தாராசுரம் திருக்கோயிலில் அர்த்தநாரீஸ்வரர், அகத்தியர், சரபமூர்த்தி, நரசிங்கமூர்த்தி, தட்சிணாமூர்த்தி, அன்னபூரணி, விஷ்ணு துர்க்கை என்று எண்ணரிய சிற்பங்களை இறையருள் மிளிரக் கண்டு ஆனந்திக்கலாம். சண்டிகேசுவரர், கண்ணகி, நர்த்தன விநாயகர் சிலைகளும் மிக நுணுக்கமான வேலைப்பாட்டோடு காணப்படுகின்றன. ஒரு பக்கம் நின்று பார்த்தால் காளையின் உருவமும், இன்னொரு பக்கம் நின்று பார்த்தால் யானையின் உருவமும் புலப்படுகின்ற ரிஷபக் குஞ்சரம் சிற்பம் ஆடவல்லானின் மண்டபத்தில் உள்ளது. அம்பாள் வேதநாயகிக்கு தனி சன்னதி. இக்கோயிலுக்கு வடபுறத்தில் சிறிது தொலைவில் அமைந்திருக்கிறது.
பிரார்த்தனை
சாபம் விமோசனம் கிடைத்து, சகல ஐஸ்வர்யங்களும் செழிக்க இங்கு பிரார்த்தனை செய்கிறார்கள்.
நேர்த்திக்கடன்:
சுவாமிக்கும் அம்பாளுக்கும் அபிஷேகம் செய்து புது வஸ்திரம் சார்த்தி தங்கள் நேர்த்திக்கடனை செலுத்துகிறார்கள்.
தலபெருமை:
இங்குள்ள கோயிலை இரண்டாம் இராசராசன் எடுப்பித்த காரணத்தால் இராசராசேச்சுரம் என்றும் தாரன் என்பவன் வழிபட்டதால் தாராசுரம் என்றும் ஐராவதம் என்னும் வெள்ளை யானை வழிபட்டு பேறு பெற்ற ஸ்தலமாதலால் இத்தலம் ஐராவதேச்சுரம் என்றும் பெயர் பெற்று விளங்குகிறது. இந்திய சிற்பக் கலைக்கு ஓர் அற்புதமான எடுத்துக்காட்டாகத் தாராசுரம் திகழ்கிறது எனலாம். கோயிலின் கட்டுமானமும், கம்பீரமும் இன்னமும் இரண்டாம் இராசராச சோழச் சக்கரவர்த்தியின் ராஜகளையை அப்படியே பிரதிபலித்துக் கொண்டிருப்பதை காண முடிகிறது. முதலில் காணப்படும் நந்தி மண்டபம் நம்மைப் பிரமிப்பில் ஆழ்த்துகிறது. நந்திக்கும் பலிபீடத்திற்குமாகச் சேர்ந்து அமைந்திருக்கும் படிக்கட்டுகள் வேலைப்பாடுகளுடன் விளங்குகின்றன. தட்டினால் இன்னொலி எழும் விதத்தில் இசைக் கற்களாகத் திகழ்வது பேராச்சரியம்!
தாராசுரம் கோயிலின் உள்ளே நாம் நுழைந்ததும் முன்னால் தெரிவது ராச கம்பீரன் திருமண்டபம்! இம்மண்டபம் ஐராவதேசுவரர் கோயிலுக்குள் சென்று வலம் வரும்போது எதிர்ப்படும் சிற்பங்கள் செறிந்த வரலாற்றுப் பொக்கிஷமாகும்! இம்மண்டபத் தூண்களில் காணப்படும் அதிஉன்னதமான, கலை நயமிக்க சிற்பங்களை நாள் முழுவதும் பார்த்துக் கொண்டே இருக்கலாம். இம்மண்டபம் குதிரைகள் பூட்டிய சக்கரமுள்ள தேர் போன்ற அமைப்பைக் கொண்டதாகும். இம்மண்டபத்தில் பதினாறு கல் தூண்கள் இருக்கின்றன. எல்லாமும் நுணுக்கமான வேலைப்பாடுகளுடன் மிக அழகாகத் திகழ்கின்றன. அங்குலம் அங்குலமாக அத்தூண்களில்தான் எத்தனை எத்தனை சிற்பங்கள். எல்லாம் நமது சிந்தனையைத்தூண்டி மெய்சிலிர்க்க வைக்கின்றன. ஒரு தூணில் ஓராயிரம் நுணுக்கமான சிற்பங்கள் காணப்படுகின்றன. நர்த்தன விநாயகரை இரண்டே செ.