ஐப்பசி அன்னாபிஷேகம், கார்த்திகை சோமவாரம், மாசி சிவராத்திரி, மார்கழி திருவாதிரை, மாத பிரதோஷம், மற்றும் மாதந்தோறும் சந்திர தரிசனம் இங்கு சிறப்பாக கொண்டாடப்படுகிறது
தல சிறப்பு:
சுயம்பு மூர்த்தியான இத்தல லிங்கம் வெள்ளை நிற தாமரைத்தண்டினால், சதுர வடிவ பீடத்தில் அமைந்துள்ளது. மாதம் தோறும் வரும் மூன்றாம்பிறை நாளில் இங்கு வந்து சிவனுக்கு அபிஷேகம் செய்து வேண்டிக்கொண்டால், வேண்டியது நிறைவேறும் என்பது நம்பிக்கை.இக்கோயில் சோழர்களால் கட்டப்பட்டது.
திறக்கும் நேரம்:
காலை 7 மணி முதல் 9 மணி வரை, மாலை மணி 5 முதல் இரவு 7 மணி வரை திறந்திருக்கும்.
முகவரி:
எஸ்.சுப்ரமணியன்,
திருப்பணிக்குழுத் தலைவர்,
அருள்மிகு சோமநாதர் திருக்கோயில்,
பெருமகளூர்-614 612,
பேராவூரணி தாலுகா,
தஞ்சாவூர் மாவட்டம்
போன்:
+ 91- 90479 58135
பொது தகவல்:
இக்கோயிலில் விநாயகர், முருகன், சண்டிகேஸ்வரர், நவக்கிரகம், பைரவர், சுப்பிரமணியன் ஆகியோருக்கு தனி சன்னதிகள் உள்ளன.சிதிலமடைந்துள்ள இக்கோயில் சுமார் ரு.1 கோடி செலவில் திருப்பணி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. திருப்பணிக்காக இந்து அறநிலைய ஆட்சித்துறை ரூ.20 லட்சம் ஒதுக்கீடு செய்துள்ளது. மக்கள் பங்காக 20 லட்சம் செலவிடப்பட்டுள்ளது. மீதி ரூ.60 லட்சத்திற்கு உபயதாரர்கள் வரவேற்கப்படுகின்றனர்
பிரார்த்தனை
இத்தலத்தில் பெண் குழந்தை இல்லாதோர் மற்றும் துன்பங்களை அனுபவிக்கும் பெண்கள் வேண்டிக்கொண்டு வழிபட்டால் குறைகள் நீங்கும் என கூறப்படுகிறது. திருமணத்தில் தடைஉள்ள பெண்கள் இங்கு வழிபாடு செய்தால் விரைவில் திருமணம் நடைபெறும். பெண்களுக்கு சுகப்பிரசவம் நடைபெறவும் சிறப்பு பிரார்த்தனை செய்யப்படுகிறது. இதனால் பெண் மருத்துவர்கள் பலர் இங்கு வழிபாடு செய்ய வருகிறார்கள்
நேர்த்திக்கடன்:
பக்தர்கள் தங்களது பிரார்த்தனை நிறைவேறியவுடன் சிவனுக்கும் அம்மனுக்கும் அபிஷேகம் செயது, புது வஸ்திரம் சாற்றி அர்ச்சனை செய்கிறார்கள்
தலபெருமை:
குந்தளாம்பிகை உடனுறை சோமநாதர், இவ்வூரின் நடுவில் கோயில் கொண்டு அருளுகிறார். தாமரை விளங்கும் குளிர்ந்த பொய்கை அருகே திகழ சோமநாத சுவாமியின் திருக்கோயில் சிறப்பாக விளங்குகிறது. கிழக்கு நோக்கிய திருவாயில், திருமதில் திருச்சுற்று, பரிவாராலயங்கள், இடப்பக்கத்தில் நந்தி மண்டபம், பலிபீடம் ஆகியவை அழகு செய்ய, சிதிலமடைந்த நிலையில் மூலவர் விமானம், அர்த்த மண்டபம், மகா மண்டபம், அம்மன் சன்னதி ஆகியவற்றுடன் திருக்கோயில் விளங்குகின்றது. மகாமண்டபத் தூண்களில் அழகிய