பிரதோஷம், சிவராத்திரி, ஆடி வெள்ளி, ஆடி செவ்வாய், ஆடி அமாவாசை.
தல சிறப்பு:
காளியின் இடுப்புக்கு மேலுள்ள உருவத்தை மட்டுமே தரிசிக்க முடிவது சிறப்பு. இக்கோயில் சோழர்களால் கட்டப்பட்டது.
திறக்கும் நேரம்:
காலை 6 மணி முதல் 10 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
முகவரி:
அருள்மிகு சுந்தரேஸ்வரர் திருக்கோயில்
கொரநாட்டுக் கருப்பூர்,கும்பகோணம், தஞ்சாவூர் மாவட்டம்.
போன்:
+91 435-2443460
பொது தகவல்:
இங்கு விநாயகர், தட்சிணாமூர்த்தி, சப்த மாதர்கள், முருகப்பெருமான், லட்சுமி, துர்கை, பைரவர் மற்றும் நவக்கிரக சன்னதிகள் அமைந்துள்ளது.
பிரார்த்தனை
பக்தர்கள் தங்களது பிரார்த்தனைகள் அனைத்தும் நிறைவேற இங்குள்ள காளியம்மனை வழிபட்டுச் செல்கின்றனர்.
நேர்த்திக்கடன்:
வெள்ளிக்கிழமை ராகு காலங்களில் பெட்டிக்காளிக்குப் பள்ளய நைவேத்தியம் செய்த பின்னரே விசேஷ பூஜைகள் நடைபெறுகின்றன.
தலபெருமை:
ஞானோபதேசம் பெற விரும்பிய பிரம்மன், எமலிங்கத்தை நிறுவி ஈசனை வழிபட்டு உபதேசம் பெற்ற இடமே திருப்பாடலவனம் எனப்படும் கொரநாட்டுக் கருப்பூர். கண்வர் போன்ற மகரிஷிகளும், குபேரன் மற்றும் இந்திரன் ஆகிய தேவர்களும் வழிபட்ட தலம். எப்போதும் பெட்டகத்தினுள்ளேயே இருக்கிறாள் காளி. இடுப்புக்கு மேலுள்ள உருவத்தை மட்டுமே காண முடியும். எட்டுக் கரங்களுடன் சிறிய கோரைப் பற்களும், அனல் தெறிக்கும் விழிகளுடனும் அன்னை காட்சி தருகிறாள். எனினும், கருணையே வடிவானவள். வலக்கரங்களில் சூலம், உடுக்கை, கிளி மற்றும் அருவாளுடனும், இடக்கரங்களில் பாசம், மணி, கபாலம் மற்றும் கேடயமும் தாங்கி நிற்கிறாள். நெற்றியில் புனுகு சவ்வாதும் விபூதியும் சாற்றப்படுகிறது. மேலும் அம்மனுக்குச் சேர்ப்பிக்கப்படும் பூ, பழம், குங்குமம், எலுமிச்சம்பழம் ஆகியன பிறருக்கு வழங்கப்படுவதில்லை. சர்க்கரைப் பொங்கல், சுத்தான்னம் போன்றவை பள்ளயமாக நிவேதிக்கப்பட்ட பின்னரே பெட்டி திறக்கப்படுகிறது. ஆண்டுக்கு ஒருமுறை உத்தராயண காலத்தில் மட்டும் அன்னை மாகாளி வீதியுலா வருகிறாள். பெட்டியில் இருந்தபடியே பல்லக்கில் ஏறி திருமஞ்சன வீதியில் புறப்பாடு. அன்று உக்கிர மாகாளியின் ஆவேசம் வெளிப்படும். வீதியுலா புறப்படும் பல்லக்கு ஆடிக்கொண்டே எங்கும் நிற்காமல் ஒரே ஓட்டமாகச் சென்று திரும்பவும் சன்னதியை வந்தடைந்த பின்னரே நிற்கும். இறைவன் சுந்தரேஸ்வரர், இறைவி அன்னை அபிராமி. கிழக்கு நோக்கிய ஐந்து நிலை கொண்ட அழகிய ராஜகோபுரம். அன்னை அபிராமி தெற்கு நோக்கிய சன்னதியில், வலது மேற்கரத்தில் அட்சமாலையும், இடது மேற்கரத்தில் தாமரை மலரும் ஏந்தி அபய வரத முத்திரையுடன் கருணை பொங்கக் காட்சி தருகிறாள்.
