பிரபஞ்சத்தின் ஒரு மிகச் சிறு பாகமே நம்முடைய ஆராய்ச்சிக்குள் அடங்கும், ஒரு வரம்புக்கு மேல் எந்த மேதாவியின் மூளையும் செல்லாது. ஆராயவேண்டிய ரகசியமும், ஆராய்ந்து அறியக்கூடிய அறிவும், அறிவு நிலையை அடைவதற்கு இருக்கும் மூலக் கருவியான நம்முடைய மனமும், எல்லாமே விடுவிக்க முடியாத புதிர்கள். ஆகவே நாம் செய்யும் ஆராய்ச்சிகள் எல்லாம் புதிருக்குள் புதிராய்த்தான் முடியும். எல்லாப் பொருள்களும், உயிர்களும் உயிரற்ற பொருள்களும் சேதனங்களும், அசேதனங்களும் ஒரே மூலப் பொருளின் விகாரங்கள். தண்ணீரில் தோன்றும் குமிழிகளும் தண்ணீரும் ஒரே பொருள். தண்ணீரில் தோன்றித் தண்ணீரிலே மிதந்து கொஞ்சம் அசைந்து பிறகு அந்தத் தண்ணீரிலேயே குமிழிகள் மறைந்து லயித்துப் போகின்றன. அந்தக் குமிழிகள் போன்றனவே உயிர்கள், நீரைப் பரம்பொருளாகவும் ஜீவனையும் மற்ற வேறுபட்ட எல்லாப் பொருள்களையும் அந்த நீரில் தோன்றும் குமிழிகளாகவும் வைத்துக் கொள்ளலாம். அனைத்தையும் கடந்த மெய்ப்பொருள் கடவுள், அதுவே சகல உயிர்களில் தோன்றும் கருநிலன், அதிலேயே ஜீவராசிகள் அனைத்தும் லயித்து மறைந்துபோகும்.
கடவுள் தனித்து நிற்கும் பொருள், சேதன உயிர்களும் அசேதனப் பொருள்களும் நீரை விட்டுத் தனித்து நிற்க முடியாத குமிழிகளைப் போன்றவை. அவை தனித்து நிற்க முடியாதவை. காவேரி ஆற்றின் வெள்ளத்தைப் போன்றது மெய்ப் பொருள், காவேரியினின்று ஒரு கை ஜலம் எடுத்து இதுவே காவேரி என்று எண்ணுதல் போன்றது நம்முடைய ஆணவ மயக்கம். சேதனங்களின் வேதாந்த ஆராய்ச்சி யெல்லாம் உப்பினால் செய்யப்பட்ட ஒரு பொம்மை உப்புக் கடலில் மூழ்கிக் கடலின் ஆழத்தைப் பார்ப்பது போன்ற முயற்சியேயாகும். நீரில் மூழ்கியவுடன் உப்புப் பிரதிமை கரைந்து போகிறது. பிற்கு அது என்ன ஆராய்ச்சி செய்ய முடியும்? ஈசனை அளக்கும் ஜீவன் ஈசனில் மூழ்கியதும் ஈசனோடு ஒன்றாகப் போகிறது. பிறகு அது ஈசனின் ஆழத்தை அளப்பது எப்படி? மனிதனுடைய தேகம் ஒரு பானை. பானைக்குள் வேகும் அரிசியும் பருப்பும் தண்ணீரும் போன்றன மனிதனுடைய மூளையும் இந்திரியங்களும், அடுப்பின் மேல் பானை கொதிக்கிறது. பானையைத் தொட்டால் சுடும்; சோற்றில் கை வைத்தால் கை வெந்துபோகும். பானையிலும் சோற்றிலும் உள்ள சூடு உண்மையில் பானையுடையதுமல்ல, சோற்றினுடையதுமல்ல, கீழே உள்ள அடுப்பின் நெருப்பே இவற்றின் சூடாகிறது. அவ்விதமே பிரம்மம் உயிர்களுக்குள்ளும் அசேதனப் பொருள்களுக்குள்ளும் அவற்றின் குண விசேஷங்களாக உருவெடுக்கிறது. மூளையும் புலன்களும் செய்யும் வேலையனைத்தும் பிரம்மத்தின் வேலையை, அதுவின்றி அணுவும் அசையாது.
எந்த சிறு பொருளைத் தீர ஆராய்ச்சி செய்யப்போனாலும் கடவுள் பேரில் மோதுகிறோம். சேலம் ஜில்லாவில் எங்கே கிணறு வெட்டினாலும் ஒரு ஆழத்துக்குமேல் பாறைதான். அந்தப் பாறையைப் போலத்தான் பிரம்மமும் எந்தச் சிறு பொருளாயினும் அடியில் வெட்ட முடியாத அந்தப்பாறை நிற்கிறது.