நியமம், யோகம் முதலிய அப்பியாசங்களின் பயனாகச் சில சித்திகளை அடையலாம். சித்தி என்றால் சாதாரண மக்கள் செய்யமுடியாத காரியங்களைச் செய்யும் வல்லமை, பிரகிருதிக்கு மாறான அற்புத சக்திகள். இத்தகைய சித்திகளைக் கொண்டு பார்ப்பவர் வியக்கும்படியான காரியங்களைச் சில யோகிகள் செய்து காட்டுவது உண்டு. அதைப்பற்றி அவர்களுடைய சீடர்கள் பெரும் பிரசாரம் செய்வது வழக்கம்.
ராமகிருஷ்ண பகவான் இத்தகைய சித்திகளை அடையப் பார்ப்பதும் அவற்றைக் கொண்டு ஜனங்களை வியக்கும்படி செய்வதும் கூடாது என்பார்.
அந்த ஊரில் ஒரு யோகி அற்புத சக்தி அடைந்திருக்கிறார். வந்து பாருங்கள் என்று யாராவது ஒருவரைப் பற்றிச் சொன்னால் அங்கே போகாதீர்கள். அற்புதம் செய்து காட்டும் யோகிகளைத் தரிசனம் செய்து நன்மை அடையலாம் என்று எண்ணி அவர்களைப் பார்க்கப் போகவேண்டாம் என்பார் ராமகிருஷ்ணர்.
யோகிகள் காட்டும் அற்புதங்கள் மோசம் என்று ராமகிருஷ்ணர் சொல்லவில்லை. ஆனால் அது கடவுளைக் காணும் வழியல்ல. அற்புத சக்திகளை அடைவது கடவுளை வழிபடும் முறையல்ல என்பது அவர் உபதேசம்.
இந்த சக்திகள் பிரம்மத்தை அடையச் செய்ய வேண்டிய நேர் மார்க்கத்தில் இருக்கும் முட்புதர்களாகும். அவற்றில் சிக்கிக் கொள்ள வேண்டாம். மந்திரத்தால் வியாதியைச் சொஸ்தப்படுத்துபவர்கள் யோக சக்தியால் கோர்ட்டு வழக்குகளில் வெற்றி சம்பாதிப்பவர்கள், இத்தகைய மாந்திரிகர்கள் கிட்ட நெருங்க வேண்டாம். உண்மையான பக்தர்கள் ஆண்டவன் பாத கமலங்களைத் தவிர வேறு எதையும் அடைய விரும்பமாட்டார்கள். பக்தியினாலும் யோகப் பயிற்சியாலும் நியமம் காப்பதினாலும் சில சக்திகள் உண்டாகும். ஆனால் அவை தம்பாட்டுக்கு உண்டாகும். அவற்றைச் சம்பாதிக்க வேண்டும் என்று உண்மை பக்தர்கள் விரும்பி வருந்தமாட்டார்கள்.
சாப்பிட்டோமானால் மலம், மூத்திரம், வியர்வை உண்டாகிக் கழிப்போம். ஆனால் மலத்தை நோக்கமாக வைத்துக்கொண்டு யாரும் உண்பதில்லை. சித்திகள் அடையலாம் என்று உண்மை பக்தர்கள் பக்தியாவது யோகமாவது செய்யமாட்டார்கள். சித்திகள் மலத்துக்குச் சமம்.
சித்திகள் பெறுவதினால் ஆணவம் வளரும். அதனால் பக்திக்குத் தடையே யொழிய அது பகவானை அடைய சாதனமாகாது. ஆகையால் சித்திகளை யோகத்தின் மலமாக ராமகிருஷ்ணர் பாவித்துச் சொன்னார்.
ராமகிருஷ்ணர் சொன்ன ஒரு கதை: ஒரு யோகி தன் குருவிடம் சென்று, நான் பதினான்கு வருஷங்கள் காட்டில் தனியாக இருந்து தவம் செய்து நீரின் மேல் நடக்கும் சித்தியை அடைந்திருக்கிறேன் என்றானாம். அதைக் கேட்ட குருவானவர் அவனைப் பார்த்து, மகனே ஏன் இவ்வளவு வருத்தப் பட்டாய்? பதினான்கு வருஷங்களையும் வீணாக்கினாயே. ஒன்றரையணா கொடுத்தால் ஓடக்காரன் உன்னை நீரின்மேல் கொண்டுபோய் அக்கரை சேர்ப்பானே. நீ அடைந்த சித்தி ஒன்றரையணா மதிப்புத்தான் என்றார்.
சித்திகளை அடையும் ஆசையைக் கொண்டு யாரும் காலத்தைக் கழிக்கக்கூடாது. பகவான் பாதத்தை அடையவேண்டும் என்று உண்மையான பக்தி செய்யுங்கள். அற்புதங்களைக் காட்டி மக்களை வசீகரிக்கும் யோகிகளிடம் சேரவேண்டாம் என்பது பகவான் ராமகிருஷ்ணரின் உபதேசம்.