மீட்டர் அளவில் வெகு நேர்த்தியாகவும், கலை நயத்தோடும் சிற்பி செதுக்கயிருப்பதை என்னவென்று பாராட்டுவது? இராமாயண, மஹாபாரத நிகழ்ச்சிகளையும், சிவன்-பார்வதி இருக்கும் கயிலாயக் காட்சிகளையும், முருகன் வள்ளி, தெய்வானையோடு காட்சி தரும் அழகையும், முனிவர்களின் தவமிருக்கும் காட்சிகளையும் பிரம்மா-விஷ்ணு-சிவன் பற்றிய அரிய சிற்பங்களையும் வெகு நேர்த்தியாக இம்மண்டபத் தூண்களில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கைதேர்ந்த சிற்பிகளைக் கொண்டு மன்னன் செதுக்கி வைத்திருக்கும் அழகையும் நேர்த்தியையும் புகழ்ந்து பாராட்ட வார்த்தை ஏது? தாராசுரம் கோயிலில் எந்த ஒரு பாகத்திலும் சிறு இடம் கூட விட்டு வைக்கவில்லை. சிற்பச் செறிவான வேலைப்பாடுகள் கண்ணையும் கருத்தையும் ஈர்க்கின்றன. செதுக்கு வேலை ஒவ்வொன்றும் வார்த்தெடுத்த பொன்போன்று மிக நேர்த்தியாகக் காணப்படுகின்றது. தஞ்சை, கங்கைகொண்ட சோழபுரம்-திருபுவனம் ஆகிய கோயில்களின் விமானத்தின் சாயலை அப்படியே பின்பற்றி தாராசுரம் ஐராவதேசுவரர் எழுந்தருளியிருக்கும் கருவறை விமானம் நிற்கின்றது. தஞ்சை மற்றும் கங்கை கொண்ட சோழபுரத்துக் கோயில்களின் கருவறை விமானங்களை விட உருவில் தாராசுரக் கோயில் விமானம் சிறியதுதான் என்றாலும் நேர்த்தியாக அவற்றை மிஞ்சும்படி வெகு அழகாகவே காணப்படுகிறது. கருவறையில் ஐராவதேசுவரர் சிவலிங்க உருவில் அழகுற வெகு நேர்த்தியாகக் காட்சியளிக்கின்றார்.
தல வரலாறு:
புராண ரீதியாக இந்திரனது பட்டத்து யானையாகிய ஐராவதம், தலைக்கனம் ஏறி துர்வாச முனிவரிடம் அலட்சியாக நடந்து கொண்டது, துர்வாச மாமுனிவரோ கோபத்துக்கும், சாபத்துக்கும் பெயர் பெற்றவர் அவர் ஐராவதத்தின் அகங்காரத்தை அறிந்து, சாபம் கொடுத்து விட்டார். சாபம் பெற்ற ஐராவதம் தனது பெருமையை இழந்து, நிறம் இழந்து காட்டானையாக அலைய வேண்டி வந்தது. இந்த சந்தர்ப்பத்தில் தாராசுரம் எம்பெருமானை அன்போடு வழிபட்டு இறைவன் அருளாலும், கருணையினாலும் பழைய உருவை எய்தி, தனது அகங்காரத்தை விட்டொழித்தது. இவ்வாறு ஐராவதம் பேறு பெறுவதற்கு உதவிய இறைவன், ஐராவதேசுவரர் என்றே போற்றப்படலானார் என்கிறது புராணம். இன்னொரு புராண வரலாறும் உண்டு. ஒரு சமயம் யமன், முனிவர்களின் கோபத்துக்கு ஆளாகி சாபத்தையும் ஏற்க வேண்டி வந்தது. அச்சாபம் அவனின் உடலைத் தகிக்க, அந்த வெப்பத்தைத் தாள மாட்டாதவனாய் எங்கெங்கெல்லாமோ அலைந்து சென்று பார்த்தும் பலனில்லாமல் போகவே இறுதியாக தாராசுரம் வந்தான். ஐராவதேஸ்வரர் திரிசூலத்தால் உண்டாக்கியிருந்த தீர்த்தத்தின் சிறப்பை உணர்ந்தான். உடன் அதில் இறங்கி நீராடினான். வெப்பமாகிய வேதனையிலிருந்து மீண்டான் என்பதும் ஒரு புராண வரலாறு.
சிறப்பம்சம்:
அதிசயத்தின் அடிப்படையில்:சிற்பங்கள் நிறைந்த கோயில், இக்கோயில் சோழர்களால் கட்டப்பட்டது.