மூலவர் சங்கர நாராயணர் லிங்க வடிவில் காட்சி அளிக்கிறார். ஒரே கல்லில் வலப்பக்கம் ஜடை, கங்கை, சந்திரன், நெற்றிக் கண், திருநீறு, மகர குண்டலம், ருத்ராட்ச மாலை, மழு, அபய ஹஸ்தம், புலித்தோல் முதலியவற்றுடன் கூடிய சிவபெருமான் வடிவமும்; இடப்பக்கம் கிரீடம், திருநாமம், திருவாபரணங்கள், சங்க ஹஸ்தம்,பஞ்சகச்சம் ஆகியவற்றுடன் கூடிய திருமாலாகவும் காட்சியளிக்கிறார். இதற்கேற்ப இருபுறமும் பார்வதி, லட்சுமி உருவங்கள் காட்சி அளிக்கின்றன.இக்கோயில் சோழர்களால் கட்டப்பட்டது.
திறக்கும் நேரம்:
காலை 6 மணி முதல் 10 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
முகவரி:
அருள்மிகு பாலாம்பிகா சமேத சங்கர நாராயண சுவாமி திருக்கோயில், மேலராஜவீதி,
தஞ்சாவூர்.
பொது தகவல்:
ஒரு பிராகாரத்தைக் கொண்ட இக்கோயிலின் திருச்சுற்றில் விநாயகர், வள்ளி - தெய்வானையுடன் சுப்ரமணியர், பார்வதி-லட்சுமி தேவியுடன் சங்கர நாராயணர், அனுமன், விசுவநாதர் விசாலாட்சி ஆகியோருக்கு தனிச்சன்னதிகள் உள்ளன. சங்கர நாராயணர் சன்னதி சுவரில் ராமர், சீதை, லட்சுமணன் ஆகியோரின் சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. விசாலாட்சி சன்னதியில் ஒரு மூதாட்டி அமர்ந்து சிவலிங்கத்தை மலரால் அர்ச்சிப்பது போன்ற சிலை காணப்படுகிறது. அது அவ்வையார் என்றும் காரைக்காலம்மையார் என்றும் இரு வேறு கருத்துகள் நிலவுகின்றன. இந்த திருக்கோயிலைப் பற்றிய செய்திகள் பிரகதீஸ்வர மகாத்மியம், தஞ்சபுரி மகாத்மியம் ஆகிய நூல்களில் காணப்படுகின்றன.
பிரார்த்தனை
காய்ச்சல் கண்டவர்கள் குணமடைய இங்குள்ள ஜுரதேவரைப் பிரார்த்தித்துக் கொண்டால் விரைவில் குணமடைவர் என்பது பக்தர்களின் நம்பிக்கை. கோணலிங்கத்தை வழிபட்டால் செலவு வரவுக்குள் அடங்கியிருக்கும் என்பது நம்பிக்கை.
நேர்த்திக்கடன்:
ஜுரம் நீங்கியபின் மிளகு ரசம் வைத்து சாதத்தில் கலந்து, அந்த ரசம் சாதத்தை ஜுரதேவருக்கு நிவேதனம் செய்து, பின் பக்தர்களுக்கு விநியோகம் செய்து பிரார்த்தனையை நிறைவேற்றிக் கொள்வார்கள்.
தலபெருமை:
மகேஸ்வர வடிவங்களில் ஒன்று சங்கர நாராயணர் வடிவம். இது வலப்புறம் சிவமாகவும் இடப்புறம் திருமாலாகவும் தோன்றும் அருள் வடிவம். இக்கோயிலில் எழுந்தருளியிருக்கும் சங்கர நாராயணர் சைவ - வைணவ ஒற்றுமையை நிலை நாட்டும் மூர்த்தியாக விளங்குகிறார். ஒரே கல்லில் வலப்பக்கம் ஜடை, கங்கை, சந்திரன், நெற்றிக் கண், திருநீறு, மகர குண்டலம், ருத்ராட்ச மாலை, மழு, அபய ஹஸ்தம், புலித்தோல் முதலியவற்றுடன் கூடிய சிவபெருமான் வடிவமும்; இடப்பக்கம் கிரீடம், திருநாமம், திருவாபரணங்கள், சங்க ஹஸ்தம்,பஞ்சகச்சம் ஆகியவற்றுடன் கூடிய திருமாலாகவும் காட்சியளிக்கிறார். இதற்கேற்ப இருபுறமும் பார்வதி, லட்சுமி உருவங்கள் காட்சி அளிக்கின்றன. நவகிரகங்களுக்கு தனிச் சன்னதி உள்ளது. அதே சன்னதியில் நவகிரகங்களைத் தவிர, சூரியன், சனீஸ்வரன், காலபைரவர் ஆகியோரும் காட்சி தருகின்றனர். இரண்டரை ஆண்டுகளுக்கு ஒரு முறை வரும் சனிப்பெயர்ச்சி விழாவின் போது, சனி பகவான் சர்வாலங்காரங்களுடன் நான்கு ராஜவீதிகளிலும் உலாவருவது இக்கோயிலின் தனிச் சிறப்பாகும். சிவ கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தியும், லிங்கோத்பவரும் உள்ளனர். சண்டிகேசுவரர் சன்னதியும் உள்ளது. சனீஸ்வரனுக்கு எதிர்புறச் சுவரில் ஜுரகேசுவரர் லிங்க வடிவில் காட்சி அளிக்கிறார். குப்த கங்கை தீர்த்தக் கிணறுக்கு அருகில் கோணலிங்கம் எனப்படும் இரண்டு லிங்கங்கள் காட்சி அளிக்கின்றன. இந்த லிங்கங்களில் ஒன்று வரவையும், மற்றொன்று செலவையும் குறிப்பதாகக் கூறப்படுகிறது. இவற்றுக்கு பவுர்ணமி அன்று சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன. கோணலிங்கத்தை வழிபட்டால் செலவு வரவுக்குள் அடங்கியிருக்கும் என்பது நம்பிக்கை.
