நம் நாட்டில் புகழ்பெற்ற பல மகான்கள் அவதரித்து நம்முடைய வழிபாட்டு முறைகளையும் ஆசாரங்களையும் அவ்வப்போது சீர்திருத்தம் செய்து வந்திருக்கிறார்கள். ஆனால் நாளாவட்டத்தில் அவர்களுடைய உபதேசங்களின் பயனாக புதுச் சம்பிரதாயங்களும் புது ஜாதிப் பிரிவினைகளும் தோன்றிச் சீர்திருத்தம் அடைவதற்குப் பதில் மக்கள் பல சம்பிரதாயக் குழாங்களாகப் பிரிந்து போயிருக்கிறார்கள். நல்ல எண்ணத்துடன் ஆரம்பிக்கப்பட்ட சீர்திருத்தங்கள் பிரிவினைகளுக்கும், அகங்காரங்களுக்கும், ஒருவரையொருவர் இகழ்வதற்கும், வேற்றுமை பாவம் கொள்வதற்கும் காரணங்களாகிவிட்டன. ஆராய்ந்து பார்த்தால் நம்முடைய சமய வேறுபாடுகளெல்லாம் சீர்த்திருத்த முயற்சிகளிலிருந்தே உண்டாயின என்பதைக் காணலாம்.
பகவான் ராமகிருஷ்ணருடைய உபதேசங்களும், முயற்சிகளும் இந்த தோஷத்தினின்று விலகி நின்கின்றன. எந்த வழிபாட்டு முறையையும் எந்தச் சம்பிரதாய ஆசாரத்தையும் அவர் குற்றம் சொல்லவில்லை. அனைத்திலும் பிரம்மத்தைக் கண்ட அந்த ஞானி, அனைத்திலும் நன்மையையே கண்டார். அவருடைய உபதேசங்களினால் மக்கள் முன்னேற்றம் அடைந்தார்களே யொழிய அவற்றின் பயனாக புதுச் சம்பிரதாயம் ஏதும் நாட்டில் உண்டாகவில்லை.
பூரண ஞானியாயினும் பகவான் ராமகிருஷ்ண மூர்த்தி பூஜை வேண்டாம் என்று சொல்லவில்லை. சமாதிநிலை அடைந்த அத்துவைதியாயினும் சாதாரணமான கோயில் பூஜைக் கிரமங்களையும் மிக மதித்து உபதேசித்து வந்தார். எந்த தெய்வத்தை எந்த முறையில் வழிபடுவதையும் அவர் சரிசமானமாகக் கண்டார்; கண்டு அதற்கிணங்க உபதேசித்தும் வந்தார்.
ஹிந்து சம்பிரதாயத்தில் உயர்ந்த வேதாந்தமும், கூடவே பலவித கிரியைகளும் திருவிழாக்களும் மந்திர தந்திர முறைகளும் இருந்து வருவதற்க் காரணம் அவர் ஒரு சமயம் எடுத்துச் சொன்னார். நெல்லில் முக்கியமான பொருள் அதனுள் இருக்கும் அரிசியே. அரிசியை மூடிக்கொண்டிருக்கும் உமியைக் குத்தி எடுத்துவிட்டுத்தான் அரிசியை உணவாகப் பயன்படுத்திக் கொள்ளுகிறோம். ஆனால் மகனே அரிசி நாள்பட நிற்காது; கெட்டுப் போகும். நெல்லாக வைத்தால் கெடாமல் நிற்கும். அரிசியை வயலில் விதைத்தால் பயிருண்டாகாது. நெல்லை விதைத்தால் தான் முளைக்கும். அரிசிதான் முளைப்பதாயினும் அது உமியால் மூடப்பட்டு நெல்லாக நிலத்தில் பதிந்தால் தான் முளைவிட்டு வளரும். நம்முடைய தர்மத்துக்குக் காப்பாகவும், உயிர்கொண்டு வேர் ஊன்றி வளர்ந்து பயிர் கொடுப்பதற்காகவுமே கிரியைகளும் முறைகளுச் சடங்குகளும், திருவிழாக்களும் நெல்லின் உமிபோல் அமைக்கப்பட்டன. சமைத்து உண்பதற்கு உமி வேண்டியதில்லை. அரிசிதான் வேண்டும் ஞானமடைந்தவனுக்குக் கிரியைகளும், திருவிழாக்களும் கோயில்களும் வேண்டியதில்லை. ஆனால் இவையெல்லாம் இல்லாமல் ஞானம் மட்டும் தனித்து உபதேசிக்கப்பட்டு ஹிந்து தர்ம முறையாக வைக்கப்பட்டிருந்தால் அது வேரூன்றிப் பயிராக விளைந்திராது. வயலில் போட்ட அரிசியைப் போல் முளைவிடாமல் அழிந்து போயிருக்கும்.
