ராம நவமி, அனுமன் ஜெயந்தி, மார்கழி மாத வழிபாடு, நவராத்திரி.
தல சிறப்பு:
ஞானசம்பந்தருக்காக அமைந்த ஆனி மாத முத்துப் பந்தல் உத்ஸசம் பட்டீஸ்வரம் தேனுபுரீஸ்வரர் ஆலயத்தில் விமரிசையாக நடைபெறுகிறது. அப்போது இந்த கோதண்டராம சுவாமி ஆலயத்துக்கு வரும் திருஞானசம்பந்தருக்கு, கோதண்டராமருக்கு சாத்திய பட்டு வஸ்திரத்தை அணிவிப்பார்கள். இந்த மரியாதை நிகழ்வு இன்றும் நடைபெற்று வருகிறது.
திறக்கும் நேரம்:
காலை 6 மணி முதல் 10 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
முகவரி:
அருள்மிகு கோதண்டராம சுவாமி திருக்கோயில்
பட்டீஸ்வரம்-612 703, கும்பகோணம் வட்டம், தஞ்சாவூர் மாவட்டம்.
போன்:
+91 435-241 6976
பொது தகவல்:
மூன்று நிலை ராஜகோபுரத்தைத் தாண்டியதும் பிரமாண்டமான முன்மண்டபம், கருடாழ்வார், கொடிமரம், மடப்பள்ளி, கோயில் அலுவலகம் உள்ளன. இங்குள்ள மகாமண்டபம் வவ்வாத்தி மண்டபம் அமைப்பில் கட்டப்பட்டுள்ளது. ஜய-விஜய துவாரபாலர்களைத் தாண்டி கருவறையில் மூலவர் கோதண்டராமர் சீதாதேவி, லட்சுமணர், ஆஞ்சநேயர் சகிதம் கிழக்கு பார்த்த நிலையில் அருள்பாலிக்கிறார். மேலும் ராமானுஜர் மற்றும் மணவாளா மாமுனிகள் சன்னதி உள்ளது.
பிரார்த்தனை
பட்டு நெசவுத் தொழிலில் ஈடுபடுபவர்கள் இங்குள்ள கோதண்டராமரை வழிபடுகின்றனர்.
நேர்த்திக்கடன்:
இங்குள்ள கோதண்டராமருக்கு அபிஷேகம் செய்து நெய் தீபமேற்றி நேர்த்திகடன் செலுத்துகின்றனர்.
தலபெருமை:
ராமபிரானை வந்து வணங்கிய மகரிஷிகளுள் சாலியர் என்பவரும் ஒருவர். பட்டுத் தொழில் எனப்படும் நெசவுத் தொழில் செய்து வந்த குலத்தைச் சார்ந்தமையால் இவர் பட்டுச் சாலிய மகரிஷி என அழைக்கப்பட்டார். பட்டு நெசவுத் தொழில் செய்து வருபவர்களுக்கு ஒரு தோஷம் எப்போதுமே இருந்து வந்தது. அதாவது எண்ணற்ற பட்டுப் புழுக்களைக் கொன்று, இந்தத் தொழில் செய்து வருகிறோமே என்கிற தோஷம் தான். தொழில் நிமித்தமாக நெசவாளர்களுக்கு இருக்கும் இந்த தோஷத்தைப் போக்க எண்ணினார் சாலிய மகரிஷி. தமது மூவகையான தோஷங்களையும் போக்கிக் கொண்ட ராமபிரானை பட்டீஸ்வரம் திருத்தலத்தில் தரிசித்தார் சாலிய மகரிஷி. இவரின் பக்தியில் நெகிழ்ந்த ராமன், மகரிஷியே ... வேண்டும் வரம் யாதோ? என்று கேட்டார். அதற்கு மகரிஷி பிரபோ... செய்யும் தொழில் எல்லாம் நெய்யும் தொழிலுக்கு நிகர் இல்லை. எம் குலத்தைச் சேர்ந்தவர்கள் தொழில் நிமித்தம் பட்டுப் புழுக்களைக் கொன்று பணி செய்கின்றார்கள். இதைக் கொல்லாமல் இந்த உற்பத்தித் தொழிலைச் செய்ய முடியாது. எனவே, பட்டுப் புழுக்களைக் கொல்வதால் எம் குலப் பெருமக்களுக்கு ஏற்படும் தோஷத்தைத் தாங்கள் போக்கி அருள வேண்டும். தவிர, எம் குல மக்கள் அடிக்கடி வந்து உன்னை வணங்குவதற்கு வசதியாகத் தாங்கள் இங்கேயே கோயில் கொள்ள வேண்டும் என்று பணிவுடன் கேட்டுக் கொண்டார். சாலிய மகரிஷியின் இந்த வேண்டுகோளை ஏற்றுக் கொண்ட ராமன் இங்கேயே அருளி நெசவாளர்களின் தோஷத்தைப் போக்கினார்.
