Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம் >> அருள்மிகு பசுபதீஸ்வரர் திருக்கோயில்
  • விபரம்
  • செல்லும் வழி
  • மேப்
  • படங்கள்
  • அருகில் உள்ள கோயில்
  English Version
அருள்மிகு பசுபதீஸ்வரர் திருக்கோயில்
 
[Image1]
 
 
 
மூலவர்: பசுபதீஸ்வரர், பசுபதிநாதர், பிரமபுரீஸ்வரர், ஆலந்துறைநாதர்
  உற்சவர்: சவுந்திரநாயகி
  அம்மன்/தாயார்: அல்லியங்கோதை, சௌந்தரநாயகி
  தல விருட்சம்: ஆலமரம்
  தீர்த்தம்: காவிரி, குடமுருட்டி, காமதேனு தீர்த்தம், சிவதீர்த்தங்கள், திருக்குளம்
  புராண பெயர்: திருப்புள்ளமங்கை
  ஊர்: பசுபதிகோயில்
  மாவட்டம்: தஞ்சாவூர்
  மாநிலம்: தமிழ்நாடு
 
பாடியவர்கள்:
     
 

திருஞானசம்பந்தர்
தேவாரபதிகம்




கறையார்மிடறு உடையான்கமழ் கொன்றைச்சடை முடிமேல் பொறையார்தரு கங்கைப்புனல் உடையான்புற மங்கைச் சிறையார்தரு களிவண்டறை பொழில்சூழ் திருஆலந் துறையானவன் நறையார்கழல் தொழுமின் துதிசெய்தே.




-திருஞானசம்பந்தர்
தேவார பாடல் பெற்ற காவிரி தென்கரை தலங்களில் இது 16வது தலம்.




 
     
 திருவிழா:
     
  மகா சிவராத்திரி, ஐப்பசி அன்னாபிஷேகம், மார்கழி திருவாதிரை  
     
 தல சிறப்பு:
     
  இங்கு சிவன் சுயம்புமூர்த்தியாக அருள்பாலிக்கிறார். அம்பிகை சக்கரவாகப் பறவையாக வந்து பூசித்த தலம். திருச்சக்கரப் பள்ளியின் சப்தஸ்தானத் தலங்களுள் இதுவும் ஒன்று. நவக்கிரகங்களுக்கு நடுவில் நந்தி உள்ளார். கோபுரத்தின் மேல் எப்பொழுதும் கழுகுகள் உறைகின்றன.இக்கோயில் சோழர்களால் கட்டப்பட்டது. சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 79 வது தேவாரத்தலம் ஆகும்.  
     
திறக்கும் நேரம்:
    
 காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும். 
   
முகவரி:
   
  அருள்மிகு பசுபதீஸ்வரர் திருக்கோயில், பசுபதிகோயில் அஞ்சல் - 614 206. தஞ்சாவூர் மாவட்டம்.  
   
போன்:
   
  +91 9791482102, 8056853485 
    
 பொது தகவல்:
     
 

கோஷ்ட மூர்த்தங்களாக ; விநாயகர், தெட்சிணாமூர்த்தி, நேர்பின் புறத்தில் திருமால் பிரமன் உருவங்களுடன் இலிங்கோற்பவர், பிரமன், துர்க்கை ஆகியோர் உள்ளனர். இவ்வூர்க்கு அருகில் உள்ள புள்ளமங்கையில் பிரம்மபுரீஸ்வரர் கோவிலும், தாழமங்கையில் சந்திரமௌலீஸ்வரர் கோவிலும் உள்ளது.


 
     
 
பிரார்த்தனை
    
  திருமணத்தடை நீங்கவும், கல்வி, கேள்விகளில் செல்வச்செழிப்புடன் விளங்கவும் இங்குள்ள இறைவனிடம் பிரார்த்தனை செய்கின்றனர். 
    
நேர்த்திக்கடன்:
    
  பிரார்த்தனை நிறைவேறியதும் இறைவனுக்கு அபிஷேகம் செய்தும் புது வஸ்திரம் சாற்றியும் நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். 
    
