கல்வி அபிவிருத்தியை தரும் தீர்த்த ஸ்தலம் . மார்க்கண்டேயர் வழிபட்ட தலம். ஆமணக்கு கொட்டைச்செடியின்கீழ் லிங்கம் வெளிப்பட்டதால் ஊர் கொட்டையூர் என்று பெயர் பெற்றது. பத்திரியோகி முனிவருக்கு இறைவன் கோடிவிநாயகராக, கோடி அம்மையாக, கோடி முருகனாக, கோடி தம் திருவுருவாக காட்சி தந்ததால் இறைவன் கோடீஸ்வரர் எனப்பட்டார்.
மூலவர் மீது பாணம் முழுவதிலும் கொட்டை கொட்டையாக - காய்ந்தமாதிரி காணப்படுகிறது. இங்கே அம்பாள் பந்தாடுநாயகி என அழைக்கப்படுகிறாள். அம்பாள் சிலையின் ஒரு கால் பந்தை உதைப்பது போன்ற தோற்றத்தில் உள்ளது. செய்த பாவங்களை தன் காலால் எட்டி உதைத்து அருள்செய்பவள் என்ற பொருளில் இவ்வாறு சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது.
விளையாட்டில் ஆர்வம் கொண்டவர்கள் பதக்கங்கள் பெறுவதற்காக இந்த அம்மனை வழிபட்டு செல்கின்றனர். இங்குள்ள அமுதக்கிணறு தீர்த்தத்தை தலையில் தெளித்துக் கொண்டால் புறத்தூய்மை மட்டுமின்றி அகத்தூய்மையும் கிடைப்பதாக நம்பிக்கை. கல்வி, அறிவு, ஒழுக்கம் ஆகியவற்றை இந்த தீர்த்தம் தருவதாக நம்பிக்கை.
* "கொட்டையூரில் கால் வைத்தால் கட்டை' என்பது பழமொழி. இத்தலத்தில் பாவம் செய்தவர்கள் கால் வைத்தால் அந்தப்பாவம் கோடி அளவு பெருகிவிடும். புண்ணியம் செய்தவர்கள் கால் வைத்தால் அதே போல கோடி அளவு கூடிவிடும். எனவே பாவம் செய்தவர்கள் இத்தலத்திற்கு ஒரு காலத்தில் வராமலே இருந்தார்கள். அவர்களுக்கு பந்தாடு நாயகி ஆறுதல் கூறி பாவங்களை உதைத்து எறிந்தாள். தீராத பாவம் செய்தவர்கள் இத்தலத்திற்கு வந்து வழிபட்டு மனம் திருந்தி செல்லலாம்.
|