தல வரலாறு:
ஒருசமயம் ஊர்மக்கள் அனைவரும் காவிரிக்கரையில் கூடியிருந்தனர். காவிரி வெள்ளத்தில் ஒரு பெட்டி அசைந்து வந்து கொண்டிருந்தது. அந்தப் பெட்டியை எடுத்துப் பார்க்கும் போது காளியின் மரச்சிலை அதில் இருந்தது. முழு உருவமாக அல்லாமல் மார்பளவு மட்டுமே உள்ள அந்த சிலையை என்ன செய்வதென்று அனைவரும் யோசித்துக் கொண்டிருக்கையில், திடீரென்று ஒரு சிறுமி ஞானம் வந்தது போல் அந்தக் காளியின் சிறப்புகளைப் பற்றி விவரிக்க ஆரம்பித்தாள். விக்கிரமாதித்த மன்னன் ஆராதித்து வந்த மாகாளிதான் இவள். அந்த மன்னனே இந்தச் சிலையை இரண்டாகப் பிரித்து ஒரு பகுதியை ஆற்றில் விட்டிருக்கிறான். பல ஆண்டுகள் எங்கெங்கெல்லாமோ ஆற்று வெள்ளச்சூழலில் சுற்றி, கடைசியில் இந்தக் காவிரிக்கரைக்கு வந்துள்ளது என்றாள்,மேலும் அந்தக் காளியை எப்படி பூஜிக்க வேண்டும் என்ற விவரங்களையும் தெரிவித்தாள். அதன்படி ஊரின் தெற்குப் பகுதியில் ஓர் ஓலைக்கொட்டகை அமைத்து, அந்தக் காளியை மரப்பெட்டியுடன் எழுந்தருளச் செய்து வழிபடத் தொடங்கினார்கள். வெள்ளிதோறும் அன்னப் பிரசாதங்களைப் பள்ளயம் போட்ட பின், பெட்டியைத் திறந்து அம்பிகையை ஆராதிக்கத் தொடங்கினர். ஒரு நாள் நள்ளிரவில், திடீரென ஓலைக்கொட்டகை தீப்பிடித்து எரிந்தது. ஊர்மக்கள் எப்படியோ போராடி காளி இருந்த பெட்டியைக் காப்பாற்றி விட்டனர். அப்போது பட்டத்திலிருந்த காஞ்சி காமகோடி பீடாதிபதியை அணுகினர். அம்பிகை சிலையை சிவன் கோயிலில்தான் வைத்து வழிபட வேண்டும். உங்கள் ஊரிலுள்ள சுந்தரேசுவரர் கோயிலில் மாகாளிக்குத் தனி இடம் உள்ளது. போய்ப் பாருங்கள். அங்கேயே பெட்டியோடு அவளை பிரதிஷ்டை செய்து, சுந்தர மாகாளி என்ற பெயரில் ஆராதியுங்கள். சுபிட்சம் உண்டாகும். பழைய பள்ளய பூஜை முறையை மாற்ற வேண்டாம் என பீடாதிபதி ஆசியருளினார். அன்று திருப்பாடலவனம் என அழைக்கப்பட்ட ஊர்தான், காளியின் ஊர் காளியூராகி, கருப்பூராகி, பாதி உருவக் காளியானதால் கொரநாட்டு கருப்பூர் என்று இன்று அழைக்கப்படுகிறது.
சிறப்பம்சம்:
அதிசயத்தின் அடிப்படையில்:காளியின் இடுப்புக்கு மேலுள்ள உருவத்தை மட்டுமே தரிசிக்க முடிவது சிறப்பு.
இருப்பிடம் : கொரநாட்டுக் கருப்பூர், கும்பகோணம்-சென்னை பாதையில் கும்பகோணத்தில் இருந்து சுமார் 3 கி.மீ. தொலைவில் உள்ளது. கும்பகோணத்தில் இருந்து திருப்பனந்தாள் செல்லும் அனைத்து நகரப் பேருந்துகளிலும் பயணிக்கலாம்.