இறந்தார் என்பும் எருக்கும் சூடிப் புறங்காட் டாடும் புனிதன் கோயில் சிறந்தார் சுற்றம் திருஎன்று இன்ன துறந்தார் சேரும் சோற்றுத் துறையே.
-சுந்தரர்
தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத்தலங்களில் இது 13வது தலம்.
திருவிழா:
சப்தஸ்தான விழா, சித்திரை விசாகம், ஏழூர் திருவிழா.
தல சிறப்பு:
இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 76 வது தேவாரத்தலம் ஆகும்.
திறக்கும் நேரம்:
காலை 7 முதல் 12 மணி, மாலை 4.30 முதல் இரவு 8.30 மணி. (இரண்டு கால பூஜை)
முகவரி:
அருள்மிகு சோற்றுத்துறை நாதர் திருக்கோயில்,
திருச்சோற்றுத்துறை போஸ்ட் - 613 202
கண்டியூர் வழி, திருவையாறு வட்டம், தஞ்சாவூர் மாவட்டம்.
போன்:
+91- 9943884377
பொது தகவல்:
உள்ளே நுழைந்ததும் பெரிய பிரகாரம். அதன் தென்கிழக்குப் பகுதியில் தனிக் கோயிலாக அம்பாள் சன்னதி கிழக்குப் பார்த்துள்ளது. மூலஸ்தானத்தில் நின்ற கோலத்தில் ஒப்பிலாம்பிகை . இவருக்கு அன்னபூரணி என்ற பெயரும் உண்டு. அள்ள அள்ளக் குறையாமல் வழங்கிய சிவனுக்குதொலையாச் செல்வர் என்றும், அவருக்குள் பாதியாகி அருள்புரியும் அம்மைக்கு அன்னபூரணி என்றும் திருநாமங்கள். அம்மையை உளமார உருகி வழிபட்டால், வறுமையும்பிணியும் விலகி விடும். ராஜ கோபுர வாயிலில் ஒரு புறம் விநாயகர், மறுபுறம் முருகன். அடுத்துள்ள பெரிய மண்டபத்தின் வலப் பக்கம், நடராஜ சபை.
இந்த மண்டபப் பகுதியிலிருந்து நேரே மூலவர் சன்னதிக்குள் நுழைந்து விடலாம். தெற்குப் பிரகாரத்துக்குள் கிழக்குப் பார்த்த மாதிரி ஒரு தனிச் சந்நிதி. உள்ளே ஆறுமுகர். அதற்கு தெற்காக கிழக்குப் பார்த்தபடி மகாவிஷ்ணு. அடுத்து, கௌதமர் வழிபட்ட காட்சியை விளக்கும் சிற்பம். அதிகார நந்தியை வணங்கிவிட்டு உள்ளே நுழைந்தால், மகாமண்டபமும், அர்த்த மண்டபமும் தாண்டி, உள்ளே நோக்கினால் அருள்மிகு சோற்றுத்துறைநாதர் எனும் தொலையாச் செல்வர்.
பிரார்த்தனை
திருமணத்தடை உள்ளவர்கள் சித்திரையில் நடைபெறும் நந்தியின் திருமணதிருவிழாவை கண்டால் விரைவில் திருமணம் நடைபெறும் என்பது ஐதீகம்.
நேர்த்திக்கடன்:
சுவாமி, அம்பாளுக்கு வஸ்திரம் அணிவித்தும், கோயில் திருப்பணிக்கு பொருளுதவி செய்தும் நேர்த்திக்கடன் நிறைவேற்றலாம்.
தலபெருமை:
இத்தல இறைவனை வழிபடும் அடியார்களின் பசிப்பணி தீர இறைவன் சோறு வழங்குபவன் என்னும் பொருளைத் தருவதுடன், உயிரைப்பற்றிய பிறவிப்பபிணி தீர வீடுபேறு தருபவன் என்ற பொருளும் உண்டு. இது காசிக்கு அடுத்தபடியாக அட்சய பாத்திரம் கொடுத்த தலமாகும். அருளாளருக்காக அட்சய பாத்திரம் அருளிய சிவபெருமான் எழுந்தருளி இருக்கும் இத்தலமே ஏழூர் தலங்களில் ஒன்றான திருச்சோற்றுத்துறை. திருவையாற்றில் தொடங்கி, திருப்பழனம், திருச்சோற்றுத்துறை என்ற சப்தஸ்தானத் தலங்களில் இது மூன்றாவது அடியவர்களது பசிப்பிணியைப் போக்க உணவு வழங்கிய இறைவன் எழுந்தருளிய தலம் என்பதால் இந்த ஊருக்கு திருச்சோற்றுத்துறை எனும் பெயர் ஏற்பட்டது.