தல வரலாறு:
தஞ்சையை பீம சோழன் என்னும் மன்னன் ஆண்டு வந்தான். அவன் மனைவி பத்ராட்சி. மன்னன் இறைப்பணியில் மிகுந்த ஈடுபாடு கொண்டு பல அறச் செயல்களைப் புரிந்து வந்தான். தன் பெயராலேயே பீமேஸ்வரர் ஆலயம் கட்டினான். சிறந்த பக்திமானாகத் திகழ்ந்த மன்னனுக்கு புத்திர பாக்கியம் கிட்டவில்லை. இதனால் மனம் வருந்திய மன்னனும் அரசியும் புத்திரப் பேறு வேண்டி இறைவனிடம் பிரார்த்தனை செய்தனர். ஒருநாள் பீம சோழன் மனைவியின் கனவில் சிவபெருமான் தோன்றி, தஞ்சையில் உள்ள பிரகதீஸ்வரருக்கும் கொங்கணேஸ்வரருக்கும் இடையில் சங்கர நாராயணர் என்ற பெயரில் எனக்கும் விஷ்ணுவுக்கும் சேர்த்து ஒரு கோயில் கட்ட வேண்டும். நான் அந்த இடத்தில் லிங்க ரூபமாக இருக்கிறேன். இக்கோயில் கட்டும் பணியைச் செய்தால் உங்களுக்குப் புத்திரப் பேறு கிட்டும் எனக் கூறி மறைந்தார். கனவில் கண்டதைக் கணவனிடம் தெரிவித்தாள் பத்ராட்சி. வியப்படைந்த மன்னன் மந்திரிப் பிரதானிகளை அழைத்துக் கொண்டு இறைவன் குறிப்பிட்ட இடத்திற்குச் சென்ற போது, பிரகதீஸ்வரர் கோயிலுக்கும் கொங்கணேஸ்வரர் ஆலயத்திற்கும் இடைப்பட்ட ஒரு பகுதியில் சிவலிங்கம் இருப்பதைக் கண்டான். இறைவன் கூறியபடியே அந்த இடத்தில் கோயில் கட்ட முடிவு செய்தான். அப்போது அசரீரியாக சிவபெருமான், அருகே உள்ள கிணற்றில் பாவங்களைப் போக்க வல்ல குப்த கங்கை பொங்கி வருவதாகவும்; விசாக நட்சத்திரத்துடன் கூடிய திங்கட் கிழமையில் அதில் நீராடி, பக்தி சிரத்தையுடன் வணங்கி வந்தால் மன்னனுக்குப் புத்திரப் பேறு கிட்டும் எனவும் கூறினார். சிவபெருமான் வாக்கின்படி சோழ மன்னன் சங்கர நாராயணருக்கு கோயில் கட்டி வழிபட்டு வந்தான். இறைவன் அருளால் ஒரு ஆண்மகவு பிறந்தது என்கிறது தல வரலாறு.
சிறப்பம்சம்:
அதிசயத்தின் அடிப்படையில்:மூலவர் சங்கர நாராயணர் லிங்க வடிவில் காட்சி அளிக்கிறார். ஒரே கல்லில் வலப்பக்கம் ஜடை, கங்கை, சந்திரன், நெற்றிக் கண், திருநீறு, மகர குண்டலம், ருத்ராட்ச மாலை, மழு, அபய ஹஸ்தம், புலித்தோல் முதலியவற்றுடன் கூடிய சிவபெருமான் வடிவமும்; இடப்பக்கம் கிரீடம், திருநாமம், திருவாபரணங்கள், சங்க ஹஸ்தம்,பஞ்சகச்சம் ஆகியவற்றுடன் கூடிய திருமாலாகவும் காட்சியளிக்கிறார். இதற்கேற்ப இருபுறமும் பார்வதி, லட்சுமி உருவங்கள் காட்சி அளிக்கின்றன.