அமுத குடம் உடைந்தபோது சிதறிய தீர்த்தம் இத்தலத்தின் முன்பு குளம்போல பெருகியது. இக்குளத்திற்கு சந்திரபுஷ்கரணி என பெயர். காலப்போக்கில் இக்குளம் அழிந்துவிட்டது.
முருகப்பெருமான் மயில்மீது அமர்ந்து ஒற்றைக்காலில் பாதரட்சையுடன் காட்சி தருவதை கும்பகோணம் சோமேஸ்வரர் கோயிலில் காணலாம்.
ஒரே பிரகாரத்தைக் கொண்ட இக்கோயிலில் சந்திரனும், வியாழனும் பூஜித்துள்ளனர். எனவே திங்கள் மற்றும் வியாழக்கிழமைகளில் இத்தலத்தை வழிபடுவது சிறந்தது.
இக்கோயிலுக்கு மூன்றுவாசல்கள் உள்ளன. ராஜகோபுரம் வழியாக உள்ளே நுழைந்தால் மாலீசர் மற்றும் மங்களநாயகி அம்பிகையை தரிசிக்கலாம்.
திருமால் வழிபட்ட ஈஸ்வரர் என்பதால் சிவனுக்கு மாலீசர் என்ற பெயர் ஏற்பட்டது. கட்டைகோபுரத்தை கடந்துவந்தால் சோமநாதர் மற்றும் தேனார்மொழி அம்பிகையை தரிசிக்கலாம்.
வடக்கு வாசல் வழியாக வந்தால் சோமேஸ்வரரையும், சோமசுந்தரியையும் தரிசிக்கலாம். ஆக எத்திசையில் இருந்து வந்தாலும் இறைவனின் அருள் கிடைக்கும் தலம் இது.
உள் மண்டபத்தில் சோமாஸ்கந்தர் அருள்பாலிக்கிறார். கருவறை சுவர்களில் எட்டுபேர் வணங்கிய நிலையிலான சிற்பங்கள் உள்ளன.
காணா நட்டம் உடையார்
இத்தலத்தில் நடராஜ பெருமான் தனி சன்னதியில் சிவகாமி அம்பாளுடன் காட்சி தருகிறார். இவருக்கு "காணா நட்டம் உடையார்' என பெயர் சூட்டப்பட்டுள்ளது. இவரைப் பார்க்காமல் சென்றால், சென்றவருக்குத்தான் நஷ்டமே ஒழிய, இறைவனுக்கு ஏதும் இல்லை என்ற பொருளில் இப்பெயர் சூட்டப்பட்டுள்ளது. இவரை வணங்கினால் வியாபார விருத்தி, தொழில் விருத்தி, உத்தியோகத்தில் மேன்மை ஏற்படும் என்பது நம்பிக்கை.
|