திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் , அருணகிரிநாதர்
தேவாரபதிகம் முன்னைச் செய்வினை இம்மையில் வந்து மூடுமாதலின் முன்னமே என்னை நீதியக் காதெழுமட நெஞ்சமே யெந்தை தந்தையூர் அன்னச் சேவலோடு ஊடிப் பேடைகள் கூடிச் சேரும் அணிபொழில் புன்னைக் கன்னி கழிக்கண் நாறும் புறம்பயந் தொழப் போதுமே.
-சுந்தரர்
தேவார பாடல் பெற்ற காவிரி வடகரை தலங்களில் இது 46வது தலம்.
திருவிழா:
மாசிமகத்தில் 10 நாட்கள் உற்சவம், சிவராத்திரி, மார்கழி திருவாதிரை, ஐப்பசி அன்னாபிஷேகம்.
தல சிறப்பு:
இங்கு சிவன் சுயம்புமூர்த்தியாக அருள்பாலிக்கிறார். இத்தலத்திலுள்ள பிரளயங்காத்த விநாயகருக்கு விநாயகசதுர்த்தியன்று தேன் அபிஷேகம் செய்யப்படுகிறது. அபிஷேகம் செய்யப்படும் தேன் வெளிவராது. மற்ற நாள்களில் திருமுழுக்கு இல்லை.இக்கோயில் சோழர்களால் கட்டப்பட்டது. சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 46 வது தேவாரத்தலம் ஆகும். கி.பி. 800இல் ஆதித்த சோழன் கற்றளியாக மாற்றியதாக வரலாறு.
திறக்கும் நேரம்:
காலை 6 மணி முதல் 1 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.
முகவரி:
அருள்மிகு சாட்சிநாதேஸ்வரர் திருக்கோயில்,
திருப்புறம்பியம் அஞ்சல் -612 303.
கும்பகோணம், தஞ்சாவூர் மாவட்டம்.
இக்கோவில் மதுரை திருஞானசம்பந்தர் சுவாமிகள் ஆதீனத்திற்கு சொந்தமானது.
பிரார்த்தனை
திருமண வரம் வேண்டியும், குழந்தைச்செல்வம் வேண்டியும், கல்வி, கேள்விகளில்சிறந்து விளங்கவும் இங்குள்ள இறைவனிடம் பிரார்த்தனை செய்கின்றனர்.
நேர்த்திக்கடன்:
பிரார்த்தனை நிறைவேறியதும் இறைவனுக்கு அபிஷேகம் செய்தும், புது வஸ்திரம் சாத்தியும் நேர்த்திக்கடன் செய்கின்றனர்.
தலபெருமை:
இத்தலத்திலுள்ள பிரளயங்காத்த விநாயகருக்கு விநாயகசதுர்த்தியன்று தேன் அபிஷேகம் செய்யப்படுகிறது. அபிஷேகம் செய்யப்படும் தேன் வெளிவராது. மற்ற நாள்களில் திருமுழுக்கு இல்லை. தெட்சிணாமூர்த்திக்குரிய 24 முக்கியத் தலங்களுள் இத்தலமும் ஒன்றாகும். அகத்தியர், பிரமன், சனகாதி நால்வர், விசுவாமித்திரர் முதலியோர் வழிபட்ட தலம்.
அரித்துவசன் என்னும் அரசனுக்குத் துர்வாச முனிவர் சாபத்தால் ஏற்பட்ட முயலக நோய் நீங்கிய தலம். கோவிலுக்கு விறகு கொண்டுவந்த ஒரு ஏழைக்கு இறைவன் தெட்சிணாமூர்த்தி ரூபமாகத் தரிசனம் கொடுத்தார். கோவிலின் கிழக்கேயுள்ள குளக்கரையில் இத்தெட்சிணாமூர்த்தியுள்ளார். கிழக்கு நோக்கிய கோபுரவாயில், முதற்பிரகாரத்தில் நால்வர், அகத்தியர், புலஸ்தியர், சனகர், சனந்தனர், விசுவாமித்திரர் முதலியோர் வழிபட்ட லிங்கங்கள், முதலியவை உள்ளன.
இரண்டாவது பிரகாரத்தில் அம்பாள் கோயில் உள்ளது. குளத்தின் தென்கரையில் தெட்சிணாமூர்த்தி கோயில் உள்ளது. இதற்கு மேலே சட்டைநாதர் சன்னதி உள்ளது. தலவிநாயகர் - பிரளயங் காத்த பிள்ளையார் - வெண்ணிறத் திருமேனி. தலபுராணமும், உலாநூலும் உள்ளனவாகத் தெரிந்தாலும் அச்சிடப்பட்டுக் கிடைக்கவில்லை. திருவையாறு வித்வான் வை. சுந்தரேசவாண்டையார் அச்சிட்டுள்ள "புறம்பயமாலை' என்னும் நூலில் 10 பாடல்களே கிடைத்துள்ளதாகத் தெரிகிறது.
தல வரலாறு:
பிரளயத்திற்கு புறம்பாய் இருந்தனமயால் (புறம்பு - அயம்) திருப்புறம்பயம் என்ற பெயர் பெற்றது. வேறு பெயர்கள் :- கல்யாண மாநகர், புன்னாகவனம் என்பன. பிரளய வெள்ளம் வந்தபோது புறம்பாய் இருந்தமையால் புறம்பயம் என்று பெயர். இரத்தினவல்லி என்னும் ஒரு வணிக குலத்துக் கன்னிப் பெண் தனக்கென்று உறுதிசெய்யப் பெற்றிருந்த கணவனுடன் திருமணமாகுமுன் இவ்வூருக்கு வந்தாள். அப்பொழுது கணவனை பாம்பு கடித்து இறந்தமையால் அவள் வருந்தியழுதாள்.
அவ்வூருக்கு வந்திருந்த திருஞானசம்பந்தர் திருப்பதிகம் பாடி அவனை எழுப்பியருளி இரத்தினவல்லிக்கு திருமணம் செய்து வித்தார். இறைவன் சான்றாக நின்றருளினார். இதனால் இறைவனுக்கு சாட்சிநாதர் என்று பெயர் பெற்றார். இதற்கு வன்னிமரமும் ஒரு சான்றானது. வன்னிமரம் இரண்டாம் பிரகாரத்தில் உள்ளது, சாட்சி சொன்ன வரலாறு திருவிளையாடற் புராணத்திலும், தலபுராணத்திலும் வருகிறது.
சிறப்பம்சம்:
அதிசயத்தின் அடிப்படையில்:இங்கு சிவன் சுயம்புமூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.
இருப்பிடம் : கும்பகோணம் - திருவையாறு சாலையில், புளியஞ்சேரி சென்று, அங்குச் சாலையில் திருப்பிறம்பியம் என்று வழிகாட்டிப் பலகை உள்ள இடத்தில் அத்திசையில் சென்றால் முதலில் இன்னம்புர் (இன்னம்பர்) வரும் - அடுத்து 3 கி.மீ., சென்றால் திருப்புறம்பயம் உள்ளது.