மகம் நட்சத்திர கோயில்: மாசி மகத்திற்காக கும்பகோணம் மகாமக குளத்தில் நீராடுவதால் என்ன பலன் கிடைக்குமோ, அதே பலன் இத்தலத்தின் குளத்தில் நீராடினாலும் கிடைக்கும் என்கிறது புராணம். பாண்டவர்களின் தாய் குந்திதேவி, பஞ்சபூதங்களினால் குழந்தை பெற்றாள் என்பதால் அவளுக்கு தோஷம் ஏற்படுகிறது. இந்த தோஷம் நீங்க குந்தி தேவி நாரதரிடம் யோசனை கேட்கிறாள். ஏழு கடல்களில் நீராடினால் தோஷம் நீங்கும் என நாரதர் கூறினார். நான் பெண், என்னால் எப்படி ஏழு கடல்களில் சென்று நீராட முடியும். எனவே வேறு ஏதாவது வழி கூற வேண்டும், என்கிறாள் குந்தி. அப்படியானால் கும்பகோணம் அருகிலுள்ள நல்லூர் சென்று கல்யாண சுந்தரேஸ்வரரை வழிபடு. அதற்குள் நான் வழி சொல்கிறேன் என்கிறார் நாரதர். குந்தி வழிபாடு செய்து வருவதற்குள் நல்லூர் தலத்திலுள்ள குளத்தில் ஏழு கடல்களின் நீரையும் நாரதர் சேர்த்து விடுகிறார்.
மகம் நட்சத்திரத்தில் பிறந்த குந்தி, தன் தோஷம் நீங்க நல்லூர் குளத்தில் நீராடுகிறாள். மகம் நட்சத்திரத்திற்குரிய கோயில் நல்லூர் என்றும், இக்குளத்தில் நீராடினால் கும்பகோணம் மகாமக குளத்தில் நீராடிய பலன் கிடைக்கும் என்று புராணங்கள் கூறுகின்றன.
சிறப்பம்சம்: இங்குள்ள கல்யாண சுந்தரேஸ்வரர் தினமும் ஐந்து தடவை நிறம் மாறுகிறார். தாமிர நிறம், இளம் சிவப்பு, தங்க நிறம், நவரத்தின பச்சை, இன்ன நிறமென கூறமுடியாத தோற்றம். இப்படி ஐந்து வண்ணத்தில் காட்சி தருவதால், இவர் பஞ்சவர்ணேஸ்வரர் என அழைக்கப்படுகிறார். இத்தலத்தில் தான் சிவபெருமான் நாவுக்கரசருக்கு பாத தரிசனம் தந்தார். அன்று முதல் இங்கு பெருமாள் கோயிலைப்போல சடாரி வைக்கும் வழக்கம் ஏற்பட்டது.
அஷ்டபுஜ மாகாளி: எட்டு கைகளுடன் கூடிய காளி இங்கு அருள்புரிகிறாள்.
சோமாஸ்கந்த மூர்த்தி: இக்கோயிலில் உள்ள சோமாஸ்கந்த மூர்த்தி திருவாரூர் தியாகராஜருக்கு ஈடாக உள்ளது. மாசி மகத்தின் போது இவர் கோயிலுக்குள் உலா வருவார். மாடக்கோயிலின் படிகள் வழியாக இவர் இறங்கும் போது அடியார்கள் வெண்சாமரமும், விசிறியும் வீசுவார்கள். ஆனாலும் கூட பெருமாளின் முகத்தில் வியர்வை துளிகள் அரும்புவதைக் காணலாம்.
தல விருட்சம்: இக்கோயிலில் உள்ள வில்வ மரத்தை ஆதிமரம் என்கின்றனர். முதன் முதலாக தோன்றிய வில்வமரம் இது தான் என கூறப்படுகிறது. இந்த வில்வ இலைகளால் இறைவனை அர்ச்சனை செய்ய நமக்கு கொடுத்து வைத்திருக்க வேண்டும்.
கணநாதர்: இத்தலத்தின் மேற்கு கோபுர வாயிலில் மேல்புறம், பலிபீட வடிவில் கணநாதர் வீற்றிருக்கிறார். இந்த வடிவத்துடன் இத்தலத்திலும், காசியிலும் மட்டுமே கணநாதர் வழிபடப்படுகிறார். ஆண்டுக்கொருமுறை இரவில் நடக்கும் கணநாதர் பூஜை சிறப்பானது. அன்றைய தினம் இந்த ஊரிலும், பக்கத்து ஊரிலும் உள்ள மக்கள் தங்கள் பசு, ஒரு வேளை கறக்கும் பாலை அப்படியே கொடுத்து இப்பூஜையில் கலந்து கொள்கின்றனர். இந்த பூஜையை பக்தர்கள் பார்க்க முடியாது. இத்தலத்தில் தான் அமர்நீதி நாயனாரை சிவபெருமான் ஆட்கொண்டார்.
|