 தலபெருமை:
     
 

இங்குள்ள துர்க்கை - மகிஷாசுரமர்த்தினி (வடக்குப் பிரகாரத்தில் ) உருவம் தனிச் சிறப்புடையதாகத் திகழ்கின்றது. கருங்கல் குடை நிழலில், எருமைத் தலைமீது நின்று, சங்கு சக்கரம் மற்றும் வாள், வில், கதை, சூலம், கேடயம், அங்குசம் முதலிய ஆயுதங்களையும் ஏந்தி இருபுறமும் கலைமானும் சிங்கமும் இருக்க; இருவீரர்கள் கத்தியால் தலையை அரிந்து தருவதுபோலவும், தொடையைக் கிழித்து இரத்த பலி தருவது போலவும் காட்சிதருகிறார். தரிபங்கியாய் ஒரு கையில் வில்லேந்தி, மற்றது அபயகரமாக மோதிர விரல் மடக்கிய முத்திரையுடன் பின்புறம் அம்பறாத்தூணி விளங்க, துர்க்காம்பிகை விளங்கும் கோலம் - இக்கோலம் இக்கோயிலுக்கே தனிச் சிறப்பைத் தருவதாகும்.


திருநாகேச்சுரம், பட்டீச்சுரம், திருப்புள்ளமங்கை ஆகிய இம் மூன்று ஊர்களிலும் உள்ள துர்க்கைகள் ஒரே சிற்பியால் செய்யப்பட்டவை என்றும்; இம்மூன்றுமே மிகவும் சக்தி வாய்ந்தவை என்றும் சொல்லப்படுகிறது. சண்டேஸ்வரர், நவக்கிரக சன்னதிகள் உள்ளன. நவக்கிரகங்களுக்கு நடுவில் நந்தி உள்ளார். நால்வர் சன்னதி உள்ளது. கோபுரத்தின் மேல் எப்பொழுதும் கழுகுகள் உறைகின்றன.


ஆலகால நஞ்சினை இறைவன் அமுதாகச் செய்த இடம் எனக் கூறப்படுகிறது. கர்ப்பக்கிரகம் அகழி அமைப்புடையது. வடசுற்றில் துர்க்கை சிறப்பாக அமைந்துள்ளது.


காவிரியால் பேரழிவும் பராந்தக சோழன் திருப்பணியும்: காவிரியிலும், அதன் உப நதிகளிலும் அணைகள் உள்ள இக்காலத்திலேயே தஞ்சை டெல்டாவை வெள்ளம் அச்சுறுத்துகிறது. அவைகள் இல்லாத காலத்தில் காவிரி வெள்ளம் புயலால் சீறிப்பாய்ந்து இப்பகுதிகளில் பேரழிவை ஏற்படுத்தியுள்ளன. காவிரி வெள்ளத்திற்கு பலியாகி சுவடழிந்து போன கிராமங்கள் இப்பகுதியில் ஏராளம். இப்படி காவிரி வெள்ளத்திற்கு இப்பகுதி பலியான தகவல்களை இவ்வூருக்கு கிழக்கில் உள்ள திருச்சக்கரப்பள்ளியில் உள்ள சுந்தரசோழன் கல்வெட்டுக்கள் பதிவு செய்துள்ளன. இவ்வூருக்கு வடக்கிலுள்ள திருப்புள்ளமங்கை சிவாலயத்தைக் கட்டிய, முதற்பராந்தக சோழன் (ராஜராஜனின் கொள்ளுதாத்தா) பசுபதீச்சரத்தையும் திருப்பணி செய்துள்ளான்.


இதற்கு சான்றாக கோயில் கட்டுமானத்தில், சோழர்கால எழுத்தமைதியில் உள்ள கல்வெட்டுத் தூண்களும், தூண்கள், கால்கள், போதிகைகள் போன்ற ஆலய அங்கங்களும், சண்டிகேஸ்வரர், சாமுண்டாதேவி (இவ்வூருக்குக் கிழக்கிலுள்ள மேட்டில்) ஜேஷ்டாதேவி என்னும் மூத்ததேவி, நந்திகேஸ்வரர் போன்ற அரிய சிற்பங்களும் சோழர் கலைப்பாணியில் உள்ளன.