இத்தலத்ததை ராமலிங்க வள்ளலாரும், அருணகிரிநாதரும் போற்றியுள்ளனர். பிரம்மா, விஷ்ணு, இந்திரன், கவுதம முனிவர், சூரியன்ஆகியோர் வழிபட்டுள்ளனர். இத்தல இறைவனை வழிபட்டு இந்திரன் பதவி பெற்றான், கவுதமர் முக்தி பெற்றார். நந்தி பகவானுக்கும் வியாக்ரபாதரின் மகளான சுயம் பிரகாசைக்கும் பங்குனி மாதம் புனர்பூசத் திருநாளன்று மழபாடியில் திருமணம் நடைபெறும். சித்திரை மாதம் திருவையாறு பெருமானான ஐயாறப்பருக்கு பிரம்மோற்சவம். அதன்நிறைவு நாளில் நந்திதேவரையும், சுயாம்பிகையையும் வெட்டிவேர் பல்லக்கில் ஏற்றுவர். ஐயாறப்பரும் அறம் வளர்த்த நாயகியும் கண்ணாடி பல்லக்கில் ஏற்றிக் கொள்வர். காலை ஆறு மணிக்குத் திருவையாறில் புறப்படும் இந்த கோஷ்டி, முதலில் திருப்பழனத்துக்குச் செல்லும். அங்கு ஆபத்சகாயரும் பெரியநாயகியும் இவர்களை எதிர்கொண்டழைத்து உபசாரம் செய்வர். பின்னர், அவர்களும் சேர்ந்து கொள்ள, அடுத்த இடம் திருச்சோற்றுத்துறை. அதன் எல்லையிலேயே அவர்களை எதிர்கொண்டு அழைக்கும் சோற்றுத்துறைநாதரும் அன்னபூரணி அம்மையும் ஊருக்குள் அழைத்து போவார்கள்.
திருச்சோற்றுத்துறையில் வருடங்களுக்கு எல்லாம் அன்னம் பாலிக்கப்படும். பின்னர் இந்த ஊர்வலம் திருவேதிக்குடி நோக்கித் தொடரும்.
தல வரலாறு:
ஒரு முறை நாட்டில் பஞ்சம் ஏற்பட்ட போது அருளாளன் என்ற சிவபக்தன் பசியால் வாடினான். ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என அனைவரும் பசியால் துடித்தனர். வருந்திய அருளாளன் இத்தல இறைவனிடம், ""என்னகொடுமை இது இறைவா இப்படியா மக்களை பசியில் தவிக்க விடுவாய் . இது நியாயமா,' என சண்டை போட்டான்.பசியின் கொடுமையால் கோயில்அர்ச்சகர் ஒரு மாதம் முன்பே வருவதை நிறுத்திவிட்டார். மாலையில் வந்து விளக்கு மட்டும் வைத்த ஊழியன், இரண்டு நாட்களுக்கு முன்னால் கீழே விழுந்துவிட்டான். விளக்கு கூட இல்லாமல் இருட்டில் கிடந்த சிவமூர்த்தத்தைப் பார்த்துக்கொண்டிருந்த அருளாளர், திடீரென்று வாயில்படியில் மோதி அழத் தொடங்கினார். திடீரென்று மழை பொழிய ஊரே வெள்ளக் காடானது. அப்போது ஒரு பாத்திரம் வெள்ளத்தில் மிதந்து வந்தது. இதைப்பார்த்த அருளாளர் அதை கையில் எடுத்தார். ""அருளாளா! இது அள்ள அள்ள குறையாத அட்சய பாத்திரம். இதை வைத்து அனைவருக்கும் சோறு போடு'என்று அசரீரி கேட்டது. இந்த பாத்திரத்தை கையில் வைத்தபடி ஊராருக்கு சோறும் நெய்யும் குழம்புமாக போட்டு அவர்களின் பசி தீர்த்தார். கடவுள் கண்ணத் திறந்துட்டார்! என்று ஊர் மகிழ்ந்தது.
சிறப்பம்சம்:
அதிசயத்தின் அடிப்படையில்:இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.