கலை வேலைப்பாடும், புராணக்கதைகளை விளக்கும் சிற்பக்காட்சிகளும் விளங்குகின்றன. விநாயகப் பெருமான் அருள் காட்சி நல்க, குந்தளாம்பிகை அம்மன் நின்ற கோலத்தில் அருள்பாலிக்கின்றாள். சிவனது மூலஸ்தானத்தில் சதுர வடிவ பீடத்தில் சுயம்பு லிங்கமாக பாணம் விளங்க, சோமநாதரின் மூலவர் திருமேனி காட்சி தருகின்றது. சுயம்பு லிங்கம்: ஆவுடையார் என்னும் கருங்கல்லால் அமைந்த சதுர பீடத்தில், விடங்க மூர்த்தியாக சோமநாதர் பாண வடிவத்தில் காட்சி தருகிறார். பொதுவாக கல்லால் அமைக்கப்பெறும், லிங்கத்திருவுருவங்களின் பாணம், வட்ட வடிவில் தான் இருக்கும். பல்லவர் கால தாரா லிங்கங்கள் மட்டும் பட்டை பட்டையான வடிவில் பாணம் காணப்பெறும், சகஸ்ரலிங்கங்களில் ஆயிரம் சிறு லிங்க வடிவங்கள் ஒரே பாணத்தில் செதுக்கப்பட்டிருக்கும். ஆனால் இங்கு விடங்க வடிவமாகும். விடங்கம் என்பது, சிற்பியால், உளி கொண்டு செதுக்கப்படாத திருவடிவமாகும். திருவாரூர் கோயிலில் புற்றே லிங்கமாக மாறி விட்டதால், விடங்க மூர்த்தியாக காணப்படுகிறார். இவரை வன்மீகர் என்றும், புற்றிடங் கொண்டார் என்றும் அழைப்பார்கள். திருநல்லூரில் உலோகப் படிவுப்பாறையே லிங்க பாணமாக விளங்குகிறது.
திருவையாற்றில் பிருத்வி எனும் மண்ணே லிங்க பாணமாக, பாறையாக மாறி காட்சி தருகின்றது. சில இடங்களில் மட்டுமே, மிக அபூர்வமாக கல்லாக மாறிய மரத்தின் அல்லது செடிகளின் பகுதிகளே லிங்க பாணமாக விளங்குகின்றன. புதுக்கோட்டை மாவட்டம் மணமேல் குடிக்கு அருகில் உள்ள, மஞ்சக்குடி சிவாலயத்தில் லட்சக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு மரமாகத்திகழ்ந்த ஒரு பகுதி கல்லாக மாறி அதுவே அங்கு சிவலிங்க பாணமாக காட்சி தருகின்றது. தாமரைத்தண்டு லிங்கம்: இக்கோயில் அருகில் உள்ள லட்சுமி தீர்த்தமானது, சிவனது தலையிலிருந்து விழுந்த கங்கையிலிருந்து தோன்றியது ஆகும். இந்த லட்சுமி தீர்த்தத்திலிருந்து தோன்றிய தாமரைத் தண்டிலிருந்து உருவானது தான் இத்தல லிங்கமாகும். இவ்வுலக மக்களுக்காக, திரிபுவன சித்தரின் தவ வலிமையால் இங்கு சிவனும் அம்மனும் பிரதிஷ்டை செய்யப்பட்டு, கோயில் எழுப்பப்பட்டது. இந்த அருளாட்சி புரியும் சோமநாதரின் லிங்கம், கல்லால் அமையப் பெற வில்லை. தாமரைத்தண்டினால் ஆன சிவலிங்கம் இது. பாணலிங்கமே தாமரைத்தண்டினால் வடிக்கப்பெற்ற இத்தகைய அபூர்வமான சிவலிங்கத்தைப்போல், வேறு எங்கும் காண இயலாது. மிகவும் விசேஷமான தாமரைத்தண்டினால் இந்த சிவலிங்கத்தை தரிசித்தால் சகல சவுபாக்கியங்களும் கிடைக்கும் என்பது ஐதீகம்.