தல வரலாறு:
ராமாயணம் எல்லோருக்கும் தெரியும். மகாவிஷ்ணுவின் அவதாரம்தான் ராமபிரான். க்ஷத்திரிய குலத்தில் அவதரித்து, ஒரு மானிடன் சராசரியாக அனுபவிக்க வேண்டிய இன்னல்கள் அனைத்தையும் அனுபவித்து மிகச் சாதாரணமான எளிய வாழ்க்கை வாழ்ந்தவர் ராமபிரான். இறை அவதாரமான அவர் நினைத்திருந்தால் எப்போதோ ராவணனை சம்ஹாரம் செய்து, சீதாதேவியை மீட்டிருக்க முடியும். என்றாலும், சராசரி மனிதனுக்கு உண்டான உணர்ச்சி நிலையிலேயே இவர் வாழ்ந்து வந்தார். இதனால் தான் ராவண சம்ஹாரமும் சிறிது காலம் எடுத்துக் கொண்டது. தன் தேவியான சீதாவைக் கவர்ந்து கொண்டு சென்ற காரணத்தால் ராவணனை அழிக்க பெரும்படையுடன் இலங்கை புறப்படுகிறார் ராமபிரான். சமாதானம் சரிவர அமையாததால், யுத்தம் நிகழ்கிறது. போரின் முடிவில் மாபெரும் பிராமணனான - வீரனான சர்வ கலைகளிலும் சிறந்து விளங்கியவனுமான ராவணன், ராமபிரானால் கொல்லப்படுகிறான். சிவபக்தனான ராவணனைக் கொன்றதால், தோஷங்கள் ராமபிரானைப் பற்றிக் கொள்கின்றன. இந்த அவதாரத்தில் ராமன், ஒரு மனிதன். அதனால் அவருக்கும் தோஷங்கள் பற்றிக் கொள்கிறது. சிறந்த பிராமணனான ராவணனைக் கொன்றதால் பிரம்மஹத்தி தோஷமும், போர்முனையில் எதிரிகளை வீழ்த்தும் வீரனான ராவணனைக் கொன்றதால் வீரஹத்தி தோஷமும், எண்ணற்ற கலைகளில் சிறந்து விளங்கியவன் ஆதலால் சாயஹத்தி தோஷமும் பற்றிக் கொள்கிறது. ஆக மூன்று தோஷங்கள் ராமனைப் பற்றிக் கொள்கிறது. முதல் தோஷமான பிரம்மஹத்தி தோஷம் தன்னை விட்டு அகல, ராமேஸ்வரத்தில் ஒரு லிங்கம் ஸ்தாபித்து பூஜைகள் நடத்தினார். அங்கு ஒரு தீர்த்தம் உருவாக்கி லிங்கத் திருமேனியை அபிஷேகித்து வந்ததால் பிரம்மஹத்தி தோஷம் அகன்றது. இரண்டாவதான வீரஹத்தி தோஷம் நீங்க வேதாரண்யம் சென்றார். வேதங்கள் வழிபட்ட வேதாரண்யம் சமுத்திரத்தில் ஸ்நானம் செய்தார். ஒரு லிங்கம் ஸ்தாபித்து அனுதினமும் வழிபட்டு வீரஹத்தி தோஷத்தைப் போக்கினார். மூன்றாவது தோஷமான சாயஹத்தி தோஷம் அகல்வதற்கு ராமபிரான் வந்த திருத்தலம் தான் இந்த பட்டீஸ்வரம். அரசலாற்றின் தென்கரையில் அமைந்துள்ள சூரிய சோம கமல புஷ்கரணி கரையில் அமர்ந்து தியானம் செய்தார். ஒரு லிங்கம் ஸ்தாபித்து வழிபட்டார். தன் அம்பு முனையால் நிலத்தைக் கீறி ஒரு தீர்த்தம் உருவாக்கினார். அதில் இருந்து தீர்த்தம் எடுத்து லிங்கத் திருமேனிக்கு அபிஷேகம் செய்து வழிபட அவருக்கு இருந்த சாயஹத்தி தோஷமும் நீங்கியது. தேவர்களும், முனிவர்களும் ராமபிரான் மேல் மலர்களைப் பொழிந்து வணங்கினர். சர்வதோஷங்களும் ராமபிரானை விட்டு அகன்றன. ரிஷிகள் தங்களது பத்தினிகளுடன் வந்து ராமனைப் போற்றித் துதிக்கின்றனர்.
சிறப்பம்சம்:
அதிசயத்தின் அடிப்படையில்:ஞானசம்பந்தருக்காக அமைந்த ஆனி மாத முத்துப் பந்தல் உத்ஸசம் பட்டீஸ்வரம் தேனுபுரீஸ்வரர் ஆலயத்தில் விமரிசையாக நடைபெறுகிறது. அப்போது இந்த கோதண்டராம சுவாமி ஆலயத்துக்கு வரும் திருஞானசம்பந்தருக்கு, கோதண்டராமருக்கு சாத்திய பட்டு வஸ்திரத்தை அணிவிப்பார்கள். இந்த மரியாதை நிகழ்வு இன்றும் நடைபெற்று வருகிறது.