உடலில் ஒரு காயம் ஏற்பட்டால் அது ஆறும் வரையில் அதற்குக் காப்பாக மேலே பொருக்குத் தோன்றுகிறது. உள்ளே காயம் இருக்கும் வரையில் பொருக்கு இருக்க வேண்டும். புண் ஆறுவதற்கு முன் பொருக்கை எடுக்கக் கூடாது. புண் ஆறிய பின் தானாகவே அது உலர்ந்து வேறுபட்டுவிடும். ஞானம் அடைந்த பின் சடங்குகளும், ஆசாரங்களும் தாமாகவே கழித்து ஒழிந்துபோம். ஞானம் அடைவதற்கு முன் அவற்றை ஒழிக்கப் பார்ப்பது புண் ஆறுவதற்கு முன் மேற் பொருக்கை எடுத்துப் புண் ஆறுவதைத் தடுப்பது போலாகும்.
ஆசார விதிகளை மதிக்கவேண்டியதில்லை என்று ஞானம் பெற்ற சிலர் எண்ணலாம். ஞானம் உண்மையில் முற்றுவதற்கு முன் ஆசார வழக்கங்களை விட்டு விடப் பார்ப்பது உசிதமல்ல. புகை போட்டுப் பழுக்க வைத்த பழம் நல்ல இனிப்பாக இராது. நன்றாக முற்றி இயற்கையில் பழுத்த சரியான சுவை பெறும்.
ஞானிகளுக்கு ஜாதி வேற்றுமை கிடையாது. ஆனால் ஞானத்தை அடைந்து உண்டாகும் அந்த உரிமையை அவர்கள் எவ்வாறு பயன்படுத்திக்கொள்வார்கள் என்பதற்கு ஒரு கதையை ராமகிருஷ்ணர் சொன்னார்.
கிருஷ்ண கிஷோர் ஒரு சமயம் பிருந்தாவனத்திற்கு யாத்திரை சென்றார். வெகுதூரம் நடந்து தாகம் மேலிட்டு ஒரு தண்ணீர்க் கிணற்றண்டை நின்றார். அங்கே கிணற்றில் குடம் விட்டு ஒருவன் தண்ணீர் இழுத்துக் கொண்டிருந்தான். கொஞ்சம் தாகத்திற்குத் தண்ணீர் வார்ப்பாயா? என்று கிருஷ்ண கிஷோர் அவனை வேண்டிக்கொண்டார். ஐயா நான் பறையன், நீங்களோ பிராம்மணர். நான் எடுத்த ஜலத்தை நீங்கள் குடிக்க முடியாது என்றான். அப்பனே நீ சிவ நாமம் சொல்ல முடியுமா? என்று கேட்டார் கிருஷ்ண கிஷோர். ஆஹா சொல்லுவேன் என்றான் அவன். அப்படியானால் சிவ நாமத்தைச் சொல்லிக்கொண்டே தண்ணீர் இழுத்தாயானால் அந்தத் தண்ணீரை நான் குடிப்பதில் தோஷமில்லை என்றார். அவ்வாறே அவன் தண்ணீர் இழுத்துக் கொடுத்து அவருடைய தாகத்தைத் தீர்த்தான்.
ஹிந்து தர்மத்தின் அடிப்படையான ஞானபக்தி மார்க்கங்களை அனுசரித்து ராமகிருஷ்ணர் எப்படிச் சீர்திருத்தத்தை உபதேசித்தார் என்பது இதில் நன்றாக விளங்குகிறது.
இந்தக் காலத்தில் முக்கிய அம்சங்களைத்தான் ஜனங்கள் வேண்டுகிறார்கள். நீக்கிவிடக்கூடிய அனாவசியமான அம்சங்களை விரும்புவதில்லை. ஆனபடியால் சடங்குகளையும் கிரியைகளையும் குறைத்துக்கொள்வதே நன்று என்றும் காலத்துகேற்றபடி பரமஹம்ஸர் உபதேசிக்கிறார்.
மாவைக் கொஞ்சம் குளிர்ந்த தண்ணீரில் முதலில் கரைத்து, பிறகு வெந்நீரோடு கலந்து கொதிக்கவைத்தால் சரியான கஞ்சியாகும். முதலிலேயே மிகச் சூடான ஜலத்தை விட்டால் மாவு கரையாது; கட்டி தட்டி விடும். ஹிந்து சமுதாயம் மிகப்பெரிய சமுதாயம். அதிகச் சூட்டோடு சீர்திருத்தம் செய்ய முயன்றால் மாவு கட்டி தட்டுவதுபோல், வேறுபட்ட சமயக் குழாங்கள் தோன்றிவிடுகின்றன. சீர்திருத்தத்தின் அவசியத்தை நன்றாகக் கண்டபோதிலும், மிக நிதான முறையை அனுசரித்து உபயோகித்தால் தான் புதுச் சமயங்களும் குழாங்களும் உண்டாகாமல் சீர்திருத்த நோக்கம் வெற்றியடைய முடியும்.