|
மங்கலம் தரும் அம்பிகை: இக்கோயிலுக்கென கோபுரம் கிடையாது. இங்குள்ள அம்பிகை கன்னிப் பெண்களுக்கு நல்ல வாழ்க்கையையும், திருமணமான பெண்களுக்கு சுமங்கலி பாக்கியத்தையும் தருபவளாக இருக்கிறாள். எனவே, இவளுக்கு மங்களாம்பிகை என்று பெயர் சூட்டியுள்ளனர். புதுமணத் தம்பதியர் தங்கள் வாழ்க்கை குறையின்றி இருக்க, இந்த அம்பிகைக்கு புடவை, மஞ்சள் கயிறு அணிவித்தும், மஞ்சள் கிழங்கு, மஞ்சள் பொடிகளை சன்னதியில் வைத்தும் வழிபடுகின்றனர். இதனால், அவர்களது வாழ்வு மங்களகரமாக இருக்கும் என்பது நம்பிக்கை.
ஆனந்த கருடாழ்வார்: கைகளில் சங்கு, சக்கரம் ஏந்தி, வலக்கையில் அபய முத்திரை காட்டி, இடது கையை தொடையில் வைத்தபடி பிரகாரத்தில் வரதராஜர் இருக்கிறார். இவருக்கு எதிரே நிற்கும் கருடாழ்வார், இடது புறமாக சாய்ந்து வணங்கியபடி இருக்கிறார். இதை, பெருமாளின் வாகனமாக இருக்கும் நிலையை எண்ணி, கருடாழ்வார் ஆனந்தமாக இருக்கும் நிலை என்கிறார்கள். வாழ்வில் எப்போதும் மகிழ்ச்சி குடி கொண்டிருக்க விரும்புவோர், பெருமாளையும், இந்த கருடாழ்வாரையும் வணங்குகின்றனர்.
பறக்கும் முருகன்: அம்பாள் சன்னதி முகப்பில், கைலாயத்தில் சிவன் விநாயகருக்கு மாங்கனி தந்த வரலாற்றை சிற்பமாக வடித்துள்ளனர். இதில், மாங்கனி தராததால் கோபம் கொண்ட முருகன், மயில் மீது பறந்து செல்லும்படியாக அவரது சிலை தத்ரூபமாக அமைக்கப்பட்டுள்ளது. அம்பிகை அவரை சமாதானப்படுத்தும் விதமாக, கைகளை உயர்த்தி அழைக்கும் நிலையில் இருக்கிறாள். அருகில் நாரதர் இருக்கிறார்.
கிரக பரிகாரம்: இங்குள்ள நவக்கிரக சன்னதி விசேஷமானது. எண்கோண வடிவ பீடத்தின் மீது, அனைத்து கிரகங்களும் தங்களின் வாகனத்தில், மனைவியுடன் தம்பதியராக அமர்ந்துள்ளனர். இதை, கிரகங்களின் அனுக்கிரக கோலம் என்கின்றனர். நடுவிலுள்ள சூரியன் ஏழு குதிரை பூட்டிய தேரில் காட்சியளிக்கிறார். குரு, சனி, ராகு கேது பெயர்ச்சியால் பரிகாரம் செய்ய வேண்டியவர்கள் தோஷ நிவர்த்திக்காக இந்த சன்னதியில் வேண்டிக் கொள்கிறார்கள். ஜாதகத்தில் கிரக தோஷம் உள்ளவர்கள், அந்தந்த கிரகத்திற்குரிய நாள் அல்லது கிரகத்திற்குரிய ஓரை நேரத்தில், வஸ்திரம் அணிவித்து, தானியம் படைத்து வேண்டிக்கொள்கிறார்கள். இதனால், தோஷ நிவர்த்தியாவதாக நம்பிக்கை.
|
|