பதிவு செய்த நாள்
18
ஆக
2015
03:08
மாயையினின்று மீள்வதற்கு வழி என்ன? என்று ஒரு சீடர் ராமகிருஷ்ணரைக் கேட்டார்.
மீள வேண்டும் என்று உண்மையில் விரும்பினால் ஆண்டவனே வழி காட்டுவான். விரும்புவது என்றால் வெறும் வாய்பேச்சில் அல்ல, விடுபடவேண்டும் என்கிற ஆசை மேலிட்டு உள்ளம் கரையவேண்டும். குழந்தைக்காகவும், மனைவிக்காகவும், பணத்துக்காகவும் படிக்கணக்கில் கண்ணீர்விட்டு, அழுகிறோம். ஆனால் ஆண்டவனை அடையவேண்டுமென்று யார் அப்படி அழுகிறார்கள்?
குழந்தை பொம்மைகளை வைத்துக்கொண்டு விளையாடிக்கொண்டிருக்கும் வரையில் தாய் சமையலறையில் வேலை செய்துகொண்டுதானிருப்பாள். விளையாட்டு போதுமாகப் போய், பொம்மைகளை எறிந்து விட்டுக் குழந்தை கத்தி அழுகிறது. உடனே தாயார் தன் வேலையை விட்டுக் குழந்தையண்டை ஓடுகிறாள். ஓடும் அவசரத்தில் சமையல் அறைச் சாமான்கள் உருண்டும் சிதறியும் போகும். அந்த மாதிரியே உள்ளம் உருகி அழும் பக்தனிடம் பகவதி ஓடி வருவாள்.
இந்த கலிகாலத்தில் பெரும் தவம் வேண்டியதில்லை. மூன்று நாள் உண்மையாக விரும்பி தியானித்தால் போதும். மக்கள் ஈசுவரியின் அருளைப்பெறுவார்கள். பொய்யல்ல, மகனே! நீ அவளை அடைய, உண்மையில் தீவிரமாக விரும்பி மூன்று நாள் அழுது பார்! வெற்றி பெறுவாய். பகவதி! எனக்கு நிலையான பக்தியை அருள்வாய். ஐயங்களை விரட்டித் துரத்து, உன்னை நான் எப்போதும் மறக்காமல் பார்த்துக்கொள். என் பாவத்தைத் துடைத்துவிடு! என்று மூன்று நாள் உள்ளம் உருகிப் பிரார்த்தனை செய்து பார். பலனை நிச்சயமாக அடைவாய். பக்தியோடு முறையிட்டால் பயனில்லாமல் போகாது. சந்தேகம் ஏன்? என்னைப்பார், பார்த்து தைரியமடைவாயாக! என்று சொன்னார் பகவான் ராமகிருஷ்ண பரமஹம்ஸர்.
அம்மா! எனக்குப் பசி வந்தவுடனே எழுப்பி விடு என்கிறது குழந்தை. குழந்தாய், பசிவந்தால் அதுவே உன்னை எழுப்பிவிடும். என்கிறாள் தாயார். ஆண்டவனை அடையவேண்டும் என்கிற பசி ஏற்பட்டால் யாரும் தட்டி எழுப்பவேண்டியதில்லை. வழியும் சொல்லிக் காட்டவேண்டியதில்லை.
தெருக்கூத்துகளில் இதை நன்றாக எடுத்துக் காட்டுகிறார்கள். முதலில் மத்தளங்கள் அடித்துப் பேர் இரைச்சல் கிளப்பி, கிருஷ்ணா! கிருஷ்ணா! என்று பலமாகக் கத்திச் சிலர் பாடுவார்கள். ஆனால் கிருஷ்ண வேஷம் தரித்தவன் தன்பாட்டுக்குத் திரைக்குப் பின் ஏதோ பேசிக்கொண்டும், சாப்பிட்டுக்கொண்டும் கவனியாமல் இருப்பான். பிறகு இரைச்சல் எல்லாம் நின்று போய் நாரதர் வீணை மீட்டி மெல்லிய குரலில் பாடி, கிருஷ்ணா! வா! என்பார். உடனே கண்ணன் துள்ளி எழுந்து அரங்கமேடையில் வந்து நிற்பான்.