வடபுலத்து மன்னர்கள் படையெடுப்பு - அழிவும் திருப்பணியும்: 500 ஆண்டு களுக்கு முன் வடஇந்தியாவை ஆண்ட மாற்றுமத வேந்தர்கள் தென்னகம் நோக்கி படையெடுத்துவந்து காவிரிக்கரை கிராமத்துக் கலைக்கோயில்களை கொள்ளையடித்ததுடன், சிதைத்து சின்னாபின்னமாக்கிச் சென்றார்கள்.


இவ்வாலயங்கள் விஜயநகர வேந்தர் வீரசும்பண்ண உடையாரால் திருப்பணி செய்யப்பட்டு நிவந்திங்களும் வழங்கப்பட்டன. இம்மன்னரே ஆலயத்தைப் புதுப்பித்ததுடன் 65 அடி உயர ராஜகோபுரமும் 5 நிலைகளுடன் எடுத்தார். இதற்கு சான்றாக கோபுர நிலைக்காலில் ஒரு வரி தெலுங்கு கல்வெட்டு பொறிப்பும், நாயக்கர் கலை பாணியிலான சிற்பங்களும் உள்ளன.


ஆற்காடு நவாபின் படையெடுப்பு - அழிவு - திருப்பணி: சுமார் 300 ஆண்டுகளுக்கு முன் தஞ்சாவூர் ராஜ்ஜியத்தின் மன்னராக இருந்தவர் மராட்டிய மன்னன் பிரதாப சிம்மன். இவர் ஆற்காடு நவாபிற்கு கப்பம் செலுத்தி வந்தார். ஒருமுறை கப்பம் செலுத்தத் தாமதம் ஆனதால், இருமுறை தஞ்சையின் மீது படையெடுத்துவந்தார். இரண்டாவது முறை ஆற்காடு நவாபு அன்வாருதீன் பெரும்படையுடன் வந்து பசுபதிகோயில் கிராமத்தில் முகாமிட்டு தங்கினார்.


தஞ்சை மன்னனைக் கலவரப்படுத்த இப்பகுதியிலுள்ள கலைக்கருவூலங்களை பீரங்கி குண்டுகளுக்கு இரையாக்கினார். இச்செய்கையால் வெகுண்டு வந்த தஞ்சை தளபதி மானோஜியப்பாவின் தாக்குதலை சமாளிக்க முடியாமல், அன்வாருதீன் சிறைபிடிக்கப்பட்டது தனிக்கதை. இப்படி அடிமேல் அடியாக, இடிமேல் இடியாக விழுந்து அழிந்த கலைப்பொக்கிஷமான பசுபதீச்சரம் ஆலயம் அதே பிரதாப சிம்மன் காலத்தில் திருப்பணியால் சீரமைக்கப்பட்டது. இப்பொழுதுள்ள ஆலய கட்டுமானத்தில் சோழர், நாயக்கர், மராட்டியர் கலைப்பாணிகள் கலந்து இருப்பதே இதற்கு சான்று. இதுவே இவ்வாலயத்தில் நடைபெற்ற கடைசி  திருப்பணி எனலாம்.


பசுபதீச்சரம் நேற்று: மன்னர்கள் காலம் முடிந்துபோனதும், இக்கோயில் பராமரிப்பும் பாதுகாப்பும் இன்றி கொஞ்சம் கொஞ்சமாக பாழ்பட்டுப்போனது. அழகிய சிற்பங்கள் போன இடம் தெரியவில்லை. முதற்சுற்று பிரகாரத்தில் தரைமட்டமாகி ஆக்கிரமிப்புகளுக்கு இடமானது. கம்பீரமான ராஜகோபுரம் களையிழந்து நின்றது. அம்மனும் அம்மன் சன்னதியும் முழுவதுமாக அழிந்து கிடந்தது. கருவறையின் முன்னிருந்த வவ்வால் நெற்றி மண்டபம் இடிந்து போனது.


