அருள்மிகு எமதர்மராஜா திருக்கோயில்,
திருச்சிற்றம்பலம்-- 614 628.
பட்டுக்கோட்டை தாலுகா,
தஞ்சாவூர் மாவட்டம்.
போன்:
+91- 98943 24430
பொது தகவல்:
மன்மதன் உயிர்பிக்கப்பட்ட தலம் இத்தலத்திற்கு அருகில், "காமன்பொட்டல்' என்ற பெயரில் இருக்கிறது. இக்கோயில் வளாகத்தில் வீரனார், ராக்காச்சி, முத்துமணி, கருப்பண்ணசுவாமி, கொம்புக்காரன், வடுவச்சி என காவல் தெய்வங்களும் இருக்கின்றன.
பிரார்த்தனை
ஆயுள் நீடிக்க இவரிடம் வேண்டிக்கொள்கிறார்கள். எமதர்மர், நீதிக்கு அதிபதியாக இருப்பதால் ஏமாற்றப்பட்டவர்கள், பொருளை திருட்டு கொடுத்தவர்கள் அதிகளவில் இவரிடம் வேண்டிக்கொள்கிறார்கள். தங்களது கோரிக்கையை ஒரு பேப்பரில் எழுதி, அதனை எமதர்மன் சன்னதியில் வைத்து பூஜித்து, சூலத்தில் கட்டிவிடுகின்றனர். இவ்வாறு வேண்டுதல் வைக்கப்பட்ட சில நாட்களில் பொருட்கள் திருப்பிக் கிடைத்துவிடும் என்பது நம்பிக்கை. இதனை, "படி கட்டுதல்' என்கிறார்கள். சனிக்கிழமைகளில் எமகண்ட நேரத்தில் (மதியம் 1.30 - 3 மணி) இங்கு "ஆயுள்விருத்தி ஹோமம்' செய்யப்படுகிறது. சனியும், சூரியபகவானும் எமனின் புத்திரர்கள் ஆவர். எனவே, இவர்களிருவரும் சகோதரர்கள் ஆகின்றனர். எனவே, சனிக்கிழமை எமகண்ட நேரத்தில் இவரை வழிபடுவது சிறப்பு என்கிறார்கள்.
இக்கோயிலில் எமதர்மன் தனிக்கோயில் மூர்த்தியாக, முறுக்கிய மீசையுடன் எருமை மீது அமர்ந்த கோலத்தில் இருக்கிறார். நீல நிற வஸ்திரம் அணிந்தபடி காட்சி தரும் இவர் மேற்கு நோக்கியிருப்பது சிறப்பம்சம். கைகளில் பாசக்கயிறு, ஓலைச்சுவடி மற்றும் கதை வைத்திருக்கிறார். இவருக்கு கீழே சித்திரகுப்தனும், எமதூதரும் இருக்கின்றனர். இவருக்கு பச்சரிசி சாதம் மற்றும் கனிகள் நைவேத்யம் படைத்து பூஜைகள் செய்யப்படுகிறது.
அருகில் பாம்பாட்டி சித்தர், பூரணா, புஷ்கலாவுடன் அய்யனார் ஆகியோரும் இருக்கின்றனர். ஆடி மாதத்தில் நடக்கும் விழாவின்போது, பத்து நாளும் இவருக்கு ராஜஅலங்காரம் செய்யப்படுகிறது. அப்போது இவர் வேட்டைக்கு செல்வதாக ஐதீகம். இவரது உக்கிரத்தை குறைப்பதற்காக நேரே ராஜகணபதியும், அவருக்கு பின்புறத்தில் பால தண்டாயுதபாணியும் இருக்கின்றனர்.
எமன், தர்மத்தின் வடிவமாக இருப்பவர். சிறிதாக தவறு செய்தாலும், அவர்களை உடனே தண்டித்துவிடுவார். எனவே, இக்கோயில் வளாகத்தில் உள்ள தீர்த்தத்தில் பெண்கள் நீராடுவதில்லை. அறியாமல் தவறு செய்துவிட்டாலும், எமதர்மனின் கோபப்பார்வைக்கு ஆளாக வேண்டும் என்ற பயத்தில் நீராடுவதில்லை என்கிறார்கள்.
தல வரலாறு:
ஒருசமயம் தேவர்கள், சிவபெருமானை வேண்டச்சென்ற போது, அவர் நிஷ்டையில் இருந்தார். எனவே, மன்மதனை வரவழைத்து அவன் மூலமாக சிவன் தவத்தை கலைத்தனர். இதனால் கோபம் கொண்ட சிவன், மன்மதனை அழித்தார்.
பின் ரதிதேவியின் வேண்டுதலுக்காக இத்தலத்திற்கு அருகிலுள்ள ஓர் தலத்தில் உயிர்பித்தார். அப்போது எமதர்மன், சிவனிடம் தனக்கு அழிக்கும் பணி கொடுத்திருக்கும்போது, அதனை செய்ய தனக்கு உத்தரவிடும்படி வேண்டினார்.
சிவனும் அவருக்கு அருள்புரிந்தார். இதன் அடிப்படையில் பிற்காலத்தில் இவ்விடத்தில் எமதர்மனுக்கு கோயில் கட்டப்பட்டது.இவருக்கு அருள்செய்த சிவனுக்கு சற்று தூரத்தில் தனிக்கோயில் இருக்கிறது.