வேஷமும் ஆரவாரமும் பயனில்லை. உண்மை பக்தர்களிடம்தான் ஆண்டவனுக்கு அபார அன்பு. இதைப் பாமரர்களும் உணரும்படி இந்தத் தெருக்கூத்து நன்றாக எடுத்துக் காட்டுகிறது.
பகவானே! ஆண்டவனே! என்று வாயினால் சொல்லும் பிரார்த்தனை செல்லாது. உள்ளம் கரைந்தால் பேச்சு அடங்கிப்போம். உண்மையாக பக்தன் அழும்போது ஈசுவரி கவனியாமல் இருக்கமுடியாது. ஓடிவந்து நின்று அருள்புரிவாள்.
பொன்னாசாரியின் மனைவி: ராமகிருஷ்ணரிடம் இருந்து வந்த சீடர் ஒருவருக்கு சர்க்கார் உத்தியோகம் ஆயிற்று, சம்பளம் பெற்றுக்கொண்டு வேலை செய்வது சரியா, என்கிற கேள்வி பிறந்தது. ராமகிருஷ்ணர், சொன்னதாவது; அப்பனே, உன் தாயாரை சம்ரக்ஷிப்பதற்காக நீ உத்தியோகம் ஒப்புக்கொண்டாய். நீ செய்தது சரியே ஆகும். இந்த அவசியம் இல்லாதிருந்தால் இது பெரும் தவறாயிருக்கும். வேலை ஒப்புக்கொண்டு பகவானுடைய பணிசெய்து வா என்றார்.
பணமும் அதிகாரமும் சம்பாதித்தவர்கள் அவற்றைப் பற்றி அகம்பாவம் அடைந்து விடுகிறார்கள். சமுதாயத்தில் எல்லோரும் அவர்களை மிக மதிக்கிறார்கள். ஆனால் இவையெல்லாம் எத்தனை நாள்? உலகத்தைவிட்டுப் போகும்போது இவற்றில் எதுவும் கூட வராது. பணத்தைப்பற்றி ஒருவன் பெருமைப்படுவதற்கு என்ன இருக்கிறது? நான் பணக்காரன் என்று ஒருவன் எண்ணுகிறான். எத்தனையோ பேர் அவனைவிட அதிகப் பணக்காரர்கள் இருக்கிறார்கள் என்பதை அவன் மறந்து விடுகிறான். அவர்கள் முன் இவன் ஒரு பிச்சைக்காரன் தான்.
இருட்டினதும் மின்மினிப் பூச்சிகள் கிளம்புகின்றன. அந்தப் பூச்சிகள் நினைக்கலாம்; ஆகா, நாம் உலகத்துக் கெல்லாம் ஒளி வீசுகிறோம். நமக்குச் சமானம் யார்! என்று, பிறகு கொஞ்ச நேரம் கழிந்ததும் ஆகாயத்தில் நட்சத்திரங்கள் பிரகாசிக்க ஆரம்பிக்கின்றன. அதைக் கண்டதும் மின்மினிப் பூச்சிக்குக் கொஞ்சம் அடக்கம் ஏற்படுகிறது.
ஓகோ! எங்களைவிட அதோ ஆகாயத்திலிருக்கும் அந்த விண்மீன்கள் மிகப் பிரகாசமாக இருக்கின்றனவே? நம்முடைய பெருமையைப் பற்றி இனி அடக்கம் கொள்ள வேண்டும் என்று எண்ணுகின்றன. பிறகு சந்திரன் பூரண வட்டமாக உதயமாகிறான். அட, அடா! என்று நட்சத்திரங்கள் வாடி ஒளி மங்கிப் போகின்றன. சந்திரன் மிகப் பெருமையோடு பிரகாசிக்கிறான். எனக்குச் சமானம் யார்? பூமியெல்லாம் நிலா நிரம்பிப் பிரகாசிக்கச் செய்கிறேன் என்றெல்லாம் நினைத்து, திங்கள் கர்வம் கொள்கிறது.
