பங்குனி ரோகிணியில் வீரபத்திரருக்கு சிறப்பு பூஜை, சிவராத்திரி.
தல சிறப்பு:
மேற்கு நோக்கி அமைந்த இக்கோயிலின் அருகில் நவகன்னியருக்கு அருள் செய்த சிவன், காசி விஸ்வநாதராக அருளுகிறார். ஒட்டக்கூத்தரின் தக்க யாக பரணி எனும் நூல் அரங்கேறிய தலம்.
திறக்கும் நேரம்:
காலை 6.30 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.
கோஷ்டத்தில்தெட்சிணாமூர்த்தியும், பிரகாரத்தில் ராஜராஜேஸ்வரியும் இருக்கின்றனர். சிவராத்திரியன்று இரவில் ஐந்து கால பூஜை நடக்கிறது.
பிரார்த்தனை
பெண்கள் தங்களுக்கு பாதுகாப்பு வேண்டியும், குழந்தை பாக்கியம் கிடைக்கவும் வீரபத்திரர் சன்னதியில் அரிசி மாவு விளக்கு ஏற்றி வேண்டிக்கொள்கிறார்கள்.
நேர்த்திக்கடன்:
வீரபத்திரரிடம் வேண்டி பிரார்த்தனை நிறைவேறியவர்கள் விசேஷ அபிஷேகம் செய்து, வஸ்திரம், வெற்றிலை மாலை அணிவித்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.
தலபெருமை:
காக்கும் கடவுள்: ராஜகோபுரத்துடன் அமைந்த இக்கோயிலில், சுவாமி கோரைப்பற்களுடன் உள்ளார். கைகளில் வில், அம்பு, கத்தி, தண்டம் உள்ளன. அருகில் தட்சன் வணங்கியபடி இருக்கிறான். தலைக்கு மேல் ஜலதாரை (நீர் பாத்திரம்) இருக்கிறது. பத்திரகாளி தனிச்சன்னதியில் இருக்கிறாள். இத்தல வீரபத்திரருக்கு "கங்கை வீரன்", "கங்கை வீரேஸ்வரர்" என்ற பெயர்களும் உண்டு. நவநதிகளில் பிரதானமனாது கங்கை. கங்கையின் தலைமையில், இங்கு வந்து பாவம் போக்கிக்கொண்ட நதிகளுக்கு, காவலராக இருந்தவர் என்பதால் இப்பெயர். சுவாமி சன்னதி எதிரில் உள்ள நந்திக்கு பிரதோஷ பூஜை சிறப்பாக நடக்கிறது.
தக்கயாகப்பரணி அரங்கேற்றம்: சோழனின் அரசவையில் கவிச்சக்கரவர்த்தியாக இருந்தவர் ஒட்டக்கூத்தர். வீரபத்திரரின் பக்தரான இவர், கும்பகோணத்திலுள்ள ஒரு மடத்தில் சிலகாலம் தங்கி சேவை செய்து வந்தார். வீரபத்திரரைக் குறித்து, "தக்கயாகப்பரணி" என்னும் நூலையும் இயற்றினார். இந்நூலை வீரபத்திரர் சன்னதி முன்பு அரங்கேற்றம் செய்தார். ஒருவர் பெற்ற வெற்றியைக் குறித்து இயற்றப்படும் நூல் "பரணி" எனப்படும். தட்சனின் யாகம் அழித்து வீரபத்திரர் வெற்றி பெற்றதால் இந்நூல், "தக்கயாகப்பரணி" எனப்பட்டது. ஒட்டக்கூத்தர், சுவாமி சன்னதி முன் மண்டபத்தில் வணங்கியபடி காட்சி தருகிறார். ஆவணி உத்ராடத்தில் இவருக்கு குருபூஜை நடக்கிறது.
நவகன்னியரும் சிலை வடிவில் இருக்கின்றனர். மாசி மகத்தன்று கும்பேஸ்வரர், மகாமக குளக்கரைக்கு வரும்போது, வீரபத்திரர் கோயில் முன்பே எழுந்தருளுவார். அப்போது வீரபத்திரர் கோயில் அர்ச்சகர், கும்பேஸ்வரருக்கு பூஜை செய்வார். இப்பூஜையை வீரபத்திரரே செய்வதாக ஐதீகம். மூர்க்கநாயனார், இங்குள்ள மடத்தில் சிலகாலம் தங்கியிருந்து சேவை செய்தார். இவருக்கு இங்கு தனி சன்னதி உள்ளது. கார்த்திகை மூலம் நட்சத்திரத்தில், இவரது குருபூஜை நடக்கிறது.
தல வரலாறு:
கங்கா, யமுனா, நர்மதா, சரஸ்வதி, காவிரி, கோதாவரி, துங்கபத்ரா, கிருஷ்ணா, சரயு ஆகிய ஒன்பது நதிகளில், பக்தர்கள் மூழ்கிக் கழித்த பாவங்கள் அதிகமாக சேரவே, அவை வருத்தப்பட்டன. கயிலாயம் சென்று சிவபெருமானிடம் தங்களது பாவச்சுமையைக் குறைக்குமாறு முறையிட்டன. இதை ஏற்ற சிவன், மகாமகத்தன்று மகாமக தீர்த்தத்தில் நீராடி, பாவங்களைப் போக்கிக் கொள்ளுமாறு கூறினார். அதன்படி நவநதிகளும் இத்தலம் வந்தன. சிவன், அவர்களுக்கு காவலராக, வீரபத்திரரை அனுப்பி வைத்தார். அவரே குளக்கரையில் வீற்றிருக்கிறார்.
சிறப்பம்சம்:
அதிசயத்தின் அடிப்படையில்:மேற்கு நோக்கி அமைந்த இக்கோயிலின் அருகில் நவகன்னியருக்கு அருள் செய்த சிவன், காசி விஸ்வநாதராக அருளுகிறார். தக்கயாக பரணி அரங்கேற்ற தலம்.