தல வரலாறு:
முன்னொரு காலத்தில் பெருமகளூர் கிராமத்தில் உள்ள பொது குளத்தில் சோழ மன்னனின் யானை ஒன்று செந்தாமரையை பறிக்க முயன்ற போது குளம் முழுவதும் செந்நிறமாக மாறியிருந்தது. இதை அறிந்த மன்னன் பதறி வந்து பார்த்த போது தண்ணீருக்கு அடியில் சிவலிங்கம் இருப்பதை அறிந்தான். தான் தவறு செய்து விட்டதாக சோழமன்னன் சிவலிங்கத்தை கட்டித் தழுவி தவறுக்கு மன்னிப்பு கேட்டுள்ளான். அவன் கட்டித்தழுவியபோது சிவலிங்கத்தின் மீது மன்னன் அணிந்து இருந்த முத்து, வைரம், வைடூரிய நகைகளின் தடயம் பதிந்தது. இதற்கு அடையாளமாக இன்றும் கூட சிவலிங்க பானத்தின் மீது அடையாளங்கள் உள்ளன. இதை அடுத்து சிவலிங்கம் இருந்த இடத்தை தூர்த்து இந்த சோமநாதர் கோயிலை சோழ மன்னன் கட்டியுள்ளான். இக்கோவிலை பாண்டியர்களும் திருப்பணி செய்துள்ளனர்.
மேலும் தசரத மகாராஜா குழந்தை வரம் வேண்டி, புத்திர காமேஷ்டி யாகம் தொடங்கும் முன், மாபெரும் சோம யாகம் நடத்த எண்ணி தக்க இடத்தை தேர்ந்தெடுக்கு மாறு குலகுருவான வசிஷ்டர் மகரிஷியை வேண்டியுள்ளார். சோம யாகத்திற்கு பெயர் பெற்ற தஞ்சை மாவட்டத்தில் உள்ள அம்பர் மாகாளம் என்னும் திருத்தலத்தில் அவ்வாண்டு வசிஷ்டர் குறித்த தேதியில் வேறு ஒரு சோம யாகத்தை நிகழ்த்த அவ்வூர் மக்கள் நிச்சயித்து இருந்தனர். அத்தேதியில் செய்யாவிடில் அதற்கு அடுத்த சரியான தேதி மூன்று ஆண்டு கழித்து வருவதால் தசரத மகாராஜா அம்பர் மாகாளத்திற்கு ஈடான திருத்தலத்தை பெற்றுத் தருமாறு வசிஷ்டரை வேண்டியுள்ளார். வசிஷ்டர் கைலாயம் சென்று அகத்தியரை நாடி விளக்கம் வேண்டினார். திரிபுவன சித்தர் தவ செய்த இடமான, பெருமகளூரே, பூலோகம், பூவர்லோகம், சுவர்லோகம் என்ற மூன்று லோகங்களும் சோம யாகம் செய்ய சிறந்த இடமாகும். அத்துடன் அம்பர் மாகாளத்திற்கு ஈடான சிவதலமாகும். மேலும் இங்குள்ள மூலவர், இந்த யுகத்திலிருந்து சோமநாதர் என்ற திருநாமத்தை தாங்கி அச்சிவலிங்க மூர்த்தியாக அருள்பாலிப்பார் என்று அகத்தியர் விளக்கம் தந்திட, தசரத மகாராஜா இப்பெருமகளூர் சிவாலயத்தில் பெரும் சோம யாகத்தை இயற்றினார். சேதுகரை செல்லுகையில் ராமன் இத்தலத்தை பூஜித்துள்ளார்.
சிறப்பம்சம்:
அதிசயத்தின் அடிப்படையில்:சுயம்பு மூர்த்தியான இத்தல லிங்கம் வெள்ளை நிற தாமரைத்தண்டினால், சதுர வடிவ பீடத்தில் அமைந்துள்ளது.