திடீர் என்று கிழக்கில் வானம் வெளுக்கிறது; சூரியன் கிளம்புகிறான். சந்திரன் இப்போது எங்கே? பணக்காரர்களே, இவற்றையெல்லாம் பார்த்து அடக்கம் பெறுங்கள் என்கிறார் ராமகிருஷ்ணர்.
பாலத்தின் கீழே தண்ணீர் ஓடுகிறது; தேங்கித் துர் நாற்றம் அடிப்பதில்லை. அதைப்போல் பணத்தைக் கையாளுங்கள். பணத்தைத் தேக்கி அசுத்த மடைந்து நாற்றம் எடுக்க விடாதீர்கள். தாராளமாக ஓடவிட்டு நலன் செய்யுங்கள். பணத்தை உங்கள் சேவகனாக அமைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் அதன் அடிமையாகி விடாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.
பொன்னாசாரியின் மனைவியைப் பாருங்கள்! ஒரு கையால் உரலுக்குள் நெல்லைத் தள்ளிக்கொண்டிருக்கிறாள். மற்றொரு கையைக்கொண்டு குழந்தையை மடியில் வைத்துத் தட்டிக்கொண்டிருக்கிறாள். கூடவே அவல் வாங்க வந்தவனிடம் பேரமும் பேசிக்கொண்டிருக்கிறாள். இப்படிப் பல விஷயங்களில் கவனம் செலுத்திக் கொண்டிருந்தும் உரலில் தன் கைவிரல்கள் சிக்கிக் கொள்ளாமலும் பார்த்துக் கொள்ளுகிறாள்! அதைப் போல் உலக வாழ்க்கையில் இருந்தாலும் நெறி தவறாமல் ஆண்டவனை எப்போதும் நினைவில் வைத்துக் கொண்டே எல்லாக் காரியங்களும் செய்யுங்கள்!
கம்பத்தைப் பிடித்துக் கொண்டு பையன் கிரு கிருவென்று சுழன்று சுற்றுகிறான். எத்தனை வேகமாகச் சுழன்றாலும் கம்பத்தைப் பத்திரமாகப் பிடித்துக் கொண்டு சுழல்கிறான். அதைப்போல் பகவானைப் பத்திரமாகப் பிடித்துக்கொண்டு உலக வாழ்க்கையில் சுழலுங்கள்.
கிராமத்தில் பெண்கள் தலைமேல் தண்ணீர்க் குடம் வைத்துக்கொண்டு செல்வதைப் பாருங்கள். பெரிய குடத்துக்கு மேல் சின்னக் குடம், அதற்கு மேல் அதை விடச் சிறிய பாத்திரம், எல்லாவற்றிலும் ஜலம் நிறைந்திருந்தாலும் ஒரு சொட்டு, நீர் கீழே சிந்தாமல் நடந்து போகிறார்கள். வழியில் குடும்ப யோக க்ஷேம மெல்லாம் பேசிக்கொண்டும் போகிறார்கள். இப்படியே நீங்கள் உலகத்தில் வாழ்க்கை நடத்தவேண்டும். எந்த சந்தர்ப்பத்திலும் நெறி தவறிய காரியம் செய்யக்கூடாது.
எல்லாம் ஆண்டவனுக்காகச் செய்கிறேன். என்று மனதை நிலையில் நிறுத்தி எல்லாக் காரியங்களையும் செய்தால் தவறு ஏற்படாது. இதுவே கர்மயோகம், இதுவே பக்தி யோகமும் ஆகும்.
பலாப்பழம் அறுக்கும்போது கைக்கு எண்ணெய் தடவிக்கொண்டு பிறகு அறுக்கிறோம். அப்படிச் செய்தால் பலாப்பிசின் கையில் ஒட்டாமலிருக்கும். பழம் சரியாக அறுத்துச் சுளை எடுக்க முடியும். அவ்வாறே பகவானிடம் பக்தி செய்து மனதை ஸ்திரப்படுத்திக் கொண்டே உலக வாழ்க்கை நடத்த வேண்டும். அப்படிச் செய்தால் எவ்வளவு பணமும் சுகங்களும் கண்டாலும் உலகப்பற்றாகிய பிசின் ஒட்டாது. கஷ்டங்கள் ஏற்பட்டாலும் மனம் உடையாது.