையுடன் தான் முடிக்கின்றனர்.
தல வரலாறு:
திருவாரூரில் வசித்த சங்கீத வித்வான் ராமபிரும்மம், சாந்தா தேவியாரின் மூன்றாவது மகனாகப் பிறந்தவர் தியாகராஜர். இளமையிலேயே இசைப்புலமை பெற்ற தியாகராஜருக்கு எட்டாம் வயதில் தந்தை காயத்ரி, ராமதாரக மந்திர உபதேசம் செய்தார். தந்தையிடமிருந்த ராமர் சிலையை வாங்கி, தினமும் "ராம சடாட்சரி' மந்திரத்தை பாராயணம் செய்து வழிபட்டார். தாயார் அவருக்கு ராமதாசர், புரந்தரதாசரின் கீர்த்தனைகளைக் கற்றுக் கொடுத்தார். கல்லூரியில் ராமாயணம் படித்தவருக்கு, ராமர் மீது பக்தி கூடியது. தினமும் 1 லட்சத்து 25 ஆயிரம் முறை ராமநாமம் சொல்லி, 38ம் வயதிற்குள் 96 கோடி முறை பாராயணம் செய்து விட்டார். அவரது 38ம் வயதின் கடைசி நாளில், ராமனை மனமுருகிப் பாடியபோது, வீட்டின் கதவைத் தட்டும் சத்தம் கேட்டது. அவர் வெளியே வந்தபோது, விஸ்வாமித்திரரின் யாகத்திற்கு ராம, லட்சுமணர் செல்வது போல காட்சி கிடைக்கப்பெற்றார். பின், பலருக்கு சங்கீதம் கற்றுக் கொடுத்தார். இவர் காவிரிக்கரையில் ஐக்கியமான இவ்விடத்தில் பிருந்தாவனம் எழுப்பப்பட்டது.
சிறப்பம்சம்:
அதிசயத்தின் அடிப்படையில்:இங்கு தியாகராஜர் பூஜித்த ஸ்படிக லிங்கம் உள்ளது சிறப்பு.