பசுபதி கோயில் இன்று: கள்ளர் பசுபதிகோயில் கிராமத்தின் ஈசான்ய மூலையில் ஆகம முறைப்படி சிவாலயம் அமைந்துள்ளது. கிழக்குள்ள 65 அடி உயர 5 நிலை ராஜகோபுரம் வண்ணத்தில் ஜொலிக்கிறது. ஆலயத்தினுள் நுழையும் பிரதான வாயிலும் இதுவே. கோபுர நுழைவு வாயிலின் இருபுறம் திண்ணைகள் கோபுரத்தில் ஏற படிகள் உள்ளன. கோபுர வாயிலின் நேர் மேற்கில் மாடக்கோயில் கட்டுமானத்திற்கு கீழாக அற்புதமான சோழர்கால நந்தி மண்டியிட்டு மண்டபத்தில் அமர்ந்திருக்கிறது. மாடக்கோயில் கட்டுமானத்தின் கீழ் பிரகாரத்தில் அங்கொன்றும் இங்கொன்றுமாக புடைப்பு சிற்பங்கள் காணப்படுகிறது.


 
     
  தல வரலாறு:
     
 

கி.பி.ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்த திருஞான சம்பந்தர் தேவாரப்பதிகம் பெற்ற திருச்சக்கரப்பள்ளியை முதலாவதாகக் கொண்ட சப்த ஸ்தான தலங்களுள் இது 5வது தலம். சக்கரமங்கை, அரியமங்கை, சூலமங்கை, நந்திமங்கை, பசுமங்கை (பசுபதி கோயில்), தாழமங்கை, புள்ளமங்கை ஆகிய ஏழும் சப்தமாதர்களும், சப்த ரிஷிகளும் வழிபட்ட சப்தஸ்தான தலங்கள் ஆகும். இவற்றுள் பசுபதீச்சரத்து இறைவனை சப்த கன்னியரேயன்றி, பாற்கடல் தந்த, கேட்டவரமருளும் காமதேனு பசு நாள்தோறும் சிவனை தன் மடி சுரந்த பாலினால் அபிஷேகம் செய்து வழிபட்ட தலம்.


இதை மெய்ப்பிக்கும் வகையில் பசு ஒன்று சிவலிங்கத் திருமேனி மீது பால் சொரிந்து நிற்கும் காட்சி புடைப்புச்சிற்பமாக உள்ளது. கோச்செங்கட்சோழன் என்ற மன்னன் முற்பிறவியில் சிலந்தி பூச்சியாக இருந்து சிவலிங்கத் திருமேனி மேல் வலை பின்னி சிவத்தொண்டு செய்துவந்தது.  சிவலிங்கத்தின் மீது இலை தழைகளும், பறவை எச்சமிடுவதையும் தடுக்க  சிலந்தி பின்னிய வலையின் நோக்கம் அறியாத யானை பக்தி மேலீட்டால் காவிரி நீரால் அபிஷேகம் செய்யும்போது சிலந்தி வலை அறுபட்டது. இதனால் வெகுண்ட சிலந்தி, யானையின் துதிக்கையில் புகுந்ததில் யானை கலவரமும் பீதியும் அடைந்து துதிக்கையை தரையில் அடித்து புரண்டதில் சிலந்தியும் யானையும் சிவபதம் அடைந்தன.


அச்சிலந்தி வேண்டிய வரத்தின்படி, மறுபிறப்பில் சோழநாட்டு மன்னனாகப் பிறந்தது. இவனே சங்ககால மன்னன் கோச்செங்கட்சோழன். பூர்வ ஜென்ம உள்ளுணர்வால் யானை ஏறமுடியாத கட்டுமலை போன்ற கோயில்களைக் கட்டினான். அவையே மாடக்கோயில்கள் எனப்படுகின்றன. இப்புராணக் கதையையும், கோச்செங்கட்சோழன் கட்டிய மாடக்கோயில் என்பதை உறுதிப்படுத்தவும், கோபுர நிலைக்காலிலும், சுவர்களிலும் சிலந்தியின் வழிபாடு, யானையின் வழிபாடு போன்ற புடைப்பு சிற்பங்கள் சிறிய அளவில் உள்ளன.


மாடக்கோயில்கள் காவிரிக்கரை கிராம மக்களை வெள்ளக்காலத்தில் பாதுகாக்க கட்டப்பட்டவை என அறிவியல் அடிப்படையிலும் கூறலாம்.


 
     
சிறப்பம்சம்:
     
  அதிசயத்தின் அடிப்படையில்: இங்கு சிவன் சுயம்புமூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.
 
     
     
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar