அடக்கம் வேண்டும் அடக்கம் வேண்டும் என்று ஞானம் பெற்றவர்கள் எல்லாம் போதித்து வருகிறார்கள். அடக்கம் சித்திக்கு வழி என்று சாஸ்திரப் பயிற்சி யடைந்தவர்கள் அடக்கத்தை மேற்கொண்டு நடந்து வருகின்றனர். ஆனால் அவ்விதம் கொண்ட அடக்கத்தைக் காட்டிலும், உண்மைக்குப் பயந்து உள்ளத்தில் மெய்யடக்கம் அமைத்துக்கொள்வது மேலானது. அடக்கம் ஒரு சாதனம் மட்டும் அல்ல. உண்மையில் நாமும் நம்முடைய செல்வமோ அறிவோ மற்ற பாக்கியமோ எம்மாத்திரம்? ஒன்றுமில்லை, அஞ்ஞானத்தினின்று விலகினோமானால் உண்மையே அடக்கத்தைத் தரும்.
ஏழை ஒருவனுடைய குமாரன், தான் பணக்காரனுடைய மகன் அல்ல, பரம ஏழை என்று அறிந்து அதற்குத் தக்கவாறு நடந்து கொள்வது உண்மைக்குப் பயந்த அடக்கம். அது புத்திச்சாலித்தனம். வேறு விதம் நடந்து கொள்வது மடமை. அதுபோலவே யாரேனும் சரி, நான் என்ன பதவியிலிருந்தாலும் என்ன ஐசுவரியம் பெற்றிருந்தாலும் அவற்றின் நிலையும் பயனும் உண்மையில் சிறிது என்பதைக் கண்டு அடக்கத்துடன் நடந்துகொள்வது புத்திசாலித்தனம். உண்மையைக் கண்டு அதற்குத் தக்கபடி நடந்து கொள்ளுவது அவசியம். அவ்வளவின்றிப் பிறருடைய பாராட்டுதலுக்காக மாத்திரம் அடக்கம் காட்டிக்கொள்ளுவது உண்மை அடக்கம் அல்ல.
நான் மகா நீசன், பாவி, எனக்கு வழி காட்ட வேண்டும் என்று ஒரு சீடன் தன் குருவைக் கேட்டுக் கொண்டான். குருவுக்குத் தெரிந்தது, இவன் இன்னும் உண்மையைக் காணவில்லை, இம்மாதிரி நடந்து கொள்வது சம்பிரதாயம் என்று எண்ணித்தான் இப்படிப் பேசுகிறான் என்பது. இவனுக்கு ஞானப்பிரகாசம் உண்டாக்கலாம் என்று, சரி நீ போய் உன்னை விட மதிப்பில் குறைந்த பொருள் ஏதேனும் ஒன்றைப் பார்த்துக் கொண்டுவா என்றார் குரு.
அதற்கென்ன வென்று எண்ணிச் சீடன் வெளியே போனான். ஆனால் போய்ப் பார்த்தபோது தென்பட்ட எந்தப் பொருளும் தன்னைவிட மேலானதாகவே கண்டான்.
பரிசுத்தத்திலும் பிறருக்குப் பயன்படுவதிலும் எந்த விதத்திலும் மற்றப் பொருள்களும் ஜீவன்களும் தன்னை விட மேலானவையே என்பதைக் கண்டு ஏங்கினான். எதையேனும் தன்னைவிட மதிப்புக் குறைந்ததாகக் குருவிடம் கொண்டு போய்த் தந்தால் தனக்குப் போதிய அடக்கமில்லை, தன்னைப் பெரிதாக மதித்துக் கொள்கிறான் என்று குரு எண்ணி விடுவார் என்பதாகப் பயந்தான். என்ன செய்வது என்று அவனுக்குத் தோன்றவில்லை.
மறுநாள் காலை வெளியே காட்டில் மல விசர்ஜனம் செய்யும்போது அவனுக்கு ஒரு எண்ணம் உண்டாயிற்று. என் மலம் என்னைவிட நீசமான பொருள் என்பதில் சந்தேகமில்லை. இந்த மலத்தைக் குருவினிடம் கொண்டு போய் இது ஒன்றே என்னைவிடக் கேவலமான பொருள்; மற்ற எல்லாம் என்னைவிட, மேலான பொருள்களே என்று சொல்லுவேன் இப்படித் தீர்மானித்துக் கொண்டான். இப்படி நடந்துகொண்டால் குருவானவர் தன் அடக்கத்தை மிகவும் பாராட்டுவார் என்றும் எண்ணினான். அப்படியே ஒரு ஓட்டாஞ் சல்லி எடுத்துக்கொண்டு தான் கழித்திருந்த மலத்தை எடுக்கப் போனான்.
ஹா ஹா பாவி என்னைத் தீண்டாதே என்று ஒரு குரல் கேட்டது.
மலத்தினின்று ஒரு அசரீரி பேசிற்று. போதும் போதும், நீ எனக்குச் செய்தது. மகா பாவியாகிய நீ என்னை மறுபடி தீண்டாதே; நான் ஒரு காலத்தில் சுத்தமான பழமும் பண்டமுமாக இருந்தேன். தெய்வ நைவேத்தியத்திற்கும் தகுந்ததாக இருந்தேன். பார்த்தவர்கள் வாயில் ஜலம் ஊறும் குணம் பெற்றிருந்தேன். என் துரதிர்ஷ்டவசத்தால் உன்னை அடைந்தேன். நீ என்னை உட்கொண்டாய். உன் உடலில் பிரவேசித்தேபின் இந்த நிலையை அடைந்திருக்கிறேன். முன்னே என்னைக் கண்டவர்கள் என் சுவையினாலும் அழகாலும் மனம் கவரப்பட்டார்கள். இப்போதோ என்னைக் கண்டால் மூக்கைப் பிடித்துக் கொண்டு தூர விலகிப் போகிறார்கள். இது உன்னால் எனக்கு வந்த கதி. உன்னுடைய ஸ்பரீசத்தின் பலன் இது. ஆகா, உன் குணத்தை என்னவென்று சொல்ல தயவு செய்து என்னை மறுபடியும் தீண்ட வேண்டாம். தீண்டுவாயானால் இதை விடக் கேவலமான கதி எனக்கு வந்து சேருமோ என்னவோ, தூரப்போ என்றது.
அப்போது சீடனுக்குத் தன் புன்மை நன்றாக விளங்கிற்று. குருவிடம் சென்று என்னைவிட மதிப்பற்ற பொருள் ஒன்றுமில்லை. நான் கழித்த மலம் கூட என்னை மிகவும் இகழ்கிறது என்றான்.